இந்தியா & பாகிஸ்தானை இப்போதும் உன்னிப்பாக கண்காணிக்கிறோம்.. அமெரிக்கா சொன்ன வார்த்தை! ஏன் முக்கியம்?
வாஷிங்டன்: இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் பதற்றமான சூழல் நிலவியது. சில நாட்கள் வரை மோதல் தொடர்ந்த நிலையில், அதன் பிறகே மோதல் முடிவுக்கு வந்தது. இதற்கிடையே இப்போதும் கூட இந்தியா பாகிஸ்தான் இடையே இருக்கும் சூழலை ஒவ்வொரு நாளும் கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியிருப்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. அப்போது பாகிஸ்தான் மீது இந்தியா ஆபர்ஷேன் சிந்தூரை நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டன. சில நாட்கள் வரை இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. அதன் பிறகே மோதல் முடிவுக்கு வந்தது.

டிரம்ப்
இந்த மோதலை நான்தான் முடிவுக்குக் கொண்டு வந்தேன் என டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். பிரதமர் மோடி உட்பட நமது தலைவர்கள் பலரும் இதில் வெளிநாட்டுத் தலைவர்களுக்குத் தொடர்பில்லை என்பதைத் திட்டவட்டமாகப் பல முறை சொல்லிவிட்டனர். ஆனாலும், டிரம்ப் தொடர்ச்சியாக இதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் இப்போது இந்தியா பாகிஸ்தான் குறித்து சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே என்ன சூழல் நிலவுகிறது என்பதை இப்போதும் கூட அமெரிக்கா ஒவ்வொரு நாளும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் எளிதில் முடிவுக்கு வந்துவிட வாய்ப்பிருப்பதாலும் தொடர்ந்து அதை நிலைநிறுத்துவது கடினம் என்பதாலும் இந்த கண்காணிப்பு அவசியமாவதாக அவர் கூறியிருக்கிறார்.
கவனிக்கும் அமெரிக்கா
இது தொடர்பாக ரூபியோ மேலும் கூறுகையில், "இரு தரப்பினரும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டால் மட்டுமே போர் நிறுத்தம் அமலுக்கு வரும். ஆனால் ரஷ்யா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், போர் நிறுத்தங்கள் நிலைத்திருப்பது மிகவும் கடினம். இதன் காரணமாகவே ஒவ்வொரு நாளும் பாகிஸ்தான்-இந்தியா, கம்போடியா-தாய்லாந்து இடையே என்ன நடக்கிறது என்பதை நாங்கள் உற்றுக் கவனித்து வருகிறோம்.
குறிப்பாக (உக்ரைன் போரை போல) 3.5 ஆண்டுகளாகப் போர் நடக்கும்போது, அவை நிலைத்திருப்பது கடினம். சீக்கிரம் மோதல் தொடங்கிவிடும். இதனாலேயே நாங்கள் தற்காலிகப் போர் நிறுத்தத்தை நோக்கிச் செல்லவில்லை. நிகழ்காலத்திலும் சரி எதிர்காலத்திலும் சரி போர் இல்லாத ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தத்தையே நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.
அமைதியை ஏற்படுத்த முயற்சி
அதேபோல அமெரிக்கச் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த மற்றொரு பேட்டியிலும் இந்தியா- பாகிஸ்தான் மோதலை ரூபியோ குறிப்பிட்டார். இது தொடர்பாக ரூபியோ மேலும் கூறுகையில், "உலக நாடுகளிடையே சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் எனச் செயல்பட்டு வரும் ஒரு அதிபரை நாம் பெற்றிருப்பது அதிர்ஷ்டம். கம்போடியா-தாய்லாந்து, இந்தியா-பாகிஸ்தான், ருவாண்டா-டிஆர்சி போன்ற இடங்களில் இதை நாம் பார்த்திருக்கிறோம். சர்வதேச அளவில் அமைதியை ஏற்படுத்தத் தொடர்ந்து முயல்வோம்" என்றார்.
இந்தியா பாகிஸ்தான்
இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் முடிவுக்கு வந்தாலும் கூட இன்னும் இரு தரப்பு உறவு நார்மலாகவில்லை. பாகிஸ்தான் தொடர்ச்சியாகத் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதால் இந்தியாவுக்குப் பிரச்சனை இருக்கிறது. இதன் காரணமாகவே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது உட்பட பாகிஸ்தானுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications