ஹமாஸ் தாக்குதலுக்கு என்ன காரணம்! பின்னணியில் இந்தியா-மத்திய கிழக்கு பொருளாதார வழித்தடம்? பைடன் பகீர்
வாஷிங்டன்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் தொடரும் நிலையில், இதற்கு இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டம் ஒன்று காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் பைடன் கூறியது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மோதல் 20ஆவது நாளாகத் தொடர்கிறது. கடந்த அக். 7ஆம் தேதி ஹமாஸ் படை இஸ்ரேல் நாட்டில் இறங்கி சரமாரியாகத் தக்குதல் நடத்தியதே இதற்குக் காரணமாகும்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலும் இப்போது தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இதற்கிடையே இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் பைடன் சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர்: அதாவது இந்தியா-மத்திய கிழக்கு- ஐரோப்பா நாடுகளை இணைக்கும் பொருளாதார வழித்தடம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இதுவும் ஹமாஸ் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த பொருளாதார வழித்தடம் மட்டும் அமைந்தால் அது முழு பிராந்தியத்தையும் ரயில், சாலை மற்றும் துறைமுகங்கள் மூலம் இணைக்கும்.
இது தொடர்பாக பைடன் மேலும் கூறுகையில், "ஹமாஸ் தக்குதலுக்கான காரணங்களை ஆய்வு செய்யும் போது எனக்கு அதில் ஒரு விஷயத்தில் உறுதியாக நம்பிக்கை இருக்கிறது. இதற்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை.. இருந்த போதிலும் எனக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்று தோன்றுகிறது.
இஸ்ரேல் பிராந்திய ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது.. ஒட்டுமொத்தமாக அந்த பிராந்தியத்தில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அதை அப்படியே விட்டுவிடுவது சரியான நடைமுறை இல்லை" என்றார்.
என்ன திட்டம்: ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உடன் கூட்டாக செய்தாயளர்களை சந்திக்கும் போது அமெரிக்க அதிபர் பைடன் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். கடந்த செப். மாதம் டெல்லியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டின் போது, இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இணைந்து இந்தியா-மத்திய கிழக்கு- ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை நிறுவப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது இந்தப் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும்.
இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் என்பது இரண்டு தனித்தனி வழித்தடங்களைக் கொண்டிருக்கும். இந்தியாவை மேற்கு ஆசியா/மத்திய கிழக்குடன் இணைக்கும் கிழக்கு வழித்தடம் ஒன்று.. மேற்கு ஆசியா/மத்திய கிழக்கை ஐரோப்பாவுடன் இணைக்கும் வடக்கு வழித்தடம் என்று இரண்டு வழித்தடங்கள் இதில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ரயில் பாதை: இதில் ஒரு முக்கியமான ரயில் பாதையும் இருக்கும். அந்த ரயில் பாதை துறைமுகத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்தப் பணிகள் முழுமையாக முடிந்தவுடன் மேற்கு ஆசியா அல்லது மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியா வழியாகத் தென்கிழக்கு ஆசியாவிற்கு இடையே சரக்குகளை மிகவும் குறைந்த செலவில் எடுத்துச் செல்லலாம்.
இந்த மிகப் பெரிய திட்டம் ஐரோப்பா ஆசியா என இரண்டிலும் முதலீட்டிற்கான வாய்ப்புகளை ஊக்குவிக்கும்.. இது குறித்த அறிவிப்பு வெளியான போது அதிபர் பைடன் இதை வெகுவாக பாராட்டி இருந்தார்.
பைடன்: அதிலும் குறிப்பாக ரயில் மற்றும் துறைமுக பணிகள் முழுமையாக நிறைவடைந்தால் அது மத்திய கிழக்குப் பகுதிகளை மற்ற பகுதிகளுடன் ஒருங்கிணைக்க உதவும் என்று பைடன் கூறியிருந்தார். இத்திட்டம் தான் ஹமாஸ் தாக்குதலுக்குக் காரணமாக இருக்கும் என்று இப்போது பைடன் கூறியிருக்கிறார். அவர் ஏன் இப்படிக் கூறுகிறார்.. இதற்கு என்ன ஆதாரம் என்பது குறித்து எல்லாம் அவர் பெரிதாக விளக்கவில்லை. தனக்கு இப்படித் தோன்றுவதாக மட்டும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications