வங்கதேசத்தை முடிச்சிவிட்ட டிரம்ப்.. நெருக்கடிக்கு நடுவே விழுந்த அடி! என்ன செய்வார் முகமது யூனுஸ்?
வாஷிங்டன்: நம் நாட்டுடன் மோதி வரும் வங்கதேசத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா - வங்கதேசம் கூட்டமைப்பில் செய்யப்படும் பணிகளை நிதி ஒதுக்கீடு செய்வதை நிறுத்துவதாக
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி கடந்த 20ம் தேதி அவர் பதவியேற்றதுமே முக்கிய கோப்பில் கையெழுத்திட்டார். அதாவது அமெரிக்காவில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் உதவிகளை நிறுத்துவது தான் அந்த கோப்பின் சாராம்சம்.

அதாவது உலக வல்லரசாக உள்ள அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளுக்கு உதவிகளை செய்து வருகிறது. பிற நாடுகளின் வளர்ச்சி திட்டம், ராணுவ உதவி, மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை அமெரிக்கா சொந்த செலவில் மேற்கொண்டு வருகிறது.
இதற்காக கடந்த 2023ல் மட்டுமே 5.5 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவியை அமெரிக்கா வழங்கியது. இதனை டொனால்ட் டிரம்ப் விரும்பவில்லை. இதனால் அவர் அந்த நிதி உதவிகளை தற்காலிகமாக 90 நாட்கள் நிறுத்துவதாக அறிவித்தார். இதற்கான கோப்பில் அவர் கையெழுத்திட்ட நிலையில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ முக்கிய சுற்றறிக்கை அனைத்து அமெரிக்க தூதரகங்களுக்கும் அனுப்பி உள்ளார்.
அதில் வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவிகளை, 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனை மறுஆய்வு செய்யும் வரை நிதி வழங்க கூடாது. கூடுதல் நிதி ஒதுக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவில் இஸ்ரேல், எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கு மட்டும் உதவிகள் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. பிற நாடுகளுக்கு இனி அமெரிக்காவின் நிதி உதவி என்பது கிடைக்காது. உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட திட்டங்களுக்காக அமெரிக்கா அளித்து வந்த நிதி உதவி இனி கிடைக்காது.
இதனால் உலகம் முழுவதும் பல கோடி மக்கள் வரை பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் நம்முடன் மோதலை கடைப்பிடித்து வரும் வங்கதேசத்துக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது வங்கதேசத்தின் நிலைமை மோசமாக உள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி இல்லை. ஹசீனா ராஜினாமாவை தொடர்ந்து அங்கு இடைக்கால அரசு தான் உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பொருளாதார நெருக்கடியால் மக்கள் சிரமத்தை எதிர்கொள்ள தொடங்கி உள்ளனர்.
இப்படியான சூழலில் தான் அமெரிக்காவின் உதவியில் வங்கதேசத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID or United States Agency for International Development) சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் - வங்கதேசம் என்ற ஒப்பந்த்தின்படி பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. உங்கள் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். நாட்டில் தற்போதுள்ள அனைத்து ஒப்பந்தங்கள், மானியங்கள் மற்றும் உதவித் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். வெளிநாட்டு உதவிக்கான நிதி ஒதுக்கீட்டை பகுப்பாய்வு செய்யும் நடவடிக்கையின் ஒருபகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு என்பது அதிகாரப்பூர்வமாகவும், எழுத்துபூர்வமாகவும் வந்துள்ளது. இதனால் கூட்டாளிகள் யாரும் இந்த பணியை மறு உத்தரவு வரும் வரை தொடங்க கூடாது. மேலும் உங்களின் பணியை உடனடியாக நிறுத்திவிட்டதற்கான ரிசிப்ட் மற்றும் அக்ரிமெண்டை [email protected] எனும் இ-மெயிலுக்கு அனுப்பி உறுதி செய்ய வேண்டும். அதேபோல் இந்த பணி நிறுத்தம் தொடர்பான உத்தரவுபற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தாலும் இந்த இ-மெயில் முகவரிக்கு அனுப்பி பதில் பெற்று தீர்த்து கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வங்கதேசம் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் சூழலில் அமெரிக்கா நிதி உதவியில் பல உதவிகள் பொதுமக்களுக்கு கிடைத்தன. ஆனால் இப்போது அமெரிக்காவும் வெளிநாடுகளுக்கான நிதி உதவியை நிறுத்தி உள்ளதால் முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச அரசு பெரும் சிக்கலில் சிக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications