வரலாறு காணாத வெப்பம்! தகிக்கும் சூரியன்.. சம்மர் வரவே இல்லை அதுக்குள் இப்படியா! குழம்பிய ஆய்வாளர்கள்
வாஷிங்டன்: இதுவரை பதிவு செய்யப்பட்ட ஆண்டுகளிலேயே இந்த 2024 ஜனவரி மாதம் தான் மிகவும் வெப்பமானதாக இருந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புவி வெப்ப மயமாதல் என்பது உலக நாடுகளுக்கு மிகப் பெரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. இதனால் உலகில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. இது பருவநிலை மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

காலநிலை மாற்றம்: இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் என்பது இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான ஜனவரியாக அமைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சி35 அதாவது கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்றச் சேவை என்ற அமைப்பு அறிவித்துள்ளது. காலநிலை மாற்றத்தால் ஒரு பக்கம் அதீத மழை கொட்டி தீர்க்கிறது.. மற்றொரு பக்கம் மிகக் கடுமையான வெப்பம் பொளந்து தள்ளுகிறது. உலக வெப்பமயமாதல் எந்தளவுக்குத் தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையே இது காட்டுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இதற்கு முன்பு வரை ஜனவரி 2020 தான் அதீத வெப்பமான ஆண்டாக இருந்தது. ஆனால், இப்போது காலநிலை மாற்றம் & எல் நினோ நிகழ்வுகளால் வெப்பம் அதிகரித்து வருகிறது. புவி வெப்ப மயமாதல் நிகழ்வு கடந்த சில ஆண்டுகளில் மோசமானதாக மாறியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த 1850 முதல் பார்க்கும் போது 2023 தான் வெப்பமான ஆண்டாக இருந்துள்ளது
அதிகரிக்கும் வெப்பம்: கடந்தாண்டு இந்தளவுக்கு மோசமானதாக இருந்த நிலையில், இந்தாண்டு வெப்பம் சற்று குறையும் என்றே பலரும் கருதினர். ஆனால், இந்தாண்டு ஜனவரி மாதமே மிகவும் வெப்பமான ஆண்டாக மாறிவிட்டது. கிழக்கு பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் எல் நினோவின் தாக்கம், கடந்தாண்டு முதல் அதிகரித்த வெப்பம் ஆகியவை ஜனவரியிலும் வெப்பம் அதிகமாக இருக்கக் காரணமாக இருந்துள்ளது.
இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "இது வெப்பமான ஜனவரி மாதமாக அமைந்துள்ளது. மேலும், தொழில்துறைக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும் போது 1.5 செல்சியஸுக்கு அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. இப்படியே தொடர்ந்து 12 மாதங்கள் அதீத வெப்பம் பதிவாகி இருக்கிறது. க்ரீன் ஹவுஸ் வாயுவைக் குறைப்பது மட்டுமே புவி வெப்ப மயமாதலைத் தடுக்கும் ஒரே வழி" என்று அவர் தெரிவித்தார்.
எச்சரிக்கை: 1850 முதல் 1900 வரையிலான காலகட்டத்துடன் ஒப்பிடும் போது இந்த ஜனவரி மாதம் பதிவான வெப்பம் என்பது 1.66 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருந்துள்ளது. கடந்தாண்டு பதிவான வெப்பமே மிகவும் அதிகமாக இருந்ததாக மக்கள் புலம்பி வந்த நிலையில், இந்தாண்டு அதை விட அதீத வெப்பம் பதிவாக வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், இதுவரை பதிவான வெப்பமான ஆண்டுகளில் டாப் 5இல் 2024 வரவும் 99% வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
எல் நினோ நிகழ்வால் வெப்பம் அதிகரிப்பது பொதுவாக நடக்கும் நிகழ்வு தான். இந்த எல் நினோ கடந்த மாதம் பலவீனமடைந்த போதிலும், ஜனவரி மாதம் வெப்பம் அதிகரித்துள்ளது.. இதற்கான காரணம் புரியாமல் ஆய்வாளர்கள் குழம்பி போய் இருக்கிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை எப்போதும் ஏப்ரல் மாதம் தான் வெப்பம் அதிகரிக்க ஆரம்பிக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பிப். இறுதி அல்லது மார்ச் மாதமே வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிவிடுகிறது. இது பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்துகளை உணர்த்துவதாக இருக்கிறது. இந்தாண்டு இப்போது பிப். மாதமே ஈரோட்டில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications