டிரம்ப்பால் இந்தியாவுக்கு புதிய தலைவலி.. வாயை விட்ட அமெரிக்க அமைச்சர்! ஏற்க மறுக்கும் அரசு? பின்னணி
வாஷிங்டன்: ‛‛இந்தியா மட்டும் எங்களிடம் எல்லாவற்றையும் விற்கிறது. ஆனால் எங்களிடம் இருந்து சோளத்தை வாங்க மறுக்கிறது. இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகம் ஒரு வழிப்பாதையாக உள்ளது. அதில் இந்தியா தான் லாபமடைகிறது. இதனை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் இந்தியாவுக்கு கடினமான நேரமாக இது இருக்கும்'' என்று அமெரிக்காவின் வர்த்தகத்துறை அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் மிரட்டி உள்ளார். இதன்மூலம் டிரம்ப் டீம் அமெரிக்காவின் சோளத்தை வாங்க கட்டாயப்படுத்துகிறது. ஆனால் மத்திய அரசு மறுத்து வரும் நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சரிவை சந்தித்துள்ளது.

இந்நிலையில் தான் அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தகம் தொடர்பாக டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இதற்காக அமெரிக்க பிரதிநிதிகள் டெல்லி வந்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் நம் நாட்டை மீண்டும் மிரட்ட தொடங்கி உள்ளார். இந்தியா, பிரேசில், கனடா உள்ளிட்ட நாடுகளுடன் உறவை வர்த்தகம் என்ற பெயரில் அமெரிக்கா சீர்க்குலைக்கிறதா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு ஹோவர்ட் லுட்னிக் கூறியதாவது:
அமெரிக்காவின் சோளத்தை இந்தியா வாங்கியே ஆக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛இந்தியாவில் 140 கோடி மக்கள் உள்ளனர். ஆனால் சிறிய அளவில் கூட அமெரிக்காவின் சோளத்தை இந்தியா வாங்காமல் உள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு ஒருவழியாக உள்ளது.
அமெரிக்காவை அவர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள். எங்களிடம் அனைத்து பொருட்களையும் விற்று பணம் பார்க்கிறார்கள். ஆனால் எங்களின் பொருட்களை அவர்கள் வாங்குவது இல்லை. இருநாடுகள் இடையே நியாயமான மற்றும் பரஸ்பர வர்த்தகம் வேண்டும். அமெரிக்காவிடம் இருந்து சோளத்தை இந்தியா வாங்க வேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்காவிற்கான வரியை குறைக்க வேண்டும். இது நடக்காவிட்டால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்வதில் கடினமான நேரத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்'' என்றார்.
இந்தியாவுடனான வர்த்தக பற்றாக்குறை, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது என்று 50 சதவீத வரிகளை நம் நாட்டுக்கு டிரம்ப் அரசு விதித்தது. இப்போது சோளத்தை வாங்கும்படி வலியுறுத்தி வருகிறது. இதற்கு நம் நாடு ஏற்கனவே மறுத்துவிட்டது. அதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அது என்னவென்றால் அமெரிக்காவில் சோளத்தின் தரம் தான்.
அதாவது அமெரிக்காவில் பொதுவாகவே மரபணு மாற்றப்பட்ட சோளங்கள் (Genetically Modified)தான் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இதனால் அதன் விலை குறைவு. ஆனால் அமெரிக்காவில் அதிகம் விளைவிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் இருந்து 61.7 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு அமெரிக்கா சோள ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மூலம் 13.7 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.17 லட்சம் கோடி) வரை வர்த்தகம் செய்தது. குறிப்பாக அமெரிக்கா மெக்சிகோ, ஜப்பான், கொலம்பியா, தென்கொரியா, கனடா, சீனா, ஐரோப்பிய நாடுகள், தைாவன், சவுதி அரேபியாவுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்தது.
இந்த சோளத்தை மனிதர்கள் சாப்பிடலாம். அதேபோல் கால்நடைகளுக்கும் உணவாக வழங்கலாம். இருப்பினும் நம் நாடு அதனை விரும்புவது இல்லை. ஏனென்றால் நம் நாட்டை எடுத்து கொண்டால் மரபணு மாற்றப்பட்ட சோளங்கள் பயன்படுத்தப்படுவது இல்லை. இறக்குமதியும் செய்யப்படுவது இல்லை. நம் நாட்டில் விளைவித்து வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுவது இல்லை. அதுமட்டுமின்றி எத்தனால் தயாரிப்புக்கு மரபணு மாற்றப்பட்ட சோளத்தை பயன்படுத்தும் திட்டத்தையும் நிதி ஆயோக் கைவிட்டுள்ளது. இதனால் அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட சோளத்தை வைத்து நம் நாட்டில் எந்த பயனும் இல்லை. மீறி வாங்கினால் அது நம் நாட்டின் விவசாயிகளையும் பாதிக்கும். இதனால் நம் நாடு மறுத்து வரும் நிலையில் அதனை வாங்க அமெரிக்கா நம் நாட்டுக்கு பிரஷர் போட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications