வெள்ளை மாளிகையில் லாக்டவுன்.. வேலியை தாண்டிய "மர்ம" பொருள்.. உள்ளே டிரம்ப் வேற இருக்காரே! பரபரப்பு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் திடீரென மர்மப் பொருள் விழுந்துள்ளது. இதையடுத்து உடனடியாகச் சுற்றி வளைத்த சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள், அங்கு முழு லாக்டவுனை அமல்படுத்தினர். மேலும், மர்மப் பொருளையும் கண்டுபிடித்தனர். டிரம்ப் இருக்கும்போது நடந்த இந்தச் சம்பவத்தால் வெள்ளை மாளிகையில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ அலுவலகம் மற்றும் இல்லமாக வெள்ளை மாளிகை இருக்கிறது. யார் அதிபராகத் தேர்வானாலும் அங்கு வெள்ளை மாளிகையில் தான் குடியேறுவார்கள். அதேபோல அதிபர் பதவி முடியும்போது வெள்ளை மாளிகையைக் காலி செய்துவிட்டும் வந்துவிடுவார்கள். அதன்படி இப்போது அமெரிக்க அதிபராக இருக்கும் டிரம்ப் அதிபர் மாளிகையில் இருக்கிறார்.

வெள்ளை மாளிகையில் லாக்டவுன்
இதற்கிடையே வெள்ளை மாளிகையில் எதிர்பாராத வளாகத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த வெள்ளை மாளிகையும் சற்று நேரம் மூடப்பட்டு, அங்கு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. அதாவது பிற்பகல் நேரம் வெள்ளை மாளிகையின் வளாகத்தைச் சுற்றிப் போடப்பட்டுள்ள வேலியைத் தாண்டி செல்போன் ஒன்று வீசப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு காரணங்களால் வெள்ளை மாளிகையில் கொஞ்ச நேரம் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.
மர்மப் பொருள்
அங்குள்ள வடக்கு புல்வெளியில் போடப்பட்டுள்ள வேலியைத் தாண்டி அந்த பொருள் வீசப்பட்டு இருக்கிறது. முதலில் என்ன பொருள் வீசப்பட்டது என்று தெரியாததால் சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டு வெள்ளை மாளிகையை மூடியுள்ளனர். இந்தச் சம்பவத்தை வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தினார். யாரோ ஒருவர் தங்கள் தொலைப்பேசியை வேலியைத் தாண்டி வீசினர் என்று மட்டும் அவர் குறிப்பிட்டார். அதேநேரம் கூடுதலாக அவர் எந்தவொரு தகவலையும் தரவில்லை.
ஏதோ ஒரு பொருள் பாதுகாப்பு வேலியை தாண்டி வீசப்பட்ட தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் உடனடியாக வெள்ளை மாளிகையில் லாக்டவுன் கொண்டு வந்தனர். ஒட்டுமொத்த வெள்ளை மாளிகையிலும் இந்த லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. மேலும், வெள்ளை மாளிகை அருகே உள்ள பென்சில்வேனியா அவென்யூ என்ற சாலையிலும் போக்குவரத்து மூடப்பட்டது. செல்போனை எடுத்து சோதனை செய்ததில், அதில் ஆபத்து எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
முதல்முறை இல்லை
அதைத் தொடர்ந்தே அங்குப் பாதுகாப்பு நடைமுறைகள் தளர்த்தப்பட்டன. இந்தச் சம்பவம் நடந்த போது டிரம்ப் வெள்ளை மாளிகையில் தான் இருந்ததாகக் கூறப்படுகிறது. பாதுகாப்பு நெறிமுறைகள் தளர்த்தப்பட்ட பிறகு பென்சில்வேனியாவுக்கு டிரம்ப் புறப்பட்டுச் சென்றார். அதேநேரம் இந்தச் சம்பவத்திற்குக் காரணமான நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது குறித்து வெள்ளை மாளிகை இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.
அதேநேரம் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு மீறல் நடப்பது இது முதல்முறை இல்லை. கடந்த காலங்களிலும் இதுபோல சிறு சிறு பாதுகாப்பு மீறல்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் மீதான கொலை முயற்சி
மேலும், டிரம்ப் மீது கடந்தாண்டு கொலை முயற்சி நடந்தது. பென்சில்வேனியாவில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அவருக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடந்ததில் அவர் படுகாயமடைந்தார். அதன் பிறகு அவரது கோல்ஃப் மைதானத்திலும் ஆயுதத்துடன் ஒருவர் நுழைந்திருந்தார். இதன் காரணமாக ஏற்கனவே அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications