"100% வரி.." சீனாவுக்கு எதிராக வர்த்தக போரை ஆரம்பித்த டிரம்ப்.. உண்மையில் என்ன காரணம்? பகீர் பின்னணி
வாஷிங்டன்: சீனா மீது 100% வரிகளை விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.. இது உலகின் இரு பெரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போரை ஏற்படுத்தியுள்ளது. சீன பொருட்கள் மீது டிரம்ப் இப்போது திடீரென வரியை அறிவிக்க என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.!
அமெரிக்கா சீனா இடையே மீண்டும் வர்த்தகப் போர் ஏற்பட்டுள்ளது. இந்த வர்த்தகப் போரை ஆரம்பித்து வைத்திருக்கிறார் டிரம்ப்! வெள்ளிக்கிழமை இரவு டிரம்ப் திடீரென இரவோடு இரவாகச் சீனா பொருட்கள் மீது 100% வரியை விதிப்பதாக அறிவித்தார். வரும் நவம்பர் 1ம் தேதி முதல் இந்த வரி அமலுக்கு வரும் என்று அறிவித்து, அவர் சீனாவுடனான வர்த்தகப் போரை மீண்டும் ஆரம்பித்துள்ளார்..

டிரம்ப் வரி
இது தொடர்பான அறிவிப்பை டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் அவர், சீனாவின் அணுகுமுறை அசாதாரணமாக இருப்பதாகவும் சர்வதேச வர்த்தகத்தைப் பாதிக்கும் வகையிலேயே சீனா செயல்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், சீனா பதிலடியாக எதாவது நடவடிக்கைகளை எடுத்தால், இந்த வரிகள் முன்கூட்டியே அமலுக்கு வரும் என்றும் அவர் எச்சரித்தார்.
அடுத்த மாதம் தென் கொரியாவில் ஏபெக் மாநாடு நடைபெறுகிறது. தென்கொரியாவில் நடக்கும் இந்த ஏபெக் மாநாட்டில் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் டிரம்ப் சீனா மீது சரமாரி குற்றச்சாட்டை முன்வைத்ததோடு, வரிகளையும் விதித்துள்ளார்.
காரணம் என்ன
சீனா சமீபத்தில்தான் தனது ரேர் எர்த் மெடல் ஏற்றுமதிக்குப் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. செமி கண்டெக்டர்கள், போர் விமானங்கள் உட்படப் பல்வேறு அதிநவீனக் கருவிகளைத் தயாரிக்க ரேர் எர்த் மெடல் அத்தியாவசியமாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது சீனா வேண்டுமென்றே ஏபெக் சந்திப்பிற்கு முன்பு, இதுபோல ரேர் எர்த் மெடல் கனிம ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் சாடுகிறார்கள். அதற்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவுக்குப் பாதிப்பு
சீனாவின் ரேர் எர்த் மெடல் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அமெரிக்காவின் தொழில் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களைக் கடுமையாகப் பாதிக்கின்றன. உள்நாட்டில் ரேர் எர்த் மெடல் உற்பத்தியை அதிகரிக்க அமெரிக்காவைச் சேர்ந்த MP மெட்டீரியல்ஸ் நிறுவனத்தில் $400 மில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் உற்பத்தி முழு வீச்சில் ஆரம்பிக்கச் சில காலம் ஆகும். இதனால் அதுவரை சீனாவை மட்டுமே அமெரிக்கா பெரிதும் நம்பியுள்ளது. அப்படியிருக்கும்போது சீனாவின் கட்டுப்பாடுகள் அமெரிக்காவை ஆத்திரப்படுத்துவதாக இருக்கிறது. இதன் காரணமாகவே அமெரிக்கா வரி விதித்துள்ளது.
டிரம்ப் அரசியல்
இது ஒரு அரசியல் நகர்வாகவும் பார்க்கப்படுகிறது. டிரம்ப் நீண்ட காலமாகவே வர்த்தக விவகாரத்தில் கடும் நிலைப்பாட்டை எடுப்பவராகத் தன்னை காட்டிக் கொள்கிறார். அமெரிக்காவை யாரும் மிரட்ட முடியாது என்பதைக் காட்டவே டிரம்ப் இந்த வரிகளை அறிவித்துள்ளார். மேலும், டிரம்ப்பின் செயல்பாடுகளைக் கடந்த காலங்களில் பார்த்தால்.. அவர் வரிகளை எப்போதும் எதிர்த் தரப்பிற்கு அழுத்தம் கொடுக்கவே பயன்படுத்தி இருக்கிறார். வரி மூலம் சீனாவைத் தங்கள் நிபந்தனைகளுக்கு இணங்க வைக்க முடியும் என அவர் நம்புகிறார்.
அதேநேரம் சீனா இதைக் கடுமையாகக் கண்டித்துள்ளது. அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டையே இது காட்டுவதாகச் சீனா சாடியுள்ளது. மேலும், அமெரிக்காவுக்குத் தேவைப்பட்டால் பதிலடி கொடுப்போம் எனச் சொன்ன சீனா, கையோடு சீன துறைமுகத்திற்கு வரும் அமெரிக்கக் கப்பல்களுக்கான கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications