நாடு புகுந்து வெனிசுலா அதிபரை சிறை பிடித்த அமெரிக்கா.. டிரம்பின் பிளான் என்ன? 1989 பனாமாவில் நடந்தது இதுதான்
வாஷிங்டன்: வெனிசுலா மீது நள்ளிரவில் அமெரிக்கா பயங்கர தாக்குதல் நடத்தியது. அமெரிக்க போர் விமானங்கள் வெனிசுலா தலைநகர் கசாகஸில் நுழைந்து குண்டு வீசின. வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படையினர் நாடு புகுந்து கைது செய்துள்ளன. ஒரு நாட்டின் அதிபரை அந்த நாட்டுக்குள்ளே நுழைந்து அமெரிக்கா கைது செய்து இருப்பது பெரும் பேசும்பொருளாகி உள்ளது. ஆனால் அமெரிக்காவுக்கு இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 1989ல் பனாமா அதிபர் மானுவேல் அண்டோனியா நோரியேகாவை அமெரிக்கா ஏற்கனவே இப்படி கைது செய்துள்ள நிலையில் அதன்பிறகு நடந்தது பற்றி இங்கு பார்க்கலாம்.

அமெரிக்கா - வெனிசுலா இடையேயான மோதல் வலுத்துள்ளது. இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து கொள்ளவில்லை. இருநாடுகள் இடையே கரீபியன் கடல் உள்ளது. ஆனால் வெனிசுலாவில் இருந்து கடல் வழியாக அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார்.
நிகோலஸ் மதுரோவை கைது செய்ய உதவினால் ரூ.438 கோடியை பரிசுத்தொகையாக உயர்த்தி டிரம்ப் அறிவித்தார். அதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களாக இருநாடுகள் இடையேயான மோதல் என்பது வலுத்து வந்தது. இந்நிலையில் தான் வெனிசுலா மீது தாக்குதல் நடத்தப்படும் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்து இருந்தார்.
அதன்படி வெனிசுலாவின் நேரப்படி நள்ளிரவில் டொனால்ட் டிரம்ப் உத்தரவின் அடிப்படையில் வெனிசுலாவின் தலைநகர் கராகஸை குறிவைத்து அமெரிக்க விமானப்படைகள் தாக்குதல் நடத்தி உள்ளது. 7 இடங்களில் குண்டுகளை வீசிய அமெரிக்க விமானப்படை வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கிளியா ஃபுரோரஸை சிறை பிடித்துள்ளது.
வெனிசுலாவுக்குள் நுழைந்து அமெரிக்க படையினர் அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவை அவரது மனைவியுடன் சேர்த்து கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது மிகவும் அரிதான காரியம். அதோடு பெரிய ரிஸ்க். பெரும்பாலான நாடுகளால் இதனை செய்ய முடியாது. ஆனால் அமெரிக்கா அதனை செய்து காட்டி உள்ளது. மேலும் அமெரிக்காவை எடுத்து கொண்டால் இப்படி செய்வது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 1989ம் ஆண்டில் நடந்துள்ளது.
1989ல் பனாமா அதிபராக செயல்பட்ட ஜெனரல் மானுவேல் அண்டோனியா நோரியேகாவை அமெரிக்கா இப்படியாக சிறை பிடித்துள்ளது. இவர் சர்வாதிகாரியாக செயல்பட்டதோடு, அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வந்தார். இதனால் "ஆபரேஷன் ஜஸ்ட் காஸ்" எனப் பெயரிடப்பட்ட நடவடிக்கையின் படி 1989ம் ஆண்டு டிசம்பர் மாதம் பனாமாவை அமெரிக்க படைகள் தாக்கின.
இவர் அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ வின் உளவாளியாக இருந்து வந்தார் அமெரிக்க உளவுத்துறை தகவல்களைகியூபா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு விற்றார். 1981ல் பனாமாவின் சக்திவாய்ந்த தலைவரான ஒமர் டொரிஜோஸின் மறைவை தொடர்ந்து அதிகாரத்திற்கு வந்தவர் தான் மானுவேல் அண்டோனியா நோரியேகா.
இவர் ராணுவ தலைவராகவும், பனாமாவின் சர்வாதிகாரியாகவும் செயல்பட்டார். அவருடைய ஆட்சிக்காலம் மோசமான ஊழல்கள், அடக்குமுறைகள், மற்றும் வன்முறைகளால் நிறைந்திருந்தது. அதே நேரத்தில் போதைப்பொருள் கடத்தல் மூலமும் அவர் பெரும் பணத்தை சம்பாதித்தார்.
மேலும் தேர்தல்களை ரத்து செய்து அவசர நிலையை அறிவித்ததால் அவருக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. உறவு சீர்க்குலைந்தது. டிசம்பர் 1989ல் பனாமாவின் படைகளால் அமெரிக்க கடற்படை வீரர் கொல்லப்பட்டார். இதனையடுத்து அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் ஹெச். டபிள்யூ. புஷ் பானா மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். "ஆபரேஷன் ஜஸ்ட் காஸ்" என்ற பெயரில் பனாமாவிற்குள் அமெரிக்கா அதிரடி தாக்குதல் நடத்தியது. நூற்றுக்கணக்கான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
மானுவேல் அண்டோனியா நோரியேகா பனாமா சிட்டியில் உள்ள வத்திக்கான் தூதரகத்தில் 10 நாட்கள் தஞ்சமடைந்த நிலையில் அமெரிக்கா காத்திருந்து 1990ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி தூக்கியது. அவர் அமெரிக்க படையிடம் சரணடைந்தது. அடுத்த நாளே அவர் மியாமிக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அமெரிக்க நீதிமன்றங்களில் போதைப்பொருள் கடத்தல், பணமோசடி, நிதி மோசடி போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கியிருந்தார்.
1992இல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கான சிறை தண்டனை குறைக்கப்பட்டது. அமெரிக்காவில் தண்டனை அனுபவித்த பிறகு, அவர் பிரான்சுக்கு நாடு கடத்தப்பட்டார். அதன் பின்னர் பனாமாவுக்கு அவர் திருப்பி அனுப்பப்பட்டார். அங்கு அவர் 2017இல் காலமானார்.
மானுவேல் அண்டோனியா நோரியேகாவை 1990 ஜனவரி 3ம் தேதி அமெரிக்க படைகள் சிறை பிடித்தன. அதேபாணியில் தேதியை கூட மாற்றாமல் ஜனவரி 3ம் தேதியான இன்று வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின்பேரில் அமெரிக்க படைகள் சிறை பிடித்துள்ளன. இதனால் அதிபர் நிகோலஸ் மதுரோவும் நாடு கடத்தப்பட்டு பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிறை தண்டனைக்கு ஆளாகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications