இஸ்ரேல் யுத்தம்! ஹமாஸ் தாக்குதலுக்கு உண்மையில் என்ன காரணம்! சவுதியை உள்ளே இழுத்துவிடும் பைடன்! பகீர்
வாஷிங்டன்: இஸ்ரேல் ஹமாஸ் படைகளுக்கு இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், இதற்கு உண்மையில் என்ன காரணம் என்று அதிபர் பைடன் சில காரணங்களைப் பட்டியலிட்டுள்ளார்.
இஸ்ரேல் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையேயான போர் இரண்டு வாரங்களுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் படை முதலில் தாக்குதலை நடத்திய நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது.

காசா பகுதியைக் குறிவைத்து இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. விரைவில் முழு வீச்சில் படையெடுக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் விவகாரம்: இதற்கிடையே ஹமாஸ் படை தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் பைடன் சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவுடனான இஸ்ரேல் உறவைச் சீர்குலைக்கவே ஹமாஸ் படை இஸ்ரேல் மீது தாக்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் பைடன் பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அடுத்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் பைடன் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதற்கிடையே அவர் இப்போது பிரச்சாரத்திற்கு நிதி திரட்டும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்படி அவர் பங்கேற்ற நிதி திரட்டும் நிகழ்ச்சியில் தான் அவர் இந்த முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
பைடன் பரபர: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப் பல காரணங்கள் இருக்கிறது. அதில் முக்கியமானது இஸ்ரேல் உடனான உறவு.. இஸ்ரேல் விவகாரம் குறித்து நான் சவுதியிடம் தொடர்ந்து பேசி வந்தேன். இதன் காரணமாகவே உறவைச் சீர்குலைக்க ஹமாஸ் படை இந்த மோசமான தாக்குதலை நடத்தியுள்ளது. சவூதி அரேபியா இஸ்ரேலை அங்கீகரிக்க விரும்பியது. இதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கத் தொடங்கினார்கள்.
இருப்பினும், இதை ஹமாஸால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதன் காரணமாகவே கடந்த அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படை தாக்குதலை நடத்தியுள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டில் போர் தொடரும் நிலையில், அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ள இந்தக் கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
சவுதி: பாலஸ்தீன விவகாரம் காரணமாக அனைத்து அரபு நாடுகளுமே இஸ்ரேலுடன் மோதல் போக்கைக் கொண்டிருந்தது. இதற்குச் சவுதியும் விதிவிலக்கு இல்லை. ஆனால், அமெரிக்கா- சவுதி நெருங்கிய நிலையில், சவுதி நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. அமெரிக்கா சவுதி இடையே பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தை நடந்த நிலையில், மறுபுறம் சவுதியும் இஸ்ரேல் உடன் நல்லுறவை மேம்படுத்த நடவடிக்கையை ஆரம்பித்தது. இதற்கான பேச்சுவார்த்தை சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.
அதன் பிறகு இஸ்ரேல் மற்றும் சவுதி இடையேயான உறவு மேம்பட்டே வந்தது. இரு நாடுகளையும் ஒன்றிணைக்க அமெரிக்கா சார்பில் பைடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இந்தச் சூழலில் தான் இந்தியாவில் கடந்த செப். மாதம் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டில் முக்கியமான அறிவிப்புகள் வெளியானது.
முக்கியம்: இந்த நேரத்தில் தான் ஹமாஸ் படை உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே பஞ்சாயத்து பல காலமாக நீடித்தாலும் பிரச்சினை இப்போது பூதாகரமாக ஹமாஸ் நடத்திய தாக்குதலே காரணமாகும். மேலும், அப்போது ஹமாஸ் தரப்பில் வெளியிடப்பட்ட வீடியோவிலும் கூட சவுதி நிலைப்பாட்டை மறைமுகமாகத் தாக்கும் வகையில் சில கருத்துகள் இடம்பெற்றிருந்தது. இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் பைடன் இந்தக் கருத்துகளைக் கூறியுள்ளது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications