டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு எப்போது? அமெரிக்க அதிபராக 3 மாதம் காத்திருக்க வேண்டும்.. ஏன் தெரியுமா?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த கமலா ஹாரிசை வீழ்த்தி குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் அமெரிக்காவின் 47 வதுஅதிபராக பொறுப்பேற்க உள்ளார். தற்போது ரிசல்ட் வெளியான நிலையில் டொனால்ட் டிரம்ப் 2025 ஜனவரி மாதத்தில் இருந்து தான் அதிபராக பதவியேற்க உள்ளார். பதவியேற்புக்கு ஏன் டொனால்ட் டிரம்ப் சுமார் 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் ? அதன் பின்னணி பற்றிய விபரம் வருமாறு:
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் என்பது நடக்கும். அந்த வகையில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். எதிர் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டார்.

நேற்று அமைதியாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. அதன்பிறகு ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். கமலா ஹாரி்ஸ் தோல்வியடைந்துள்ளார். இதன்மூலம் அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி அமெரிக்காவின் 47 வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
தற்போது ரிசல்ட் வெளியாகி உள்ள நிலையில் டொனால்ட் டிரம்ப் 2025 ஜனவரி மாதத்தில் இருந்து அதிபராக பொறுப்பேற்று செயல்பட உள்ளார். அதுவரை ஜோ பைடன் தான் காபந்து அதிபராக செயல்படுவார். இப்போது நம்மில் பலருக்கும் சந்தேகம் எழலாம். இந்தியாவில் சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல் முடிந்த அடுத்த ஒரு வாரத்தில் புதிய ஆட்சி அமைந்து விடும். முதல்வர், பிரதமர் பதவியேற்று விடுவார்கள். ஆனால் வளர்ந்த மற்றும் வல்லரசு நாடான அமெரிக்காவில் தேர்தல் முடிவு வெளியாகியும் 3 மாதம் கழித்து புதிய அதிபர் பதவியேற்பது ஏன்? என்ற கேள்வி எழலாம்.
இதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதாவது அமெரிக்காவை பொறுத்தவரை ஒவ்வொரு 4 ஆண்டுக்கும் அதிபர் தேர்தல் நடக்கும். அந்த தேர்தல் என்பது நவம்பர் மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை தான் நடக்கும். அந்த வகையில் தான் இந்த ஆண்டும் நவம்பர் மாத முதல் செவ்வாய்க்கிழமையான நேற்று அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த நடைமுறை என்பது 1845ம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. ஏனென்றால் நவம்பர் முதல் வாரம் என்பது அங்குள்ள விவசாயிகள் அறுவடை பணிகளை முடித்து இருப்பார்கள். இதனால் அவர்களால் எளிதாக ஓட்டளிக்க முடியும். என்பதால் தான் இந்த தேதி காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
அதேபோல் ரிசல்ட் வெளியாகி புதிய அதிபர் யார்? என்பது தெரிந்தாலும் கூட பதவியேற்புக்கு முதலில் 4 மாத கால இடைவெளி இருந்தது. இதனை அந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டமே அங்கீகரித்து இருந்தது. அதன்பிறகு 1933ம்ஆண்டில் 20வது சட்டத்திருத்தம் என்பது கொண்டு வுரப்பட்டது. இந்த சட்டத்திருத்தம் என்பது அமெரிக்க அதிபர் பதவியேற்புக்கான காலஅவகாசத்தை 4 மாதத்தில் இருந்து 3 மாதமாக குறைத்தது. அதன்படி நவம்பர் மாத முதல் செவ்வாய் கிழமை தேர்தல் நடத்தி முடிக்கப்படும் பட்சத்தில் ஜனவரி 20ம் தேதி புதிய அதிபர் பதவியேற்று பணியை தொடர வேண்டும் என்று சட்டத்திருத்தம் கொண்டு வரப்பபட்டது.
இதன் பின்னணியில் முக்கிய காரணங்கள் உள்ளன. அதாவது புதிய அதிபராக தேர்வானவர் தனது ஆட்சியில் செயல்படுத்த வேண்டிய கொள்கைகளை முன்கூட்டியே வகுப்பதற்கு போதிய காலஅவகாசம் வழங்குவறாகும். அதேபோல் புதிய அமைச்சரவை அமைப்பது பற்றி பொறுமையாக விவாதித்து முடிவெடுக்க முடியும் என்பதால் இந்த கால இடைவெளி பின்பற்றப்பட்டு வருகிறது.
அதேபோல் அமெரிக்காவில் எலக்ட்டோரல் காலேஜ் முறையில் அதிபர் தேர்வு செய்யப்படுகிறார். மேலும் எலக்ட்டர்ஸ் டிசம்பர் மாதத்தில் தான் மகாண ஆளுநர்களால் நியமிக்கப்பட உள்ளனர். அதன்பிறகு டிசம்பர் 17 ம் தேதி தான் எலக்ட்டோரல் காலேஜ் மீட்டிங் என்பது நடத்தி ஓட்டுப்பதிவு என்பது நடக்கும். அதன்பிறகு ஜனவரி 6ம் தேதி ரிசல்ட் அறிவிக்கப்படும். இது ஒரு சம்பிரதாயம் தான். இந்த நடைமுறை மட்டுமின்றி தேர்தல் தொடர்பான விவகாரங்களில் சந்தேகம் ஏதேனும் இருப்பின் புதிய அதிபர் பொறுப்பேற்கும் முன்பே அதனை நீதிமன்றங்கள் மூலம் தீர்க்கவும் காலஇடைவெளி என்பது அவசியமாகும்.
இதனால் தான் இந்த 3 மாத இடைவெளி என்பது அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது. இதனால் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி இன்று உறுதியானாலும் கூட அவர் 2025 ஜனவரி மாதம் 20ம் தேதியில் இருந்து தான் அந்த பொறுப்பில் செயல்பட முடியும். இந்த ஜனவரி 20ம் தேதி என்பது அதிகாரத்தை கைமாற்றும் தேதியை குறிக்கும் வகையில் Inaguration Day என்று சொல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications