இந்தி மொழியை கற்க வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப்படுகிறோம்: அமைச்சர் துரைமுருகன் வேதனை
வாணியம்பாடி: டெல்லியில் உள்ளவர்களுக்காக இந்தி மொழியை நாம் கற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேதனை தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் வாணியம்பாடியில் முத்தமிழ் மன்றத்தின் 29-வது இலக்கிய திருவிழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: வாணியம்பாடி என்பது இலக்கிய வாசனை நிறைந்த ஊர். எனக்கு மட்டும் அதிகாரம் கிடைத்திருந்தால் வாணியம்பாடியில் படித்த கவிக்கோ அப்துல் ரகுமானுக்கும் அவருடன் பயணித்த தமிழ் அறிஞர்கள் பலருக்கும் பத்மபூஷண் விருது கொடுத்திருப்பேன்.
தமிழர்களுக்கு தமிழர் என்ற உணர்வு ஏற்படவே எத்தனை காலமாகி இருக்கிறது. நாம் நம்மை தமிழர் என ஒப்புக் கொள்வதற்கே பெரியார், வெள்ளுடை வேந்தர் சர்பிட்டி தியாகராயர், அண்ணா போன்ற தலைவர்கள் முயற்சி எடுத்தனர். அதன்பின்னர் நாம் தமிழன் என்ற உணர்வு பெற்றோம். தமிழனுக்கு இருக்கிற முக்கிய பிரச்சனையே அவனுக்கு இருக்கிற மறதிதான். நாம் யார் என்பதையே மறந்துவிடுகிறோம்.
உலகின் பல மொழிகள் தோன்றி மடிந்து போய்விட்டன. கிரேக்க மொழி இல்லை- லத்தீன் மொழி இல்லை. ஹீப்ரு மொழி இல்லை. ஆனால் இன்றைக்கு உயிரோடு இருக்கிற ஒரே மொழி தமிழ் மொழி மட்டும்தான். அதனால்தான் கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி என்கிறோம். என் தமிழ் இருக்கிறது. என் தமிழ் உயிரோடும் இருக்கிறது. அன்றைக்குப் போலவே இன்றைக்கும் தமிழ் மொழி வளமையோடு இருக்கிறது.
தமிழ் மொழியில் இருப்பதைப் போன்ற இலக்கியங்கள் உலகத்தில் வேறு எந்த மொழியிலும் இல்லை. 11-ம் நூற்றாண்டில்தான் ஆங்கிலத்தில் இலக்கியங்கள் உருவாகின.டெல்லியில் அதிகாரிகள், அமைச்சர்கள் இந்தியிலேயே பேசுகின்றனர். முன்பெல்லாம் சபாநாயகர் ஆங்கிலத்தில்தான் பேசுவார். இப்போது எல்லாம் சபாநாயகர் கூட இந்தியில் பேசுகிறார். இவர்களுக்காகவே நாம் இந்தி படிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறோம்.
பொதுவாகவே தமிழருக்கு தமிழ் உணர்வு அதிகம். பைபிள் புனித நூலாக இருந்தாலும் அனைத்து தரப்புமே ஏற்கக் கூடிய நூல் அல்ல. அதேநேரத்தில் ஒருசேர அனைத்து தரப்பும் ஏற்கக் கூடியதாக இருப்பது நமது திருக்குறள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் பேசினார்.












Click it and Unblock the Notifications