“வெல்கம் பேக்”.. 4 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளை மாளிகைக்கு சென்ற டிரம்ப்.. வரவேற்ற ஜோ பைடன்! ஆலோசனை!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார். வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில், அதிபர் ஜோ பைடன், டிரம்புக்கு விருந்து அளித்து கவுரவித்துள்ளார். வரும் ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்க இருக்கிறார் டிரம்ப்.
அமெரிக்காவின் 47வது அதிபராக, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் 47வது அதிபராக வரும் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி வாஷிங்டனில் பதவியேற்க இருக்கிறார். இந்த நிலையில், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்ததோடு வெள்ளை மாளிகையில் வந்து சந்திக்குமாறு அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் புதன்கிழமை, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பும் வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசி உள்ளனர். ஓவல் அலுவலகம் வந்த டிரம்ப்பை, "வெல்கம் பேக்" என வரவேற்றுப் பேசிய ஜோ பைடன், அதிகார மாற்றம் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் நடப்பது உறுதி செய்யப்படும் எனவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என உறுதியளித்தார்.
அதற்கு பதிலளித்த டிரம்ப் அது எவ்வளவு சுமூகமாக நடக்க வேண்டுமோ, அவ்வளவு நன்றாக இருக்கும் எனத் தெரிவித்ததாகவும், அதற்கு ஜோ பைடன் மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் அதிகார மாற்றம் மற்றும் பிற விஷயங்கள் குறித்து தனிப்பட்ட முறையில் விவாதித்ததாகவும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு வந்தடைந்தவுடன் ஜனாதிபதி ஜோ பைடனுடன் அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜோ பைடனின் மனைவியும் கலந்து கொண்டார். ட்ரம்பிற்கு வாழ்த்து தெரிவித்த அவர், டிரம்பின் மனைவிக்கு தனது கையால் எழுதப்பட்ட வாழ்த்துக் கடிதத்தையும் வழங்கினார்.
டிரம்ப், பைடன் இடையேயான இந்தச் சந்திப்பு பதவியில் இருந்து வெளியேறும் அதிபருக்கும், புதிதாக பொறுப்புக் வரவிருக்கும் அதிபருக்கும் இடையே நடக்கும் வழக்கமான நடவடிக்கை. அமெரிக்காவின் ஜனநாயகத்தின் கீழ் அமைதியான அதிகாரப் பரிமாற்றத்தின் தொடக்கமாக குறிப்பிடப்படுகிறது.
ஆனால், கடந்த 2020 ல் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற போது, அதனை டிரம்ப் ஏற்கவில்லை. தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்று டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது வெள்ளை மாளிகையில் இருந்து உடனடியாக டிரம்ப் வெளியேறினார். ஜோ பைடனை சந்திக்கவில்லை. இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெள்ளை மாளிகைக்கு சென்றுள்ளார் டிரம்ப்.












Click it and Unblock the Notifications