'மிக மிக மோசம்..' டெல்டா கொரோனாவை கண்டு அஞ்சும் அமெரிக்கா.. ஆனால் ஒரு வழி உள்ளது.. ஆண்டனி பவுசி
வாஷிங்டன்: அமெரிக்காவில் டெல்டா கொரோனா அதிகரித்துள்ள நிலையில், மூத்த தொற்றுநோய் வல்லுநர் ஆண்டனி பவுசி டெல்டா கொரோனாவை மிக மோசமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பை இதுவரை எந்த ஒரு நாடும் முழுவதுமாக கட்டுப்படுத்தவில்லை. கொரோனா அலை அலையாகத் தாக்குவதால் ஒவ்வொரு நாட்டிலும் மோசமான பாதிப்புகள் ஏற்படுகிறது.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை சமயத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா கொரோனா தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது.

மிகவும் மோசம்
குறிப்பாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் டெல்டா கொரோனா பாதிப்பு தான் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இது குறித்து அமெரிக்காவின் மூத்த தொற்றுநோய் வல்லுநர் ஆண்டனி பவுசி கூறுகையில், "இந்த டெல்டா வகை கொரோனா மிக வேகமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது இந்த வகை கொரோனா மிக மோசமான ஒன்று என்பது நமக்கு மிகவும் தெளிவாகத் தெரிகிறது.

பலன் அளிக்கும் வேக்சின்
கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையாக முயன்று வரும் நமக்கு இது ஒரு கெட்ட செய்தி. அதேநேரம் வேக்சின்கள் அனைத்தும் இந்த டெல்டா கொரோனாவுக்கு எதிராகவும் பலன் அளிக்கிறது. இது ஒரு நல்ல விஷயம். இருப்பினும், சில குறிப்பிட்ட இடங்களிலும் மாகாணங்களிலும் குறைந்த அளவிலேயே வேக்சின் போடும் பணிகள் நடைபெறுகிறது. இது கவலையளிக்கும் செய்தி" என அவர் தெரிவித்தார்.

டெல்டா கொரோனா
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் டெல்டா கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதுவரை வெளியான அனைத்து ஆய்வுகளிலும் ஒருவர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் முழுவதுமாக எடுத்துக் கொண்டால், அது டெல்டா கொரோனாவை கட்டுப்படுத்துவதில் நல்ல பலன் அளிப்பது தெளிவாகத் தெரிகிறது. அமெரிக்கர்கள் முடிந்த வரை விரைவாக வேக்சின் எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆண்டனி பவுசி கடந்த வாரம் மற்றொரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
Recommended Video

அதிபர் பைடன்
அமெரிக்க அதிபராக பைடன் பொறுப்பேற்ற பிறகு, அங்கு வேக்சின் பணிகள் வேகப்படுத்தப்பட்டது. இருப்பினும், கடந்த ஏப்ரல் இறுதி முதலே வேக்சின் செலுத்த மக்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வருகிறது. வேக்சின் குறித்துப் பரவும் பொய்யான தகவல்களே இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், மக்கள் அனைவரும் தைரியமாக வேக்சின் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வேக்சின் எடுத்துக் கொள்பவர்களை ஊக்குவிக்க அனைத்து மாகாணங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் பைடன் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications