அதானி, அம்பானியை விட பல மடங்கு சொத்து அதிகம்.. உலகில் வாழ்ந்த மிக பெரிய பணக்காரர் இவர் தான்
வாஷிங்டன்: இதுவரை பூமியில் வாழ்ந்ததிலேயே மிகப் பெரிய பணக்காரராகக் கருதப்படும் எகிப்திய மன்னரின் முகத்தை ஆய்வாளர்கள் இப்போது வெளியிட்டுள்ளனர்.
இன்று உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்றால் பெர்னார்ட் அர்னால்ட், எலான் மஸ்க், ஜெப் பேசாஸ் ஆகியோரை நீங்கள் கூறலாம். அதேபோல இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர் என்றால் அம்பானி, அதானியை கூறலாம்.

அமென்ஹோடெப் III: ஆனால், இதுவரை உலகில் வாழ்ந்தவர்களிலேயே மிகப் பெரிய பணக்காரர் என்றால் அது டுடென்காமுனின் தாத்தா அமென்ஹோடெப் III தான்.. இவர் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தை ஆட்சியைச் செய்துள்ளார். 40 ஆண்டுகள் இவரது ஆட்சியில் தான் எகிப்து இருந்துள்ளது. டுடென்காமுன் மன்னரின் தாத்தாவான இந்த அமென்ஹோடெப் III தான் உலகில் இதுவரை வாழ்ந்தவர்களிலேயே மிகப் பெரிய பணக்காரராகக் கருதப்படுகிறார்.
அதேநேரம் இவர் எப்படி இருந்தார் என்பது குறித்து எந்தவொரு தகவல்களும் இல்லை. இவரது ஓவியங்களும் எதுவும் கண்டறியப்படவில்லை.. இவரது சில சிற்பங்கள் இருந்தாலும் கூட அதில் இவர் எப்படி இருந்தார் எனத் துல்லியமாகத் தெரியாமலேயே இருந்தது. இதற்கிடையே ஆய்வாளர்கள் இவர் எப்படி இருந்திருப்பார் என்பதைக் கணித்து இவரது முகத்தை வெளியிட்டுள்ளனர்.
யார் இவர்: எகிப்து பேரரசு உச்சத்தில் இருந்த போது கிமு 14ஆம் நூற்றாண்டில் எகிப்தை ஆட்சி செய்தவர் தான் இந்த அமென்ஹோடெப் III .. இவரை அந்த காலகட்டத்தில் மக்கள் வாழும் கடவுளாகக் கருதி வணங்கியுள்ளனர். இவரது காலத்தில் தான் எகிப்தில் செல்வம் செழித்தது. மேலும், சர்வதேச சக்தியாகவும் அவர் எகிப்தை வழிநடத்தினார். எகிப்தின் தலைசிறந்த மன்னர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.
உருவம்: பொதுவாகவே எகிப்தை ஆண்ட மன்னர்களைப் பிரமிடுகளில் பதப்படுத்தி வைப்பார்கள். இவற்றைத் தான் பொதுவாக மம்மிகள் என்பார்கள். அதன்படி அமென்ஹோடெப் IIIஇன் மம்மி கடந்த 1890களில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே அந்த மம்மியின் மண்டை ஓட்டை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், அவர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்போது உருவாக்கியுள்ளனர்.
அவரது மூக்கு, காதுகள், கண்கள் மற்றும் உதடுகள் தோராயமாக டிசைன் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "உலகின் பணக்கார மன்னர்களில் ஒருவரான இந்த அமென்ஹோடெப் III எப்படி இருந்து இருப்பார் என்பதைக் காட்டும் முதல் படம் இதுதான் என்றே நினைக்கிறேன்.. இறுதியாகக் கிடைத்த படம் பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது" என்றார்.
மிக பெரிய பணக்காரர்: சூரியன் மற்றும் காற்றின் கடவுளான அமுனின் நினைவாக இந்த மன்னருக்கு அமென்ஹோடெப் எனப் பெயரிடப்பட்டுள்ளது. பண்டை எகிப்து காலகட்டத்தை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் இந்த எகிப்திய மன்னரின் செல்வம் இணையற்றது என்றும் இப்போது இருக்கும் உலக கோடீஸ்வரர்களை காட்டிலும் இவரது சொத்து மதிப்பு பல மடங்கு அதிகம் என்றும் கூறுகிறார்கள். இதுவரை வாழ்ந்ததிலேயே உலகின் மிகப் பெரிய பணக்காரராக இவர் இருப்பார் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இவரைப் பற்றி ஆய்வு செய்து வரும் ஆஸ்திரேலியாவில் உள்ள ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழக தொல்பொருள் ஆய்வாளர் டாக்டர் மைக்கேல் ஹபிச்ட் கூறுகையில், "அமென்ஹோடெப் IIIஇன் மம்மி முழுக்க முழுக்க தங்க இலைகளால் மூடப்பட்டிருக்கலாம்.. இதனால் அது ஒரு கடவுளின் சிலை போல் தோன்றியிருக்கலாம்" என்கிறார்.
பல்வேறு பாதிப்புகள்: மேலும், அமென்ஹோடெப் III ஒரு பருமனான நபராக இருக்கலாம் என்றும் அவர் கடைசிக் காலத்தில் நோய்வாய்ப்பட்டு இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும், அவருக்கு வழுக்கைத் தலை இருக்கலாம் என்றும் அவருக்குப் பல் பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் அவரது மம்மியை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும், அவரது உயரம் சுமார் 156 செமீ, அதாவது சுமார் 5.1 அடியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications