ட்விட்டர் ஆபீஸ் முழுக்க "துர்நாற்றம்.." துப்புரவு பணியாளர்களை கூட வீட்டுக்கு அனுப்பிய மஸ்க்! அடாவடி
வாஷிங்டன்: எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து அங்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது அனைவருக்கும் தெரியும். அவர் எடுக்கும் சில முடிவுகள் ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது.
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டர் தளத்தை வாங்கினார். ட்விட்டர் பங்குகள் வர்த்தகமாகி வந்ததில் இருந்து அதிகப்படியான தொகையைக் கொடுத்து அவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார்.
அப்போதே பலரும் அவர் ட்விட்டர் நிறுவனத்திற்கு அதிக தொகையைக் கொடுத்துள்ளதாக விமர்சித்தனர். இதை உணர்ந்து எலான் மஸ்க் ஒரு கட்டத்தில் பின்வாங்க முயன்றார். இருப்பினும், அவர் மீது வழக்கு எல்லாம் தொடர்ந்து அவரை ட்விட்டர் தளத்தை வாங்க வைத்தனர்.

எலான் மஸ்க்
அவர் ட்விட்டரை வாங்கியதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதல் நாளே முக்கிய அதிகாரிகளை வேலையை விட்டு நீக்கினார். அதன் பிறகு சில நாட்களில் சுமார் 50% ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பினார். இப்படித் தொடர்ந்து அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். குறிப்பாகத் தேவையில்லாத செலவுகளைக் குறைக்க அவர் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இருப்பினும், இவர் எடுக்கும் பல முடிவுகள் சர்ச்சையைக் கிளப்புவதாக அமைந்துவிடுகிறது. இப்படித்தான் அவசரகதியில் ப்ளு டிக்கிற்கு கட்டணம் என்ற முறையைக் கொண்டு வந்து குழப்பிவிட்டார்.

துப்புரவு பணியாளர்கள்
அவரது முடிவுகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பும்போதும், அவர் பின்வாங்கத் தயாராக இல்லை. இதனிடையே இப்போது செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையில் அவர் வேற லெவலுக்கே சென்றுவிட்டார். சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவு ஊழியர்கள் அதிக ஊதியம் கேட்டு வேலை நிறுத்தம் செய்துள்ளனர். அவர்களை அழைத்துப் பேசாமல், அடாவடியாக அனைவரையும் டிஸ்மிஸ் செய்துள்ளார் எலான் மஸ்க். இதனால் அங்கு துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள மாற்று ஊழியர்களும் சீக்கிரம் கிடைக்கவில்லை.

துர்நாற்றம்
துப்புரவு பணியாளர்கள் இல்லாமல் போனதால், அங்கு ட்விட்டர் அலுவலகத்தில் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் ட்விட்டர் ஊழியர்கள் வேறு வழியில்லாமல், தங்கள் சொந்த வீடுகளில் இருந்து டாய்லெட் பேப்பர்களை எடுத்து வர வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. துப்புரவுப் பணியாளர்கள் இல்லாமல் போனது அலுவலகத்தைச் சீர்குலைத்து விட்டது.. அங்குள்ள பாத்ரூம்கள் பயன்படுத்த முடியாத வகையில் மாறிவிட்டன. உணவு மற்றும் வியர்வைத் துர்நாற்றம் அலுவலகத்தில் மோசமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாகச் சிலர் புலம்புகின்றனர்.

டாய்லெட் பேப்பர்கள்
அங்கு டாய்லெட் பேப்பர்களை கூட மாற்ற இப்போது ஆள் இல்லை என்பதால், பலரும் தங்கள் வீடுகளில் இருந்தே டாய்லெட் பேப்பர்களை கொண்டு வரத் தொடங்கியுள்ளனர். அங்கு மொத்தம் 6 தளங்களில் ட்விட்டர் ஊழியர்கள் பணியாற்றி வந்த நிலையில், அதிலும் நான்கு தளங்களை மூடிவிட்டு இரண்டு தளங்களில் அனைவரையும் பணியமர்த்தி உள்ளனர். இதுவும் அங்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி மஸ்க் எடுக்கும் அடாவடி முடிவுகள் ட்விட்டர் ஊழியர்களை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது.

டேட்டா சென்டர்
மேலும், செலவுக் குறைப்பு நடவடிக்கையாக அவர், கலிபோர்னியாவின் சேக்ரமெண்டோவில் உள்ள ட்விட்டர் இன் டேட்டா சென்டர்களில் ஒன்றை மூடவும் உத்தரவிட்டார். இப்படி திடீரென டேட்டா சென்டரை மூடினால் அது தளத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும் என்று ட்விட்டர் ஊழியர்கள் எச்சரித்து இருந்தனர். இருப்பினும், அதையும் காதில் வாங்காமல் எலான் மஸ்க் இந்த முடிவை எடுத்தார். இது ட்விட்டர் தளம் இயங்க காரணமாக இருக்கும் மூன்று தளங்களில் ஒன்றாகும். இதனால் ட்விட்டர் தளத்தின் செயல்பாடு பாதிக்கலாம் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆபீஸ் மூடல்
மேலும், ட்விட்டர் அங்கு சியாட்டில் இருந்த அலுவலகத்திற்கு வாடகை செலுத்துவதை நிறுத்திவிட்டது. இதனால் அலுவலகம் மூடப்பட்டதால் ட்விட்டர் தனது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோ தவிர அனைத்து இடங்களிலும் உள்ள ட்விட்டர் அலுவலகத்தை மூட மஸ்க் முடிவு செய்துள்ளார். பல காவலர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்களும் கூட பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ட்விட்டர் பட்ஜெட்டில் இருந்து தொழிலாளர் அல்லாத செலவினங்களில் $500 மில்லியன் (அதாவது ரூ.4100 கோடி) குறைக்கவும் மஸ்க் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications