அதிபர் தேர்தல் நவ. மாதம் தான்.. ஆனால் அமெரிக்க மக்கள் இப்போதே வாக்களிக்கலாம்! அது எப்படி தெரியுமா
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ், டிரம்ப் போட்டியிடும் நிலையில், அங்குப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு வரும் நவ. மாதம் தான் தேர்தல் நடக்கிறது என்ற போதிலும் மக்கள் முன்கூட்டியே வாக்களிக்கலாம். இதை அங்கு early voting என்கிறார்கள். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவ. மாதம் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 1.5 மாதங்களுக்கு மேல் இருக்கிறது. ஆனாலும், இப்போதே அமெரிக்காவில் பல பகுதிகளில் வாழும் மக்கள் வாக்களிக்கலாம். இதற்குப் பெயர் தான் early voting.

முன்கூட்டியே வாக்களிக்கும் முறை: இந்த early voting வாய்ப்பை பயன்படுத்திப் பல பகுதிகளில் உள்ள அமெரிக்கர்கள் முன்கூட்டியே வாக்களிக்கலாம். மின்னசோட்டா, தெற்கு டகோட்டா மற்றும் வெர்ஜீனியாவில் இப்போதே நேரில் சென்று வாக்களிக்கலாம். வேறு சில மாகாணங்களில் தபால் மூலம் முன்கூட்டியே வாக்களிக்கும் முறை இருக்கிறது. இந்த இரண்டுமே early voting முறையில் தான் வரும்.
இந்த early voting முறையில் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேர் அமெரிக்காவில் வாக்களிப்பார்கள். டிரம்ப் கூட கடந்த கால தேர்தல்களில் இந்த early voting முறையில் தான் வாக்களித்துள்ளார். அதேநேரம் சமீப காலமாக முன்கூட்டியே வாக்களிக்கும் இந்த முறையில் தான் தேர்தல் முறைகேடுகள் நடப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதனால் முன்கூட்டியே வாக்களிக்கும் முறையை மொத்தமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்துகின்றனர்.
"அந்த" ஒரு சம்பவம்.. எல்லாம் மாறிடுச்சு.. சிக்சர் அடிக்கும் கமலா ஹாரிஸ்.. டிரம்ப் தோல்வி உறுதி?
என்ன காரணம்: அதேநேரம் அமெரிக்காவில் தேர்தல் நாள் என்பது விடுமுறை இல்லை. எனவே, அங்குத் தேர்தலில் வாக்களிக்கச் செல்ல வேண்டும் என்றால் விடுமுறை எடுக்க வேண்டும். இதனால் சம்பளத்தை இழக்க நேரிடும். இதனால் முன்கூட்டியே வாக்களிக்கும் முறை என்பது அமெரிக்க மக்கள் வாக்களிக்கும் உரிமையை வழங்குவதாக சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலை பணிகளைச் சம்பந்தப்பட்ட மாகாண அரசுகளே கவனிக்கும். இதனால் விதிகளும் ஒவ்வொரு மாகாணத்திற்கும் சற்று மாறுபடும். அங்கு 50 மாகாணங்களில் 3ஐ தவிர்த்து மீதமுள்ள 47 மாகாணங்களில் ஏதோ ஒரு வடிவில் முன்கூட்டியே வாக்களிக்கும் முறை இருக்கிறது.
எத்தனை பேர்: பல்வேறு காரணங்களால் ஒவ்வொரு ஆண்டும் முன்கூட்டியே வாக்களிக்கும் முறையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிகபட்சமாக கொரோனா காலத்தில் 2020இல் நடந்த அதிபர் தேர்தலில் சுமார் 10 கோடி பேர் இந்த முறையில் வாக்களித்தனர். இது ஒட்டுமொத்தமாக வாக்களித்தவர்களில் சுமார் 3இல் இரண்டு பங்காகும். அமெரிக்க ராணுவத்தில் இருப்போர், மாற்றுத்திறனாளிகள் இந்த முறையில் தான் அதிகம் வாக்களிப்பார்கள்.
எதிர்ப்பு ஏன்: அமெரிக்காவில் பொதுவாக ஜனநாயக கட்சியினர் முன்கூட்டியே வாக்களிப்பார்கள். அதேநேரம் குடியரசு கட்சியினர் தேர்தல் நாளில் தான் வாக்களிப்பார்கள். வாக்கு எண்ணிக்கையின் முதலில் தேர்தல் நாளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் பிறகு முன்கூட்டியே பதிவான வாக்குகள் எண்ணப்படும். இதனால் முதலில் குடியரசு கட்சி வசம் இருக்கும் மாகாணங்கள் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணத் தொடங்கியதும் ஜனநாயக கட்சி பக்கம் சென்றுவிடும்.
இதன் காரணமாகவே குடியரசு கட்சியினர் இந்த முறையை எதிர்ப்பார்கள். கடந்த 2020 அதிபர் தேர்தலில் கூட டிரம்பை இதைத் தான் குற்றஞ்சாட்டியிருந்தார். தனது வெற்றியைப் பறித்ததாகவும் அவர் கூறியிருந்தார். டிரம்பின் கருத்துகளுக்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்றாலும், அவர் தொடர்ந்து இந்த கருத்துகளைக் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications