அமெரிக்காவின் எஸ்.வி.பி வங்கி திவால்.. இந்தியாவில் உள்ள வங்கிக்கு ஏற்பட்ட சங்கடம்.. எப்படி தெரியுமா?
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சிலிக்கான் வேலி வங்கி திவால் ஆனதால், மும்பையில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கி தர்ம சங்கடத்தில் சிக்கியுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி திவால் ஆனநிலையில், இந்தியாவின் மும்பையை சேர்ந்த ஒரு கூட்டுறவு வங்கியை இந்த வங்கியோடு இணைத்து வதந்திகள் பரப்பி விடப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இருந்து 13 ஆயிரம் கி.மீட்டர் தொலைவில் உள்ள மும்பையை சேர்ந்த வங்கிக்கும் எஸ்.வி.பி வங்கிக்கும் இருந்த லேசான ஒரு ஒற்றுமையே இந்த வதந்திற்கும் குழப்பத்திற்கும் காரணமாக அமைந்து இருக்கிறது. அது என்ன என்று இங்கே பார்க்கலாம்.
அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று சிலிக்கான் வேலி வங்கி (SVB). கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கி ஸ்டார்ட் அப் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கடன் வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தது.
இந்த வங்கியில் பணம் வைத்திருந்த பெரும்பாலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பணத்தைத் திரும்பப் பெற்றதால் பெரும் நெருக்கடிக்கு இந்த வங்கி தள்ளப்பட்டது.

பங்குகளின் மதிப்பு 60% சரிந்தன
புதிய டெபாசிட்களை இந்த வங்கியால் பெற முடியாமல் போனது. இதனால், புது பங்குகளை வெளியிட்டும், பத்திரங்களை நஷ்டத்திற்கும் விற்றும் நிலைமை சமாளிக்க முயற்சி செய்தது. ஆனாலும் நிலைமை சரியானபாடில்லை. சிலிக்கான் வேலி வங்கியின் இந்த நடவடிக்கை வங்கியை மேலும் மோசமான நிலைக்குத் தள்ளியது. இதனால் வங்கியின் பங்குகளின் மதிப்பு 60% வரை சரிந்தன. இதையடுத்து வங்கிகளை மூட அந்நாட்டு கண்காணிப்பு அமைப்பு உத்தரவிட்டது.

திவால் ஆனதாக அறிவிப்பு
வங்கி திவால் ஆனதாகவும் அறிவிக்கப்பட்டது. வங்கி திவாலானதால் அந்த வங்கியில் முதலீடு செய்தவர்கள் தங்கள் பணத்தை திரும்பப்பெற வங்கி வாசலில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. பல ஐடி நிறுவனங்கள் இந்த வங்கியில் கணக்கை பராமரித்து வந்தது. இதனால், வங்கியின் வீழ்ச்சி ஐடி துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் தரப்பில் கணிக்கப்படுகிறது. சிலிக்கான் வேலி வங்கியை வாங்கும் திட்டத்தில் தான் இருப்பதாக உலக பெரும் பணக்கரரான எலான் மஸ்க் தனது விருப்பத்தை தெரிவித்து இருந்தார்.

மும்பையில் உள்ள வங்கி
அமெரிக்கா மட்டும் இன்றி உலக அளவிலும் கடந்த இரு தினங்களாக சிலிக்கான் வேலி வங்கியை பற்றிய பேச்சுக்கள் அதிகம் காணப்பட்டது. சமூக வலைத்தளங்களில் இது குறித்த செய்திகள் அதிகம் பகிரப்பட்டன. சிலிக்கான் வேலி வங்கி என்ற ஒன்று இதுவரை அறிந்திராத பலரும் கூட வங்கியின் வரலாறுகளை தேடிக்கொண்டு இருந்தனர். இந்த நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சிலிக்கான் வேலி வங்கி திவால் ஆனதால், 13 ஆயிரம் கி.மீட்டர் தொலைவில் இருக்கும் மும்பையில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கி தர்மசங்கடத்தில் சிக்கியுள்ளது. வங்கி திவால் ஆனதால் நிதி சார்ந்த பிரச்சினையில் இந்த வங்கி பாதிக்கப்பட்டு விட்டதோ என நீங்கள் நினைத்து விட வேண்டாம்.

வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
மும்பையில் உள்ள கூட்டுறவு வங்கியின் பெயர் எஸ்.வி.சி. அமெரிக்காவில் திவால் ஆன வங்கியின் பெயர் எஸ்.வி.பி. இரண்டு வங்கிகளுக்கும் இடையே இருக்கும் பெயர் ஒற்றுமையை வைத்து சமூக வலைத்தளங்களிலும் ஏகத்திற்கும் வதந்திகள் பரவத் தொடங்கின. இதனால், மும்பையில் உள்ள கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பதறிப்போன மும்பையில் உள்ள கூட்டுறவு வங்கியான எஸ்.வி.சி வங்கியும் உடனடியாக விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்
அந்த அறிக்கையில், "எஸ்.வி.சி வங்கிக்கும் சிலிக்கான்வேலி வங்கிக்கும் எந்த வகையிலும் தொடர்பு கிடையாது. இரண்டு வங்கிகளுக்கும் இடையே உள்ள பிராண்ட் பெயரை வைத்து பரப்பப்படும் வதந்திகளில் யாரும் கவனம் செலுத்த வேண்டாம் என்று எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து வதந்திகள் பரவினால் சட்ட ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்று வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications