அமெரிக்க அதிபர் தேர்தல் சமனில் முடிந்தால் என்ன நடக்கும்.. புதிய அதிபர் எப்படி தேர்வு செய்யப்படுவார்?
வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டிரம்ப், கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்தச் சூழலில் ஒருவேலை அதிபர் தேர்தல் முடிவுகள் சமனில் முடிந்தால் என்ன நடக்கும்.. அப்போது அமெரிக்க அதிபர் எப்படித் தேர்வு செய்யப்படுவார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்காவில் இந்த முறை டிரம்ப், கமலா ஹாரிஸ் இடையே போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. அப்போது அதிபர் தேர்தல் சமனில் முடிந்தால் என்ன நடக்கும் என்ற கேள்வி சிலருக்கு வரும். அதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.

அதற்கு முன்பு, அதிபர் தேர்தல் சமனில் முடிய வாய்ப்பு இருக்கிறதா.. இதற்கு முன்பு அப்படி சமனில் முடிந்து இருக்கிறதா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அதிபர் தேர்தல்: அமெரிக்க விதிகளின்படி மக்கள் அதிபர் தேர்தலில் நேரடியாக அதிபருக்கு வாக்களிக்க மாட்டார்கள். மாறாக எலக்டோரல் காலேஜ் மூலமாகவே அதிபர் தேர்வு செய்யப்படுவார். ஒவ்வொரு மாகாணத்திற்கும் அந்த மாகாணத்தின் மக்கள்தொகை அடிப்படையில் எலக்டோரல் வாக்குகள் ஒதுக்கப்பட்டு இருக்கும். அதன்படி நாடு முழுக்க மொத்தம் 538 எலக்டோரல் வாக்குகள் உள்ளனர். அதில் இரு தரப்பும் தலா 269 எலக்டோரல் வாக்குகள் பெற்றால் அதிபர் தேர்தல் சமனில் முடியும்.
இதற்கான வாய்ப்பு குறைவு என்றாலும் இதுபோல நடக்கவே நடக்காது என்று சொல்ல முடியாது. 1800ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் இதுபோல சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறை கூட போட்டி கடுமையாக இருப்பதால் சமனில் முடிய வாய்ப்புகள் உள்ளன.
சமனில் முடிந்தால்: இதற்குக் கமலா ஹாரிஸ் வழக்கமாக ஜனநாயக கட்சி வெல்லும் மாகாணங்களுடன் சேர்த்துத் தாண்டி விஸ்கான்சின், மிச்சிகன், அரிசோனா மற்றும் நெவாடா மாகாணத்தில் வென்று, அதேபோல நெப்ராஸ்காவில் ஒரு எலக்டோரல் வாக்குகளை மட்டும் வெல்ல வேண்டும். அதேநேரம் பென்சில்வேனியா மற்றும் ஜார்ஜியாவில் தோற்க வேண்டும். இதுபோல நடந்தால் அதிபர் தேர்தல் சமனில் முடியும். இதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றாலும் கூட இது நடக்கவே நடக்காது என்று அப்படியே புறந்தள்ளிவிட முடியாது. இதையும் யோசித்தே அங்கு விதிமுறைகளை வகுத்துள்ளனர்.
எலக்டோரல் வாக்குகள் தானே சமனில் முடிந்துள்ளது. அப்போது ஒட்டுமொத்தமாக யாருக்கு அதிக வாக்கு என்பதை வைத்து அதிபர் தேர்வு செய்யப்படுவார் என்றே பலரும் நினைப்பார்கள். ஆனால், அந்நாட்டின் விதி அப்படி இல்லை. எலக்டோரல் வாக்குகள் சமனாகும் போது contingent election என்பது வைக்கப்படும். அதாவது இந்த contingent election முறையில் அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை அதாவது கீழ் சபை உறுப்பினர்கள் இணைந்து அதிபர் யார் என்பதைத் தேர்வு செய்வார்கள். அதேபோல செனட் எனப்படும் மேல் சபை உறுப்பினர்கள் சேர்ந்து துணை அதிபரைத் தேர்வு செய்வார்கள்.
அடுத்து என்ன: இந்த contingent election அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறும். புதிய உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்ற பிறகு இந்தத் தேர்தல் ஜனவரி மாதம் 6ம் தேதி நடைபெறும். அப்போதே வாக்குகள் எண்ணப்பட்டு யார் அதிபர், யார் துணை அதிபர் என்பது தெரிய வரும். அவர்கள் வழக்கம் போல ஜன, 20ம் தேதி அதிபராகப் பதவியேற்பார்கள்.
இதுபோல தேர்தல் நடந்தால் மற்றொரு சுவாரசியம் நடக்கவும் வாய்ப்பு உருவாகும். அதாவது அதிபர் தேர்தலுக்குப் பிறகு வழக்கமாக அதிபர் மற்றும் துணை அதிபர் ஒரே கட்சியில் இருந்தே தேர்வாவார்கள். ஆனால், இந்த contingent election முறையில் இருவரும் ஒவ்வொரு கட்சியில் இருந்து தேர்வாகும் வாய்ப்பு உருவாகும். இதுபோலவும் கடந்த 1800களில் நடந்துள்ளது.
நல்லது இல்லை: அந்த காலத்தில் ஓகே.. ஆனால், இப்போது அமெரிக்காவில் மீண்டும் அதுபோல நடக்க வாய்ப்பு இருக்கா என்ற கேள்விக்கு வல்லுநர்கள், "இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவது உண்மை தான். ஆனால், அதிபர் தேர்தல் சமனில் முடிய வாய்ப்புகள் மிக மிக குறைவு. இதனால் நாட்டில் தேவையில்லாத குழப்பங்கள் உருவாகும்" என்றார்.












Click it and Unblock the Notifications