செவ்வாய் கிரகத்திற்கு இணையான குளிர்! அலறும் அமெரிக்கா.! அதென்ன "சூறாவளி பாம்.." ஏன் இவ்வளவு மோசம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் இப்போது ஒரு தலைமுறையில் ஒரு தடவை மட்டுமே ஏற்படும் சூறாவளி பாம் ஏற்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த தேசத்தையும் அங்கு புரட்டிப்போட்டுள்ள நிலையில், அந்த பாம் சூறாவளி என்றால் என்ன என்று பார்க்கலாம்.
பருவ நிலை மாற்றம் அனைத்து நாடுகளையும் வைத்துச் செய்து வருகிறது. அமெரிக்கா தொடங்கி எந்தவொரு நாடும் இதில் இருந்து தப்பிக்கவில்லை. குளிரானாலும் மழையானாலும் அது வழக்கத்தை விட மிக அதிகமாகப் பெய்து மோசமான பாதிப்புகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.
கடந்தாண்டு கோடைக் காலத்தில் அமெரிக்காவில் வெப்ப அலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதேபோல ஐரோப்பாவில் பெய்த பெருமழை காரணமாக ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டன..

கடும் குளிர்
இதனிடையே இந்த குளிர் காலமும் அவர்களுக்கு நிம்மதி தருவதாக இல்லை. அங்குக் குளிர் பாதிப்பு மிக மோசமாக உள்ளது. அமெரிக்காவில் இந்த தலைமுறையில் இல்லாத அளவுக்கு மோசமான பனிப்புயல் ஒன்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரைக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தான் முக்கியம். அங்குக் கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு வரை விடுப்பு இருக்கும். இந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் இருக்கும் அனைவரும் தங்கள் வீடுகளை நோக்கிப் படையெடுப்பார்கள்.

திண்டாடும் மக்கள்
இப்போது அங்கு கடும் குளிர் நிலவும் நிலையில், பல பகுதிகளில் வெப்பம் -40 டிகிரி பாரன்ஹீட்டை எட்டியுள்ளது. கடுமையான பனிப்பொழிவால் பல பகுதிகள், மின்சாரம் இல்லாமல் இருளிலும் முடங்கியுள்ளது. இந்த கடுங்குளிரால் பல இடங்களில் விமான நிலையங்கள் மூடப்பட்டு, 1000+ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முக்கிய நெடுஞ்சாலைகளும் கூட மூடப்பட்டுள்ளதால், சாலை வழியாகவும் கூட அங்குச் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வரும் காலத்தில் நிலைமை மேலும் மோசமாகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க் கிரகத்திற்கு இணையான வெப்பம்
இதனால் கிறிஸ்துமஸ் விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாட விரும்புவோர் நிலைமை கையை மீறிச் செல்வதற்குள் கிளம்புமாறு அமெரிக்க அதிபர் பைடனே எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் பல பகுதிகளில் சுமார் -40 டிகிரி பாரன்ஹீட் உள்ளது. இது செவ்வாய்க் கிரகத்தில் நிலவும் வெப்பத்திற்கு இணையானதாகும். ஒரு தலைமுறையில் ஒறு தடவை மட்டுமே இந்தளவுக்கு மோசமான பனிப்புயல் வீசும். இதை அமெரிக்கா ஆய்வாளர்கள் பாம் சூறாவளி என்று அழைப்பார்கள். ஆர்டிக் பகுதியில் இருந்து வரும் குளிரே இதற்குக் காரணம்.. இதனால் இந்த வாரம் அமெரிக்காவின் பெரும்பகுதி முழுவதும் கடுமையான குளிர், பனி நிலவுகிறது.

வானிலை மாற்றம்
இந்த சூறாவளி பாம் ஏற்படும் போது அதன் அழுத்தம் தொடர்ச்சியாக 24 மணி நேரத்தில் ஒரு மில்லிபார் வேகத்தில் குறையும். இருப்பினும், புயல் எங்கு உருவாகிறது என்பதைப் பொறுத்து மில்லிபார் அளவீடுகள் மாறலாம். காற்று அழுத்தம் என்பது வளிமண்டலத்தின் எடையால் செலுத்தப்படும் சக்தியின் அளவாகும். இந்த அழுத்தம் குறைவாக இருந்தால், புயல் வலிமையானது. அமெரிக்காவில் இப்போது கடுங்குளிர் நிலவுகிறது. சில மணி நேரத்தில் அங்கு 52 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் குறைந்துள்ளது. அதேபோல காற்றழுத்தமும் குறைந்துள்ளது.

எப்படி ஏற்படுகிறது
குளிர் மற்றும் வறண்ட காற்று ஒன்றுடன் ஒன்று மோதும் போது தான் இந்த சூறாவளி பாம் உருவாகிறது. சூடான காற்று மேலே எழும்பும்போது, அது ஒரு மேக அமைப்பை உருவாக்கி காற்றழுத்தத்தைக் குறைக்கிறது. இது குறைந்த அழுத்தப் பகுதியைச் சுற்றி எதிரெதிர் திசையில் சுற்றும் போது புயலாக உருவாகிறது. இதில் உள்ள குளிர்ந்த காற்றால்தான் சூறாவளி பாம் வகைப்படுத்தப்படும். குளிர் காற்று இதில் மோதும்போது வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே ஆபத்தான நிலைக்குச் செல்லும்.

மோசமான பாதிப்பு
மேலும், சில நிமிடங்களில் இது உறை பனியையும் ஏற்படுத்தும். இந்த வார இறுதியில் அமெரிக்காவில் இந்த நிகழ்வுகள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் இரண்டு மூன்று பகுதிகள் இந்த பனி சூறாவளியால் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது. அங்கு மேற்கு பகுதி மிக மோசமாகப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. அதேநேரம் அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் பாதிப்பு அந்தளவுக்கு மோசமாக இருக்காது. மேலும், கிறிஸ்துமஸ் தினத்திற்குப் பிறகு அங்கு வெப்பநிலை மீண்டும் அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications