சுற்றி வளைக்கும் அமெரிக்க போர்க்கப்பல்கள்! 10,000 வீரர்கள்! ஈரான் கழுத்தை சத்தமின்றி நெரித்த டிரம்ப்
வாஷிங்டன்: மத்திய கிழக்கில் ஈரானுடனான மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா அங்கு தனது ராணுவ பலத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் குவித்து வருகிறது. 2003-ம் ஆண்டு நடைபெற்ற ஈராக் போருக்குப் பிறகு, தற்போது நடைபெற்று வரும் இந்த ராணுவ முன்னெடுப்புதான் அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படைக் குவிப்பு என்று பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இது ஈரான் மீதான ஒரு முழு வீச்சிலான போருக்கான தயாரிப்பாகவே பார்க்கப்படுகிறது.

மூன்றாவது போர்க்கப்பல் வருகை
ஈரான் கடல் எல்லைகளுக்கு அருகே ஏற்கெனவே இரண்டு அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் நிலைகொண்டுள்ள நிலையில், தற்போது மூன்றாவது போர்க்கப்பலான 'யு.எஸ்.எஸ். ஜார்ஜ் எச்.டபுள்யூ. புஷ்' (USS George H.W. Bush) அங்கு விரைந்து கொண்டிருக்கிறது. இதனுடன் மூன்று நவீன நாசகார கப்பல்களும் (Destroyers) இணைந்து பயணிப்பதாக 'பைனான்சியல் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஒரு நகர்வின் மூலம் மட்டும் சுமார் 5,000 கூடுதல் வீரர்கள் அப்பகுதிக்கு வரவுள்ளனர். இது ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் உடனடி தாக்குதல் நடத்தும் திறனை (Combat Readiness) பலமடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தரைப்படை மற்றும் வான்வழித் தயார்நிலை
கடற்படை மட்டுமின்றி, ஈரான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் தரைப்படை மற்றும் வான்வழித் தாக்குதலுக்கான ஏற்பாடுகளையும் பென்டகன் தீவிரப்படுத்தியுள்ளது. 82-வது ஏர்போர்ன் டிவிஷன் மற்றும் கடற்படைப் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 10,000 தரைப்படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 'யு.எஸ்.எஸ். திரிபோலி' (USS Tripoli) மற்றும் 'யு.எஸ்.எஸ். பாக்ஸர்' (USS Boxer) போன்ற நீர்நிலம் இரண்டிலும் பயணிக்கக்கூடிய தாக்குதல் கப்பல்களும் (Amphibious assault ships) அந்தப் பகுதியை நோக்கி அனுப்பப்பட்டுள்ளன. இவை ஏவுகணைத் தாக்குதல்கள் மட்டுமின்றி, தேவைப்பட்டால் ஈரான் மண்ணிற்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்தவும் வழிவகுக்கும் எனத் தெரிகிறது.
டிரம்ப்பின் எச்சரிக்கை: "ஈரானுக்கு எதிரான போர் தயாராக உள்ளது"
தற்போது நிலவி வரும் தற்காலிகப் போர் நிறுத்தத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் நீட்டித்துள்ள போதிலும், அவரது வார்த்தைகளில் அனல் பறக்கிறது. "பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம்" என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக, ஈரானுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானை பணிய வைக்கவே இந்த ராணுவக் குவிப்பு பயன்படுத்தப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி போன்ற முக்கியமான கடல்சார் வணிகப் பாதைகளில் ஈரானின் ஆதிக்கத்தை முற்றிலுமாக முடக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
ஈரானுக்குக் கொடுக்கப்பட்ட இறுதி அவகாசம்
அமெரிக்காவின் இந்த அதிரடி நகர்வுகளுக்குப் பின்னால் ஒரு காலக்கெடுவும் இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. ஈரான் தனது தரப்பு இதில் முடிவுவெடுக்க அமெரிக்கா வெறும் 3 முதல் 5 நாட்கள் மட்டுமே அவகாசம் அளித்துள்ளது. இந்தக் காலக்கெடுவுக்குள் ஈரான் பணியவில்லை என்றால், அமெரிக்காவின் ஏவுகணைகள் ஈரானின் முக்கிய இலக்குகளை நோக்கிப் பாயும் என அஞ்சப்படுகிறது.
கடலில் பதற்றம்: ஈரானின் பதில் நடவடிக்கை
ராணுவக் குவிப்பு ஒருபுறமிருக்க, கடற்பகுதியில் நேரடி மோதல்களும் அரங்கேறி வருகின்றன. ஓமன் அருகே சென்று கொண்டிருந்த ஒரு சரக்குக் கப்பல் மீது ஈரானின் புரட்சிகரக் காவற்படை (IRGC) துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இங்கிலாந்து கடல்சார் வர்த்தக அமைப்பு (UKMTO) தெரிவித்துள்ளது. இதில் அந்தக் கப்பலின் முக்கியப் பகுதிகள் சேதமடைந்தன.
மறுபுறம், சர்வதேச கடல்சார் சட்டங்களை மீறிய ஒரு கப்பலைத் ஈரான் தடுத்து நிறுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இத்தகைய தொடர் மோதல்கள் பாரசீக வளைகுடா பகுதிகளில் போருக்கான சூழலை உறுதிப்படுத்தியுள்ளன.
ஈராக் போருக்குப் பிறகு மத்திய கிழக்கில் அமெரிக்கா எடுத்துள்ள இந்த மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை, ஈரான் மீதான ஒரு பெரும் போராக மாறுமா என்பதை அடுத்த சில நாட்கள் தீர்மானிக்கும்.












Click it and Unblock the Notifications