நிலநடுக்கத்தால் 2ஆக பிளந்த கிராமம்..சேதம் அடையாத வீடுகளே இல்லை..ஆனாலும் ஒரு நிம்மதி அளிக்கும் விஷயம்
வாஷிங்டன்: துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அந்த நாடு கடுமையான பேரழிவை எதிர்கொண்டுள்ளது. 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்ட நிலையில் துருக்கியின் தென்பகுதியில் உள்ள ஒரு கிராமமே இரண்டாக நிலநடுக்கத்தால் பிளவு பட்டுள்ளது.
துருக்கியில் கடந்த 6-ந் தேதி அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 7.8 என்ற அளவில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கி- சிரியா எல்லையை ஒட்டி அமைந்துள்ள காசியான்டெப் குலுங்கியது. அதேபோல் துருக்கியின் 11 மாகாணங்களில் பெருத்த சேதம் ஏற்பட்டது. பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் ஆகின. வீடுகளும் இடிந்து விழுந்தன.

2 வாரங்கள் ஆகியும்..
கட்டிட இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கி பெரும் உயிர்சேதம் ஏற்பட்டது. கட்டிட குடியல்களை தோண்ட தோண்ட மனித சடலங்களாக மீட்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. அந்த நாட்டில் நிலநடுக்கத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்து 402 ஆக உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் 2 வாரங்கள் ஆகியும் இன்னமும் கூட மீட்பு பணிகள் நடக்கின்றன. பல இடங்களில் கட்டிட இடிபாடுகள் மலை போல குவிந்து வருகின்றன.

இரண்டாக பிளவு பட்டுள்ள கிராமம்
கடுமையான நிலநடுக்கத்தால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். அங்கு வாட்டி வதைக்கும் குளிருக்கு மத்தியில் மக்கள் வீடுகளை இழந்து பலரும் வீதிகளில் தஞ்சம் அடைந்து கடும் துயரை சந்தித்து வருகின்றனர். துருக்கியின் தென்பகுதியில் உள்ள டெமிர்கோப்ரு என்ற கிராமம் நிலநடுக்கத்தால் இரண்டாக பிளவு பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் அந்த கிராமத்தில் பல வீடுகளும் இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளது. நடைபாதைகள் எல்லாம் உடைந்து சிதறிக்கிடக்கின்றன.

உயிர் பிழைப்போமா? இல்லையோ?
சேதம் அடையாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. எனினும் அதிர்ஷ்டவசமாக இந்த டெமிர்கோப்ரு கிராமத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை சிலருக்கு காயம் மட்டும் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட போது நடந்த நிகழ்வுகளை அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறும் போது, " நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் மேலும் கீழுமாக குலுங்கியது. பலரும் அச்சத்தில் வீடுகளில் இருந்து ஜன்னலை உடைத்துக்கொண்டு வெளியேறினர். நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் போது மக்கள் பாதுகாப்பாக தஞ்சம் அடைவதற்கான பாதுகாப்பான இடம் துருக்கி அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மக்கள் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் கடுமையாக இருந்ததால் அந்த கட்டிடம் கூட விரிசல் விழுந்தது. நாங்கள் உயிர் பிழைப்போமா? இல்லையோ? என்று அச்சத்தில் உறைந்து இருந்தோம்" என்றார்.

பலி 46 ஆயிரத்தை தாண்டியுள்ளது
துருக்கி மற்றும் நிலநடுக்கம் ஆகிய இருநாடுகளையும் சேர்த்து நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டு இருவாரங்கள் நெருங்கி விட்ட நிலையில் துருக்கியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து சுமார் 278 மணி நேரம் கழித்து ஒருவர் நேற்று முன் தினம் உயிருடன் மீட்கப்பட்டது மீட்புக் குழுவினருக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியும் அளித்தது. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications