எல்லா பக்கமும் அசிங்கப்படும் பாகிஸ்தான்.. அமெரிக்காவை வைத்து பரப்பிய பொய் செய்தி அம்பலம்! இதெல்லாம் தேவையா
நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்ளப் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீருக்கு அழைப்பு விடுத்ததாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் உலா வந்தன. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது பொய்யான தகவல் என்பது தெரிய வந்துள்ளது. அமெரிக்க அதிபர் மாளிகையே அதுபோல எந்தவொரு அழைப்பும் விடுக்கவில்லை எனக் கூறியிருக்கிறது.
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மாதம் மோதல் வெடித்தது அனைவருக்கும் தெரியும். இந்த மோதலில் இந்தியாவின் தாக்குதலுக்குப் பயந்து பாகிஸ்தான் போர் நிறுத்தம் கோரியது. அதேநேரம் பாகிஸ்தான் இந்த மோதலின் போது எண்ணில் அடங்காத பொய் செய்திகளைப் பரப்பின. மோதல் முடிந்த பிறகும் கூட உலக நாடுகள் தங்களை ஆதரிப்பது போன்ற தகவல்களைப் பாகிஸ்தான் பரப்பியது.

குறிப்பாக அமெரிக்காவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்ள அசம் முனீருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தகவல் பரவியது. இந்தச் சூழலில் தான் இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகையே முக்கியமான விளக்கத்தைக் கொடுத்துள்ளது.
அமெரிக்க ராணுவ அணிவகுப்பு
அமெரிக்காவின் ராணுவ பலத்தை வெளிப்படுத்தும் முயற்சியாகவே இந்த ராணுவ அணிவகுப்பு கருதப்படுகிறது. மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கிலும் இது நடத்தப்படுகிறது. 1775 ஜூன் 14-ம் தேதி அமெரிக்க ராணுவம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது..
அமெரிக்கா சுதந்திரம் அடைவதற்கு ஒரு வருடம் முன்பு, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடுவதற்காக அமெரிக்க ராணுவம் நிறுவப்பட்டது. இதை நினைவுகூரும் வகையிலேயே அமெரிக்க ராணுவம் சனிக்கிழமை அணிவகுப்பை நடத்தியது. அந்த அணிவகுப்பு மரியாதையை டிரம்ப் ஏற்றுக்கொண்டார்.
அமெரிக்க ராணுவம்
ஆயிரக்கணக்கான வீரர்கள், டாங்கிகள் மற்றும் ராணுவத் தளவாடங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் பாராசூட் வீரர்களின் சாகசங்கள் இந்த அணிவகுப்பில் இடம்பெற்றன.. சனிக்கிழமை பிற்பகலில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில் போர் விமானங்கள் சாகச நிகழ்ச்சிகளையும் நடத்தின. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தின்போது அணிவகுப்புகள் நடத்தப்படும். அதுபோல அமெரிக்காவில் இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவதில்லை. எனவே, இது ஒரு தனித்துவமான நிகழ்வாக இருக்கும்.
கடைசியாக 1991-ல் அமெரிக்கா குவைத்திலிருந்து ஈராக்கை விடுவித்த பின்னர் "டெசர்ட் ஸ்டார்ம்" என்று அழைக்கப்பட்ட வளைகுடா போரின் வெற்றிக்குப் பிறகு, அணிவகுப்பை நடத்தியது. வாஷிங்டனில் நடைபெற்ற அந்த தேசிய வெற்றி விழா தான், கடைசி ராணுவ அணிவகுப்பு ஆகும். இந்தச் சூழலில் தான் அந்த ராணுவ அணி வகுப்பிற்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் அழைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
எதிர்க்கட்சிகள்
இது மோடியின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வி என்று காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர் .டிரம்ப்பை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் பாஜக, ஆசிம் முனீருக்கான அழைப்பிதழை எதிர்க்கும் வகையில் குரல் கொடுக்கவில்லை எனச் சாடியது. இந்தச் சூழலில் தான் இது தொடர்பாக அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.

அமெரிக்கா விளக்கம்
இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீருக்கு அமெரிக்க ராணுவ அணிவகுப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக வெளியான தகவலை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், "இது தவறான தகவல். எந்த வெளிநாட்டு ராணுவத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை" என்றார்.
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்
பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் தூதுக்குழு அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்க முடியாமல் போனதால் இதுபோன்ற பொய்யான தகவல்களைப் பரப்பியதாகக் கூறப்படுகிறது. பொய்யான தகவல்களைத் தொடர்ச்சியாகப் பரப்பி சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் அசிங்கப்படுவது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications