அதிபர் பதவியை இழக்கும் பைடன்? டிரம்பிற்கு ஏற்பட அதே நிலை! "அந்த" ஆயுதத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சி
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பைடனுக்கு எதிராக இப்போது அங்குள்ள குடியரசு கட்சியினர் முழு வீச்சில் இறங்கியுள்ளனர். இதற்காக அவர்கள் பதவி நீக்கத் தீர்மானத்தையும் டிரம்பிற்கு எதிராகக் கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவில் அடுத்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. அதிபர் தேர்தலுக்குப் பல ஆண்டுகள் இருக்கும் போதிலும், இப்போதே அங்குத் தேர்தலை முன்வைத்துப் பல சம்பவங்கள் நடந்து வருகிறது.

அந்நாட்டின் சட்டப்படி ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும். முதல்முறை அதிபர் பதவியில் இருப்போர் அடுத்த தேர்தலிலும் போட்டியிடுவார். அதன்படி அடுத்தாண்டு நடக்கும் தேர்தலில் பைடன் போட்டியிடுவது கிட்டதட்ட உறுதியாகவே இருக்கிறது.
பைடன்: இதற்கிடையே பைடனை குறிவைத்து இப்போதே எதிர்க்கட்சியான குடியரசு கட்சியினர் நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டனர். அதன்படி பைடனுக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டு வரக் குடியரசு கட்சியினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பைடன் மற்றும் அவரது மகன் ஹண்டர் பைடன் மீது நிதி முறைகேடு தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், அதைத் தொடர்ந்து இந்த பதவி நீக்கத் தீர்மானத்தை அவர்கள் கொண்டு வரலாம் எனத் தெரிகிறது. இது பைடனுக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக அமையும்.
அமெரிக்க நாடாளுமன்றம்: நம்ம ஊரில் லோக்பசா, ராஜ்ய சபா இருப்பது போலவே அங்கேயும் செனட், பிரதிநிதிகள் சபை என்று இரண்டு இருக்கிறது. இதில் பிரதிநிதிகள் சபை இப்போது குடியரசு கட்சி கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர்கள் மூன்று குழுக்களை அமைத்து பைடன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான புகார்களை விசாரித்து வருகிறார்கள். இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை வெள்ளை மாளிகை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
இது தொடர்பாகக் குடியரசு கட்சியின் முக்கிய தலைவரும் சபாநாயகருமான கெவின் மெக்கார்த்தி கூறுகையில், "ஊழல் புகார்கள் குறித்து அந்தந்த குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.. நாங்கள் கேட்கும் தகவல்களை அரசுத் துறைகள் தர வேண்டும். அப்படி அவர்கள் நாங்கள் கேட்கும் தரவுகளைத் தர மறுத்தால் பதவிநீக்க தீர்மானத்தைக் கொண்டு வரும் அதிகாரம் எங்களுக்கு இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
மறுப்பு: இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டுகளை அமெரிக்க வெள்ளை மாளிகை திட்டவட்டமாக மறுத்துள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் இது குறித்து மேலும் கூறுகையில், "பைடனுக்கு குடும்பம் என்றால் அது அமெரிக்கா தான். அமெரிக்கக் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் தான் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆனால், எதிர்க்கட்சியினர் அவரது தனிப்பட்ட குடும்பத்தைக் குறிவைக்கிறார்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால், நாங்கள் எங்கள் வேலையில் கவனம் செலுத்துவோம்" என்றார்.
மேலும், உக்ரைன் நாட்டில் உள்ள உக்ரைன் எரிசக்தி நிறுவனமான புரிஸ்மாவுக்கும் பைடனுக்கும் தொடர்பு உள்ளதாக சில எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். கடந்த 2019இல் அப்போதைய அதிபர் டிரம்பிற்கு எதிராகப் பதவிநீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது இந்த நிறுவனம் முக்கியமானதாக இருந்தது. இதற்கும் பைடனுக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லி, பைடனுக்கு எதிராக விசாரணை நடத்த உக்ரைன் நாட்டிற்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்தார் என்பதே அப்போது இருந்த புகார்.
அதே ஆயுதம்: டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது போலவே பைடனுக்கு எதிராகவும் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். தற்போது அதிபராக இருக்கும் பைடன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஏகப்பட்ட புகார்களைக் குடியரசு கட்சியினர் முன்வைக்கிறார்கள். இதில் அடுத்த கட்டமாகவே பதவி நீக்கத் தீர்மானத்தையும் கொண்டு வர அவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த பதவி நீக்கத் தீர்மானத்தை வைத்து பைடனை பதவி நீக்கம் செய்ய வாய்ப்புகள் குறைவு என்ற போதிலும், அரசியல் ரீதியாக இது அழுத்தத்தைத் தரும்.


Click it and Unblock the Notifications
