மண்டியிட்ட டிரம்ப்.. இந்தியாவை விட சீனாவுக்கு வரி குறைவு ஏன்? ஜின்பிங்கிடம் US சரணடைந்தது இப்படிதான்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பரம எதிரியான சீனாவுக்கு 100 சதவீதத்துக்கும் அதிகப்படியான வரிகளை விதித்தார். அதன்பிறகு வரி விதிப்பில் இருந்து பின்வாங்கினார். சீனாவுக்கு 30 சதவீத வரி மட்டும் தான் உள்ளது. அதேவேளையில் சீனாவை ஒப்பிடும்போது அமெரிக்காவுக்கு நெருக்கமாக இருந்த நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்துள்ளார் டிரம்ப். இந்நிலையில் தான் சீனாவிடம் அமெரிக்கா பணிந்தது எப்படி? ஜி ஜின்பிங் எப்படி டிரம்பை மண்டியிட வைத்தார் என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு மொத்தம் 50 சதவீத வரியை விதித்துள்ளார். இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு இனி கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது. முதற்கட்டமாக இன்று முதல் 25 சதவீத வரி நடைமுறைக்கு வருகிறது.

அதன்பிறகு ஆகஸ்ட் 28 ம் தேதி முதல் அடுத்தக்கட்டமாக 25 சதவீத வரி அமலுக்கு வர உள்ளது. நம் நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு கடந்த 10 ஆண்டுகளாக மேம்பட்டு இருந்தது. டிரம்ப் மற்றும் மோடி இடையே நல்ல நட்பு இருக்கிறது. ஆனாலும் டிரம்ப் இப்படி 50 சதவீத வரியை போட்டுள்ளார்.
இந்தியாவுக்கு அதிக வரி
இதற்கு முக்கிய காரணம் ரஷ்யாவிடம் இருந்து நாம் கச்சா எண்ணெய் வாங்குவது தான். இதை நிறுத்த டிரம்ப் கூறினார். ஆனால் நம் நாடு நிறுத்தாத நிலையில் 50 சதவீத வரியை விதித்துள்ளது. இந்த 50 சதவீத வரி நடைமுறைக்கு வரும் பட்சத்தில் உலகில் உள்ள அனைத்து நாடுகளை ஒப்பிடும்போது டிரம்ப் இந்தியாவுக்கு தான் அதிக வரி விதித்ததாக அமையும்.
இதுதொடர்பாக இந்தியா - அமெரிக்காவின் உறவை மேம்படுத்துவதில் பணியாற்றிய அமெரிக்காவின் வெளியுறவுத்துறையின் முன்னாள் துணை உதவி செயலாளர் இவான் ஏ பைகன்பாம் வெளியிட்டுள்ள கட்டுரையில், ‛‛ கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியா - அமெரிக்காவின் உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்ட இருநாடுகளின் உறவுகள் சரிவை கண்டுள்ளன. டிரம்ப் இந்தியாவின் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதிப்பதாக அறிவித்துள்ளார்'' என்றார்.
சீனாவுக்கு இந்தியாவை விட குறைவு
இப்போது பலருக்கும் ஒரு கேள்வி எழுந்துள்ளது. அது என்னவென்றால் சீனாவுக்கே டிரம்ப் 30 சதவீத வரி தான் விதித்துள்ளார். ஆனால் இந்தியாவுக்கு 50 சதவீதம் ஏன்? சீனாவை விடவா இந்தியா- அமெரிக்கா உறவு மோசமாக உள்ளது? என்ற கேள்வியும் உதிக்கலாம்.
ஏனென்றால் சீனா, அமெரிக்காவுக்கு பரம எதிரியாக உள்ளது. மேலும் அமெரிக்காவும், சீனாவும் வல்லரசு நாடுகளாக உள்ளன. இருநாடுகள் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. மேலும் அமெரிக்காவின் பொருளாதாரத்தை போல் சீனா வளர்ந்துவிடக்கூடாது என்பதில் டிரம்ப் உறுதியாக உள்ளார்.
இதனால் டொனால்ட் டிரம்ப் தொடக்கம் முதலே சீனாவுக்கு வரிகளை தீட்டினார். 100 சதவீதத்துக்கும் மேலாக வரி போட்டார்.பதிலுக்கு சீனாவும் சளைக்காமல் அமெரிக்காவுக்கு வரியை தீட்டியது. இருநாடுகள் இடையே வர்த்தக போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது. ஆனால் திடீரென்று இருநாடுகள் இடையேயான மோதல் அமைதியானது. பல வரிகளை டிரம்ப் வாபஸ் பெற்றதால் சீனாவுக்கு 30 சதவீத வரி மட்டும் தான் உள்ளது.
வர்த்தக பற்றாக்குறை
இப்படி எதிரும், புதிருமாக உள்ள சீனாவுக்கே 30 சதவீத வரி தான் எனும்போது நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்து இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தக பற்றாக்குறை வெறும் 46 பில்லியன் டாலர் தான். ஆனால் அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக பற்றாக்குறை 295 பில்லியன் டாலராகும்.
அதாவது அமெரிக்கா - சீனா இடையே நடக்கும் வர்த்தகத்தில் அமெரிக்காவை விட சீனா 295 பில்லியன் வரை அதிக வர்த்தகம் செய்கிறது. அதேபோல் ரஷ்யாவின் கச்சா எண்ணெய், நிலக்கரி, கியாஸ் உள்ளிட்டவற்றை நம் நாட்டை விட சீனா தான் அதிகமாக வாங்கி வருகிறது. இப்படி இருந்தும் சீனா மீது டிரம்ப் அதிகப்படியான வரிகளை விதிக்காமல் மண்டியிட்டுள்ளார்.
அரிய கனிம வளங்கள்
இப்படி சீனாவுக்கு டிரம்ப் வரியை குறைத்ததன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதுதான் சீனாவில் உள்ள அரியவகை கனிமங்கள். இதுதொடர்பாக வால் ஸ்ட்ரீட் ஜார்னலில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்க அதிகப்படியான வரியை விதித்ததால் கோபமான சீனா அரியவகை கனிமங்களின் விற்பனையை குறைக்க தொடங்கின.
சீனாவில் இருந்து இந்த கனிமங்கள் அமெரிக்காவுக்கு அதிகமாக ஏற்றுமதியாகிறது. இந்த கனிமங்களை பயன்படுத்தி அமெரிக்கா ஆயுதங்கள் தயாரித்து வருகிறது. டிரம்ப் அதிகப்படியான வரிகளை விதித்த நிலையில் சீனா, அமெரிக்காவுக்கான அரியவகை கனிமங்களின் ஏற்றுமதியை குறைக்க தொடங்கியது. இதனால் அமெரிக்காவின் பாதுகாப்பு துறை சார்ந்த உற்பத்திகளில் சரிவு ஏற்பட்டது.
போர் விமானம் முதல் தோட்டா வரை
குறிப்பாக போர் விமானங்கள், தோட்டாக்கள், ஏவுகணைகள், ட்ரோன்கள், ஹை டெக் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்டவற்றின் தயாரிப்பில் அமெரிக்காவுக்கு சிக்கல் வரும் நிலை உருவானது. இதனால் உஷாரான டிரம்ப் சீனாவுக்கான வரியை குறைத்தது. தற்போது 30 சதவீதம் மட்டுமே சீனாவுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அரியவகை கனிமங்களை வைத்து சீனா, அமெரிக்காவுக்கும், டிரம்புக்கும் செக் வைத்தது தான் என்கின்றனர் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications