சீனாவின் அடாவடி! கட்டுக்கடங்காமல் பூமியில் விழுந்த 20 டன் மெகா ராக்கெட்.! உயிருக்கே பெரும் ஆபத்தாம்
வாஷிங்டன்: சீனா முறையாகத் திட்டமிடாததால் அதன் ராக்கெட் குப்பைகள் வானில் இருந்து திடீர் திடீரென விழுவது வாடிக்கையான ஒன்றாக மாறி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு உலக நாடுகள் பல நூறு சாட்டிலைட்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. ராக்கெட் மூலம் அனுப்பப்படும் இந்த சாட்டிலைட்கள் வானில் நிலை நிறுத்தப்படும்.
இருப்பினும், சாட்டிலைட்களை எடுத்துச் செல்லும் ராக்கெட்கள் விண்வெளியிலேயே சுற்றிக் கொண்டு இருக்கும். சில சமயங்களில் ராக்கெட்டின் சில பகுதிகளில் பூமியிலும் விழும்.

சீன ராக்கெட்
சீனா தொழில்நுட்பத்தில் பெரியளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இருந்த போதிலும், விண்வெளியில் இருக்கும் இதுபோன்ற குப்பைகளை முறையாகச் சீனா முறையாகக் கையாள்வதில்லை என்ற புகார் நீண்ட காலமாகவே உள்ளது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது மீண்டும் நிகழ்ந்துள்ளது. சுமார் 21 மெட்ரிக் டன் எடையுள்ள விண்வெளிக் குப்பை எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் பூமியில் விழுந்து உள்ளது.

சீனாவின் அலட்சியம்
பொதுவாக இதுபோன்ற விண்வெளிக் குப்பைகள் பூமியில் விழுவது சகஜமான ஒன்று தான். ஆனால், அவை பக்காவாக பிளான் செய்யப்பட்டு எங்கே விழும் என்பதைச் சம்பந்தப்பட்ட நாடுகள் துல்லியமாகக் கணிக்கும். ஆனால், சீனா இந்த விண்வெளிக் குப்பைகளை முறையாகக் கண்காணிப்பது இல்லை. இதனால் பல நேரங்களில் ராக்கெட் குப்பைகள் கட்டுப்பாடே இல்லாமல் கீழே விழுவதை வாடிக்கையாக வைத்து உள்ளது.

21 டன்
இந்த முறை 21 மெர்டிரிக் டன் எடையுள்ள விண்வெளிக் குப்பை பூமியில் விழுந்து உள்ளது. சீனா விண்வெளியில் தனக்கென தனியாக ஒரு விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்கி வருகிறது. இதற்குத் தேவையான பொருட்களைச் சீனா அவ்வப்போது பூமியில் இருந்து ராக்கெட் மூலம் அனுப்பி வருகிறது. அப்படித்தான் சமீபத்தில் லாங் மார்ச் 5 பி ராக்கெட் மூலம் சீனா சமீபத்தில் ராக்கெட்டை அனுப்பி இருந்தது.

கடந்த 3 ஆண்டுகளில்
இந்த ராக்கெட்டின் ஒரு பகுதி தான் இப்போது பூமியில் கட்டுப்பாடு இல்லாமல் மோதியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் சீனா ராக்கெட் இப்படி கட்டுப்பாடு இல்லாமல் பூமியில் விழுவது இது 5ஆவது முறை. நல்வாய்ப்பாக இது தெற்கு பசிபிக் பகுதியில் விழுந்துள்ளன. இதன் காரணமாக இந்த ராக்கெட் விபத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இந்திய நேரப்படி நேற்றிரவு இந்த ராக்கெட் விழுந்துள்ளது.

உலக நாடுகள் அச்சம்
இந்த விண்வெளிக் குப்பை 20 டன் எடைக்கு அதிகமானது என்பதால் உலக நாடுகள் இதன் பாதையை உற்றுக் கவனித்தன. சீனாவில் இந்த அலட்சிய நடவடிக்கையால் உலக நாடுகளும் கூட கடுமையான சிரமங்களை எதிர்கொண்டன. ராக்கெட் எங்கு விழும் என்பதே தெரியாமல் இருந்ததால் ஸ்பெயின் நாட்டில் பல விமான நிலையங்கள் தங்கள் வான்வெளியை மூடின. அதேபோல பிரிட்டன் நாட்டிலும் விமானச் சேவை பாதிக்கப்பட்டன.

ஆப்பிரிக்கா
வரும் காலங்களில் இதுபோல விண்வெளிக் குப்பைகள் பூமியில் விழுவது அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனால் உயிருக்கும் கூட ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இப்படித்தான் கடந்த 2020இல் இதே சீனாவின் லாங் மார்ச் 5பி ராக்கெட்டின் பகுதிகள் மேற்கு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் பகுதியில் விழுந்தன. இதனால் அங்குப் பல கட்டிடங்கள் தேசம் அடைந்த போதிலும், நல்வாய்ப்பாக யாரும் உயிரிழக்கவில்லை.

உயிருக்கே ஆபத்து
இதனிடையே விண்வெளியில் இருந்து விழும் விண்வெளிக் குப்பைகள் குறித்து கனடா பல்கலைக்கழகம் சில மாதங்களுக்கு முன்பு ஆய்வை நடத்தி இருந்தது. அதில் அடுத்த 10 ஆண்டுகளில் ராக்கெட் பாகங்கள் கட்டுப்பாடு இல்லாமல் பூமிக்குத் திரும்பும் நிகழ்வுகளால் சுமார் 6-10% வரை மனித உயிர்களுக்கு ஆபத்து இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. எனவே, இதைத் தடுக்க உலக நாடுகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications