இப்போது கர்நாடகா! அடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவை வீழ்த்துவோம்! அமெரிக்காவில் நின்றபடி ராகுல்
வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் கர்நாடகாவில் பாஜகவை அழித்தது போல அடுத்து வரும் தேர்தல்களிலும் பாஜகவை வீழ்த்துவோம் என்று பேசியுள்ளார்
காங்கிரஸின் மூத்த தலைவரான ராகுல் காந்தி இப்போது அமெரிக்கா சென்றுள்ளார். அங்கே அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அமெரிக்காவில் இருந்தபடி அவர் பாஜகவை விமர்சித்து வருகிறார்.

இதனிடையே அவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இந்தியச் சமூகத்தினர் பலரும் பங்கேற்றனர். சான் பிரான்ஸிக்கோ மற்றும் வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின் அவர் இப்போது நியூயார்க் வந்துள்ளார்.
ராகுல் காந்தி: கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் பாஜகவை வீழ்த்தியுள்ளதாகத் தெரிவித்த ராகுல் காந்தி, அடுத்து வரும் மாநிலச் சட்டசபைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் நிச்சயம் வெல்லும் என்று அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "பாஜகவை வீழ்த்த முடியும் என்பதைக் கர்நாடகாவில் காட்டினோம்... அவர்களை வெறும் தோற்கடிக்க மட்டுமில்லை, அவர்களை முழுமையாக வீழ்த்தினோம். அவர்களை அழித்துள்ளோம். கர்நாடகாவில் அவர்களை அடித்து நொறுக்கி படுதோல்வி அடைய வைத்துள்ளோம்.
கர்நாடக தேர்தலில், பாஜக தங்களுக்குத் தெரிந்த அனைத்தையும் முயன்றது. அனைத்து ஊடகங்களும் அவர்களுக்குப் பின்னால் இருந்தது. எங்களிடம் இருந்த பணத்தை விட 10 மடங்கு அவர்களிடம் பணம் கொட்டி கிடந்தது. அரசு, நிர்வாகம், ஏஜென்சி என அனைத்தும் அவர்களிடம் இருந்தது. இப்படி எல்லாம் இருந்த போதிலும் அவர்களை நாங்கள் முழுமையாக வீழ்த்தினோம்.
மாநிலங்கள்: அடுத்து தெலுங்கானாவில் அவர்களை அழிக்கப் போகிறோம்.. இந்தத் தேர்தலுக்குப் பிறகு தெலுங்கானாவில் பாஜகவைக் கண்டுபிடிப்பதே கடினமாக இருக்கும்.. தெலங்கானா மட்டுமின்றி இந்தாண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களிலும் தேர்தல் நடக்க உள்ளன. கர்நாடகாவில் செய்ததையே நாங்கள் அங்கும் அவர்களுக்குச் செய்வோம்.
பாஜகவைத் தோற்கடிக்கப் போவது காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல.. இந்திய மக்களும் தான்.. மத்தியப் பிரதேச மக்கள், தெலங்கானா மக்கள், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் மக்கள் தான் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த போகிறார்கள். பாஜக சமூகத்தில் பரப்பும் வெறுப்பை வைத்துக் கொண்டு முன்னேற முடியாது என்பதை இந்திய புரிந்து கொண்டதே இதற்குக் காரணம்.
2024 தேர்தல்: அடுத்த தேர்தல் நடக்கும் மாநிலங்களில் இதுதான் நடக்கப் போகிறது. அதன்பிறகு 2024 தேர்தலிலும் அதையே செய்வோம். எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுள்ளது, அனைவரும் இணைந்து செயல்படுகிறோம். இது ஒரு கருத்தியல் போராட்டம். ஒருபுறம், பாஜகவின் மக்களைப் பிளவுபடுத்தும் வெறுப்பு நிறைந்த சித்தாந்தம் உள்ளது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியின் பாசமும், அன்பும் நிறைந்த சித்தாந்தம் உள்ளது.
கர்நாடகாவில் பாஜக தேர்தலில் மக்களிடையே வெறுப்பைப் பரப்பி சமூகங்களைப் பிரித்து வாக்குகளைப் பெற முயன்றனர். பிரதமரே அதற்கு முயன்ற போதிலும் அது கைகொடுக்கவில்லை. கர்நாடக தேர்தல் என்பது விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், ஊழலைப் பற்றிய தேர்தல் என்பதைக் கர்நாடக மக்கள் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். அடுத்து வரும் மாநிலங்களிலும் மக்கள் பாஜகவுக்குப் பாடம் புகட்டுவார்கள்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications