டிரம்ப் கொலை முயற்சி.. பின்னணியில் ஈரான்? அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் வார்னிங்.. என்ன தான் நடக்கிறது?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டிரம்ப்பின் உயிருக்கு ஈரானில் இருந்து அச்சுறுத்தல் வருவதாக அவரது பிரச்சார டீம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் தான் தங்களிடம் சொன்னதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
அமெரிக்காவில் வரும் நவ. மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் நிலையில், பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

டிரம்ப்: இதற்கிடையே டிரம்பை கொலை செய்ய ஏற்கனவே இரண்டு முயற்சிகள் நடந்துவிட்டன. முதலில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பென்சில்வேனியாவில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது டீன் ஏஜ் இளைஞர் ஒருவர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிக் குண்டு டிரம்பின் காதை உரசிச் சென்றது. இதில் அவர் காயமடைந்த போதிலும் உயிர் தப்பினார்.
அதேபோல சமீபத்தில் டிரம்பிற்கு சொந்தமான கோல்ப் கிளப்பில் அவரை கொலை செய்யும் நோக்கில் ஒருவர் ஆயுதங்களுடன் நெருங்கியுள்ளார். அவரை சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் முன்கூட்டியே கண்டுபிடித்தால் மோசமான சம்பவம் தவிர்க்கப்பட்டது. ஏற்கனவே இப்படி இரண்டு முறை டிரம்பை குறிவைத்து கொலை முயற்சி நடந்துள்ளது. இந்த இரண்டும் தனி நபர்களின் செயல் என்றும் இதற்குப் பின்னணியில் வேறு யாரும் இல்லை என்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறை கூறியிருந்தது.
ஈரான் அச்சுறுத்தல்: இந்தச் சூழலில் டிரம்பிற்கு உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் அவரை கொள்ள ஈரான் திட்டமிட்டு வருவதாகவும் சீக்ரெட் சர்வீஸ் தங்களிடம் எச்சரித்துள்ளதாக டிரம்பின் பிரச்சார டீம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டிரம்பின் பிரச்சார டீம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அமெரிக்காவைச் சீர்குலைத்து மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியாக டிரம்பை படுகொலை செய்ய ஈரான் திட்டமிட்டு வருவதாகத் தேசிய புலனாய்வு இயக்குநர் அலுவலகம் டிரம்ப்பிடம் எச்சரிக்கை விடுத்தது.
கடந்த சில மாதங்களாக ஈரான் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன என்று உளவுத்துறை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவித்தனர். ட்ரம்பைப் பாதுகாக்கவும், தேர்தல்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும் இப்போது அமெரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக எங்களிடம் சொன்னார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
ஈரான்: அமெரிக்க உள்விவகாரங்களில் தாங்கள் தலையிடுவதில்லை என்று ஈரான் மறுத்திருந்த நிலையில், டிரம்ப் தரப்பு இந்த கருத்தைக் கூறியுள்ளது.. இந்த புதிய குற்றச்சாட்டுகள் குறித்து ஈரான் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. கடந்த 2020இல் அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்த போது தான் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டார். அதற்குப் பதிலடியாக டிரம்பை கொல்ல ஈரான் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் சந்தேகிக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட ஈரான் பல வழிகளில் முயன்று வருவதாக சீக்ரெட் சர்வீஸ் எச்சரிக்கிறது. அதன் ஒரு பகுதியாக டிரம்பின் பிரச்சார தகவல்கள் யுக்திகளைத் திருடிய ஈரான் ஹேக்கர்கள், அதை எதிர்த் தரப்பிற்கு அனுப்பியதாகவும் சீக்ரெட் சர்வீஸ் கூறியுள்ளது. இவை எல்லாம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications