அமெரிக்காவின் பரம எதிரியான ரஷ்யா மட்டும் டிரம்ப் வரியில் இருந்து மிஸ்ஸிங்.. என்ன காரணம் தெரியுமா!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப் இன்று உலக நாடுகள் மீதான ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தார். இதில் போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் உட்பட பல்வேறு நாடுகளும் இடம்பெற்று இருக்கிறது. ஆனால், அமெரிக்காவின் பரம எதிராகக் கருதப்படும் ரஷ்யா மட்டும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. இது பலருக்கும் ஆச்சரியத்தை அளிப்பதாகவே இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தார். அதாவது அமெரிக்கா மீது உலக நாடுகள் அதிக வரி விதிப்பதாகவும் அதற்குப் பதிலாக உலக நாடுகளிடம் இருந்து வரியை வசூலிக்கப் போவதாகவும் டிரம்ப் அறிவித்திருந்தார். இது சர்வதேச அளவில் வரத்தகத்தை பாதிக்கும் எனப் பலரும் எச்சரித்தனர்.

வரியை அறிவித்த டிரம்ப்
இருப்பினும், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் அதிகபட்சமாக கம்போடியா மீது 49% வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வியட்நாம் மீது 46 சதவிகிதமும், இலங்கை மீது 44 சதவிகிதமும் வரி விதிக்கப்படுகிறது. இந்தியா மீது 26% வரியை டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், சீனா மீது 34 சதவிகிதமும், ஐரோப்பிய ஒன்றியம் மீது 20 சதவிகிதமும் வரி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா விளக்கம்
வெள்ளை மாளிகையில் இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், உலகின் ஒவ்வொரு நாட்டின் மீதும் எவ்வளவு வரி என்பதைத் துல்லியமாக விளக்கும் சார்ட்டையும் காட்டினார். பிறகு இந்த லிஸ்ட்டை வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமும் வெளியிட்டு இருந்தது. உலகின் எல்லா நாடுகள் இந்த வரி பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில், அமெரிக்காவின் பரம எதிராகக் கருதப்படும் ரஷ்யா மட்டும் இந்த லிஸ்டில் இல்லை. இது பலருக்கும் ஆச்சரியத்தை அளிப்பதாகவே இருந்தது.

வெள்ளை மாளிகை விளக்கம்
பின்னர் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் இது தொடர்பாகத் தனியாகச் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அமெரிக்கா ஏற்கனவே ரஷ்யா மீது ஏகப்பட்ட பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளதால் அமெரிக்கா- ரஷ்யா இடையே வர்த்தகம் என்பதே கிட்டதட்ட இல்லை என்று லீவிட் தெரிவித்தார்.
வெடித்த சர்ச்சை
லீவிட் இப்படிச் சொன்னாலும் கூட உண்மை வேறு விதமாகவே இருக்கிறது. அதாவது பொருளாதாரத் தடைகள் இருந்தாலும் கூட அமெரிக்கா ரஷ்யா இடையே சில துறைகளில் வர்த்தகம் தொடரவே செய்கிறது. மொரிஷியஸ், புருனே உள்ளிட்ட நாடுகளைக் காட்டிலும் ரஷ்யாவுடன் அமெரிக்கா அதிகமாகவே வர்த்தகம் செய்கிறது. மொரிஷியஸ், புருனே நாடுகள் அமெரிக்காவின் லிஸ்டில் இருக்கிறது. போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்குக் கூட 10% வரி விதிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது ரஷ்யா மட்டும் இதில் இருந்து மிஸ்ஸாவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பலருக்கும் ஆச்சரியம் தருவதாகவே இருக்கிறது. ஏனென்றால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரத் தவறினால் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் அச்சுறுத்தி இருந்தார். மேலும் அவர், "ரஷ்ய அதிபர் புதினின் செயல்பாடுகள் கடும் கோபத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. போரை நிறுத்தவில்லை என்றால் அமெரிக்காவுக்கு விற்கப்படும் ரஷ்ய எண்ணெய் மற்றும் பிற பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும்" என்று எச்சரித்து இருந்தார்.
டிரம்ப்- புதின்
டிரம்ப் பதவியேற்றது முதலே உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரத் தீவிரமாக முயன்று வருகிறார். உக்ரைன் போரால் உலகின் பல்வேறு நாடுகளும் பாதிப்பதால் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார் டிரம்ப். ஆனால், இதில் ரஷ்யா உடன்பட மறுக்கிறது. இதன் காரணமாகவே கூடுதல் வரியை விதிக்கப்போவதாக டிரம்ப் கூறியிருந்த நிலையில், இப்போது ரெசிப்ரோக்கல் வரி லிஸ்டில் இருந்தே மிஸ்ஸாகியிருக்கிறது. இது குறித்து பலரும் சந்தேகங்களையும் எழுப்பி வருகின்றனர்.
மற்ற நாடுகள்
அதேநேரம் ரஷ்யா மட்டுமின்றி வேறு சில நாடுகளும் அமெரிக்காவின் இந்த ரெசிப்ரோக்கல் வரியில் இருந்து மிஸ்ஸாகி இருக்கிறது. பெலாரஸ், கியூபா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா ஏற்கனவே பல்வேறு பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ள நிலையில், அந்த நாடுகள் ரெசிப்ரோக்கல் வரி லிஸ்டில் இடம்பெறவில்லை. அதேநேரம் பொருளாதாரத் தடைகள் இருந்தாலும் ஈரான் மற்றும் சிரியா நாடுகளுக்கு முறையே 10 மற்றும் 40 சதவீத கூடுதல் வரி அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா உடனான முக்கியமான வர்த்தக பார்ட்னராக கனடாவும் மெக்சிகோவும் இருக்கிறது. இந்த இரு நாடுகள் மீதும் டிரம்ப் அதிபரான உடனேயே தனியாக 25% வரியை அறிவித்திருந்தார். சட்டவிரோத குடியேற்றம், போதைப்பொருள், கேங் கலாச்சாரத்தைத் தடுக்க தவறியதாகச் சொல்லி டிரம்ப் இந்த நாடுகள் மீது வரியை அறிவித்திருந்தார். இந்த நாடுகளும் டிரம்பின் வரி அறிவிப்பில் இருந்து மிஸ்ஸாகி இருக்கிறது.
அதேநேரம் சீனா மீதும் டிரம்ப் இதுபோல 20% வரியை முன்கூட்டியே அறிவித்திருந்தார். விநியோகச் சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்துவதாக டிரம்ப் வரியை அறிவித்திருந்தார். ஆனால், இப்போது டிரம்பின் லிஸ்டில் சீனா இடம்பெற்று இருக்கிறது. சீனா மீது கூடுதலாக 34 சதவீத வரியை டிரம்ப் அறிவித்துள்ளார். இதன் மூலம் சீனா மீதான ஒட்டுமொத்த வரி 54 சதவீதமாக உயர்ந்துள்ளது.

முக்கிய நாடுகள் மீது டிரம்ப் அறிவித்துள்ள வரி விவரங்கள்
- இந்தியா: 26 சதவீதம்
- சீனா: 34 சதவீதம்
- ஐரோப்பிய ஒன்றியம்: 20 சதவீதம்
- மலேசியா: 24 சதவீதம்
- பிரிட்டன் 10 சதவீதம்
- இலங்கை: 44 சதவீதம்
- பாகிஸ்தான்: 29 சதவீதம் சதவீதம்
- ஜப்பான்: 24 சதவீதம்
- தென் கொரியா: 25 சதவீதம்
- வியட்நாம்: 46 சதவீதம்
- தைவான்: 32 சதவீதம்
- தாய்லாந்து: 36 சதவீதம்
- சுவிட்சர்லாந்து: 31 சதவீதம்
- இந்தோனேசியா: 32 சதவீதம்
- கம்போடியா: 49 சதவீதம்
- தென்னாப்பிரிக்கா: 30 சதவீதம்
- பிரேசில்: 10 சதவீதம்
- வங்கதேசம்: 37 சதவீதம்
- சிங்கப்பூர்: 10 சதவீதம்
- இஸ்ரேல்: 17 சதவீதம்
- பிலிப்பைன்ஸ்: 17 சதவீதம்
- சிலி: 10 சதவீதம்
- ஆஸ்திரேலியா: 10 சதவீதம்
- துருக்கி: 10 சதவீதம்
- கொலம்பியா: 10 சதவீதம்
இதுபோல ஒவ்வொரு நாட்டின் மீதும் எவ்வளவு சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது என்பது குறித்த தகவல்களை வெள்ளை மாளிகை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications