டிரம்ப் கொலை முயற்சிக்கு ஈரான் காரணம்? துப்பாக்கி சூடு சம்பவத்தில் பின்னணியில் யார்! பகீர் தகவல்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது மீண்டும் கொலை முயற்சி நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் அவர் காயமின்றி உயிர் தப்பினாலும் கூட, இது உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்தச் சம்பவத்திற்குப் பின்னணியில் ஈரான் இருக்கலாம் எனத் தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்து டிரம்பும் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
ஒட்டுமொத்த அமெரிக்காவையும் உலுக்கும் சம்பவம் இப்போது நடந்துள்ளது. அந்நாட்டின் அதிபரான டிரம்ப் மீது கொலை முயற்சி தாக்குதல் நடந்துள்ளது. அவர் பங்கேற்ற இரவு விருந்தில் உள்ளே புகுந்த மர்ம நபர் அவரை கொலை செய்ய முயன்றுள்ளார். இருப்பினும், சரியான நேரத்தில் அந்த நபரைப் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர்.

ஈரான் தொடர்பு?
ஒரு பக்கம் அமெரிக்கா ஈரான் இடையேயான போர் நிறுத்தத்தில் முழுமையாக உடன்பாடு எட்டப்படவில்லை. அமெரிக்காவைப் பழிவாங்கவே ஈரான் காத்திருக்கிறது. இதனால் டிரம்ப் கொலை முயற்சிக்குப் பின்னணியில் ஈரான் இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக இணையதளங்களில் பகீர் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த தகவலுக்கு டிரம்ப்பே பதிலளித்துள்ளார்.
வாஷிங்டனில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு விருந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திலிருந்து காயமின்றி உயிர் தப்பிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்தத் துப்பாக்கிச் சூடு ஈரான் போருடன் ஏதேனும் தொடர்புடையதா? என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு டிரம்ப், "நான் அப்படி நினைக்கவில்லை" என்று பதிலளித்தார்.
தடுக்காது
தொடர்ந்து பேசிய டிரம்ப், "ஈரான் போரில் வெற்றி பெறுவதிலிருந்து இது என்னைத் தடுத்துவிடாது. இந்தச் சம்பவத்திற்கும் அதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. தற்போது எங்களுக்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், அப்படி இருக்காது என்றே நான் நினைக்கிறேன்.. தன்னிச்சையாகவே அந்த நபர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அந்த நபர் குறித்தும் அவரது நோக்கம் குறித்தும் இப்போது விசாரணை நடந்து வருகிறது.
நடந்தது என்ன?
வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன், சீக்ரெட் சர்வீஸ் மற்றும் நேஷனல் கார்டு அதிகாரிகள் அதிபர் ட்ரம்ப்பை அங்கிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். ட்ரம்ப்புடன் அவரது மனைவி மெலனியா, துணை அதிபர் ஜேடி வான்ஸ், வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோர் இருந்தனர். அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
அமெரிக்கா - ஈரான் போர்
அமைதிப் பேச்சுவார்த்தைக்காக ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் பாகிஸ்தான் செல்லவிருந்த பயணத்தை அதிபர் ட்ரம்ப் திடீரென ரத்து செய்துள்ளார். இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், "எதற்கும் உதவாத ஒரு பேச்சுவார்த்தைக்காக எங்களது குழுவினர் 18 மணிநேரம் விமானத்தில் பயணிக்க விரும்பவில்லை. ஈரான் கொடுத்த முதல் அறிக்கை திருப்திகரமாக இல்லை. ஆனால், நான் பயணத்தை ரத்து செய்த 10 நிமிடங்களிலேயே அவர்கள் ஒரு புதிய அறிக்கையைத் தந்துள்ளனர், அது முன்பை விடச் சிறப்பாக இருக்கிறது" என்றார்.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி முகாமிட்டிருந்த சூழலில், அமெரிக்கக் குழுவின் பயணம் ரத்து செய்யப்பட்டது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. எல்லா அதிகாரமும் தங்களிடம்தான் உள்ளது என்று கூறியுள்ள ட்ரம்ப், ஈரான் எப்போது வேண்டுமானாலும் தங்களைத் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.














Click it and Unblock the Notifications