இந்தியா மீதான அமெரிக்காவின் 50% வரி.. அடுத்த வாரம் அமல்.. டிரம்பின் வர்த்தக ஆலோசகர் கொடுத்த ஷாக்
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தியாவின் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி நிர்ணயித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்புக்கு சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி ஆகஸ்ட் 27 ஆம் தேதி நிச்சயமாக அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டது. இதில் பல நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்தன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது போர் தொடுத்தனர்.

இந்த தாக்குதலால் ரஷ்யாவுக்கு பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை ஏற்பட்டது. இதையடுத்து பொருளாதாரத்தை சீரமைக்கும் வகையில் கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய தொடங்கியது. மற்ற நாடுகளை ஈர்ப்பதற்காக தள்ளுபடி விலையில் எண்ணெய் கொடுத்தனர்.
இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கின. ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா உள்ளிட்டநாடுகள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை விரும்பவில்லை. ஏற்கனவே அமெரிக்க அதிபரானதில் இருந்து டொனால்ட் டிரம்ப் இந்தியா மற்றும் அந்த நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக இந்தியா மீதான வரியை உயர்த்தினார். ரஷ்யாவிடம், இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நேரடியாக விமர்சித்த டிரம்ப், இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தார். இந்த 25 சதவீதத்துடன் கச்சா எண்ணெய் ரஷ்யாவிடம் இறக்குமதி செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது விதித்தார். இது ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டால் இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரிக்கும். இந்த வரி விதிப்பை குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க வர்த்தகக் குழுவினர் இந்தியா வருவதாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர்.
இதனிடையே அமெரிக்க அதிபரான டிரம்ப், ரஷ்யா, உக்ரைன் அதிபர்களுடன் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையில் கடந்த வாரத்தில் ஈடுபட்டார். இதன் மூலமாக இந்தியாவுக்கான வரி குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதனை மறுக்கும் வகையில், வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு தேவையில்லை. ஆனால், அவர்கள் தங்களுடைய நாட்டின் கச்சா எண்ணெய் சுத்திகரிகரிப்பு நிலையங்களின் லாபத்திற்காக இதனை வாங்குகின்றனர். உக்ரைனில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதில் இந்தியாவுக்கும் பங்குள்ளது.
அதேசமயம், அமெரிக்காவுக்கு அதிகளவிலான பொருள்களை விற்கும் இந்தியா, எங்களிடம் இருந்து எந்தப் பொருளையும் வாங்குவதில்லை. மாறாக சீனா அதிபருடன் நட்பு பாராட்டுகின்றனர். இதனால், இந்தியாவுக்கான இரண்டாம் நிலை வரி விதிப்பு நீட்டிக்கப்படாது. ஆகஸ்ட் 27 ஆம் தேதி நிச்சயமாக வரி விதிப்பு அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications