எவனோ செய்வினை வச்சுட்டான் போல.. திடீரென முடங்கிய எலான் மஸ்கின் எக்ஸ்! குழம்பிப் போன வலைதள வாசிகள்!
வாஷிங்டன்: உலகம் முழுவதும் எக்ஸ் ( X ) வலைதளம் திங்கட்கிழமை பிற்பகலில் முடங்கியதால் பயனர்கள் சிரமத்தை சந்தித்தனர். வலைதளம் மற்றும் மொபைல் அப்ளிகேஷன் இரண்டுமே முடங்கிய நிலையில் சிறிது நேரத்திற்கு பிறகு அது இயல்பு நிலைக்கு திரும்பியது.
ஸ்பேஸ் எக்ஸ், டெல்ஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் நிறுவன தலைவரும், தற்போதைய நிலையில் உலகின் மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களாக தனது பார்வையை உலக அளவில் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் பக்கம் திருப்பினார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ட்விட்டர் பயனர்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்கவில்லை எனவும், தனியுரிமை என்ற பெயரில் கருத்துரிமையை பாதிக்கிறது எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்த நிலையில் அவர் எடுத்த அதிரடி முடிவுதான் ட்விட்டரை முழுமையாக கைப்பற்றுவது.
சுமார் 44 பில்லியன் டாலர் மதிப்பில் ட்விட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க் அதில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக ட்விட்டர் ப்ளு டிக், ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள், கருத்துரிமை, எழுத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட பல சீர்திருத்தங்கள் இருக்கும் என பயனர்கள் எதிர்பார்த்தனர். சொன்னபடியே ட்விட்டரை வாங்கிக் காட்டினார் எலான் மஸ்க்.
தொடர்ந்து ட்விட்டரை வாங்கிய கையோடு அதன் பெயரை எக்ஸ் என மாற்றினார். மேலும் டொனால்ட் டிரம்ப் போன்றவர்களின் முடக்கப்பட்ட கணக்குகள் செயல்பாட்டுக்கு வந்தன. மேலும் பிரீமியம் அம்சம் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களையும் கொண்டு வந்தார். மேலும் லாபத்தில் பங்கீடு, மாத சந்தா என பல்வேறு அதிரடிகளையும் எலான் மஸ்க் அரங்கேற்றனர். தற்போது எலான் வாங்கிய பிறகு x வலைதளம் உலகம் முழுவதும் மிகப் பெரிய பயனர் பட்டாளத்தை கொண்டுள்ளது.
இந்த நிலையில் அடிக்கடி அது முடங்குவதும் வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் உலக அளவில் இன்று ( மார்ச் 10ஆம் தேதி) பிற்பகல் எக்ஸ் வலைதளம் திடீரென முடங்கியது. வலைதளம் மற்றும் மொபைல் அப்ளிகேஷன் ஆகிய இரண்டிலுமே லாகின் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் இணைய சேவை தொடர்பாக புகார்களை பெறும் டவுன் டிடெக்டரில் பதிவான தகவல் படி திங்கட்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு சுமார் 2500 பயனர்கள் எக்ஸ் வலைதளத்தில் சிக்கல்களை எதிர்கொண்டதாக புகார் அளித்தனர்.
ஆனாலும் எக்ஸ் வலைதளம் முடங்கியது குறித்து அந்த நிறுவனத்திடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் சுமார் 15 நிமிடத்திற்கு பிறகு எக்ஸ் வலைதள சேவைகள் மீண்டும் செயல்பட தொடங்கின. வலைதளம் மற்றும் மொபைல் அப்ளிகேஷனில் லாகின் செய்ய முடிந்தது. ஆனால் தற்போது வரை இது தொடர்பாக எக்ஸ் எந்தவிதமான விளக்கத்தையும் அளிக்கவில்லை. எக்ஸ் வலைதளம் முடங்குவது ஒன்றும் புதிது அல்ல.. 2022 இல் எலான் மஸ்க் வந்த நிறுவனத்தை வாங்கிய பிறகு பலமுறை இதேபோல முடங்கி மீண்டும் மீண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications