24 மணி நேரத்திற்குள் அமெரிக்காவை உலுக்கிய 3 தாக்குதல்கள்.. தற்செயலா? இல்லை பயங்கரவாத தாக்குதலா?
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே நாளில் மூன்று மிக மோசமான சம்பவங்கள் நடந்துள்ளது. நியூ ஆர்லியன்ஸ் துப்பாக்கிச் சூடு, லாஸ் வேகாஸ் டெஸ்லா கார் வெடிப்பு, நியூயார்க் துப்பாக்கிச் சூடு என 24 மணி நேரத்திற்குள் மூன்று மோசமான சம்பவங்கள் நடந்துள்ளது. இது தற்செயலாக நடந்த சம்பவங்களா.. இல்லை பயங்கரவாதிகள் சதி செயலா என்பதில் அமெரிக்கர்களிடையே அச்சம் அதிகரித்து வருகிறது.
இந்த 2025 புத்தாண்டு நாள் அமெரிக்காவுக்கு மிக மோசமாக அமைந்துவிட்டது. ஒரே நாளில் அங்கு அடுத்தடுத்து மூன்று சம்பவங்கள் நடந்த நிலையில், அதில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பலர் காயமடைந்தனர்.

முதல் தாக்குதல்:
அதாவது முதல் சம்பவம் அங்குள்ள நியூ ஆர்லியன்ஸ் நடந்தது. அங்கு நியூ ஆர்லியன்ஸின் போர்பன் தெருவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து வந்த போது தான் இந்த பயங்கரமான தாக்குதல் நடந்தது. ஷம்சுத்-தின் ஜப்பார் என்ற நபர் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறார். அவர் வேண்டுமென்றே தனது ஃபோர்டு எஃப்-150 டிரக்கை கொண்டு அங்குத் திரண்டிருந்த மக்கள் மீது மோதினார். இதில் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 35 பேர் காயமடைந்தனர்.
டெஸ்லா கார் வெடிப்பு:
அடுத்து லாஸ் வேகாஸ் நகரில் அமைந்துள்ள உள்ள டிரம்ப் டவர் ஹோட்டலுக்கு டெஸ்லா சைபர்ட்ரக் திடீரென வெடித்துச் சிதறியது. கார் டிரைவர் கொல்லப்பட்ட நிலையில், ஏழு பேர் காயமடைந்தனர். வாகனத்தின் பின்பகுதியில் பட்டாசுகள் மற்றும் எரிபொருள் இருந்த நிலையில், அதுவே வெடித்துச் சிதறியது விசாரணையில் தெரிய வந்தது.
நியூயார்க் துப்பாக்கிச் சூடு:
இந்த இரு சம்பவங்கள் நடந்து சில மணி நேரத்தில் நியூயார்க் நகரில் அமைந்துள்ள அமாசுரா என்ற இரவு விடுதிக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இப்படி ஒரே நேரத்தில் அங்கு அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் அமெரிக்க மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக முதல் இரு சம்பவங்களுக்கு இடையே ஒரு சில ஒற்றுமைகள் உள்ளன. இரு சம்பவத்திலும் வாடகை காரே இருந்துள்ளது.. அதுவும் ஒரே நிறுவனத்தில் இருந்தே அது வாடகைக்கு எடுக்கப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இரு சம்பவங்களுக்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து எஃப்.பி.ஐ விசாரணை செய்து வருகிறது.
பயங்கரவாத செயலா:
மேலும், முதலில் நடந்த யூ ஆர்லியன்ஸின் சம்பவத்தில் அந்த நபர் பயன்படுத்திய காரில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கொடி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் எஃப்.பி.ஐ விசாரணையைத் தொடங்கியுள்ளது.எஃப்.பி.ஐ அமைப்பின் கூட்டுப் பயங்கரவாத டாஸ்க் ஃபோர்ஸ் தான் விசாரணையை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இப்படி 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 தாக்குதல் நடந்துள்ளது அமெரிக்கர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் தற்செயலா அல்லது திட்டமிட்டு பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதலா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அமெரிக்கர்கள் சிலர் இது பயங்கரவாத தாக்குதல் தான் என்றும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். இருப்பினும், ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்த தாக்குதல்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications