விஜய் சேதுபதியின் “காட்டான்” எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் ப்ளூ சட்டை மாறன் இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள "முத்து என்கிற காட்டான்" வெப் சீரிஸ் மார்ச் 27ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி, தற்போது ரசிகர்களிடையே பரபரப்பான விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக இந்த சீரிஸை பற்றிய ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த கிரைம்-த்ரில்லர் சீரிஸில் மலையாள நடிகர் இர்ஷாத் அலி, பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன், நடிகர்கள் சிங்கம்புலி, வேட்டை முத்துக்குமார், ரிஷா ஜேக்கப்ஸ், விஜே பார்வதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை மதுநீலகண்டன் மேற்கொண்டுள்ளதுடன், இசையை ராஜேஷ் முருகேசன் அமைத்துள்ளார். இந்த தொடரை விஜய் சேதுபதி தயாரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

முத்து என்கிற காட்டான் ரிவ்யூ
கதை ஆரம்பிக்கும் விதமே சஸ்பென்ஸ் நிறைந்ததாக அமைந்துள்ளது. ஒரு காட்டுப்பகுதியில் வெட்டப்பட்ட தலை ஒன்று கிடைப்பதுடன் தொடங்கும் இந்த கதை, அதுவே விஜய் சேதுபதியின் கேரக்டர் ஆன "முத்து"வின் தலை என்று தெரியவருகிறது. அருகில் கிடைக்கும் பணமும், கடிதமும் போலீசாரை குழப்பம் அடைந்து செய்கிறது.
முத்து என்கிற காட்டான் கதை
கிராமத்தில் போலீஸ் ஸ்டேஷனில் கேஸே இல்லை என்று அந்த ஸ்டேஷனை இழுத்து மூட இருக்கும் நிலையில் வெட்டப்பட்ட தலையால் பெரிய பிரச்சனை ஏற்படுத்துகிறது. அதன் பின்னர் விசாரணை தீவிரமாக நடைபெறும் போது, முத்து ஒரு சாதாரண வாட்ச் சரி பண்ணும் நபர் மட்டுமல்லாமல், சிலருக்கு பாதுகாப்பாக இருந்தவர் என்றும் பல்வேறு முகங்களுடன் வாழ்ந்தவர் என்றும் தெரியவருகிறது. இவரை யார் கொன்றது? ஏன் கொன்றது? என்ற கேள்விகளோடு கதை நகர்கிறது.
இந்த சீரிஸின் முதல் சில எபிசோடுகள் ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், அதன் பின்னர் கதை மெதுவாக இழுக்கப்பட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையே தனது விமர்சனத்தில் ப்ளூ சட்டை மாறன் கடுமையாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூ
அவரின் ரிவியூவில், ஆரம்பத்தில் இருந்த சுவாரசியம் பின்னர் முழுமையாக குறைந்து விடுகிறது. தேவையற்ற காட்சிகள் அதிகமாக இடம்பெற்றதால் கதை "ஜவ்வுமிட்டாய் போல" நீள்கிறது என்றும், ஒரு கிரைம் த்ரில்லருக்கு அவசியமான திருப்பங்களும் பிடிப்பும் இதில் சரியாக அமையவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், படம் முடிந்த பிறகும் சில விஷயங்கள் தெளிவாக விளக்கப்படாமல் குழப்பமாகவே இருப்பதாகவும் கூறியுள்ளார்.
டிரெய்லரை பார்த்தபோது இந்த சீரியலை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உருவானாலும், முழு சீரிஸை பார்த்த பிறகு அதே அளவிலான திருப்தி கிடைக்கவில்லை என்பதும் அவரது முக்கியமான கருத்தாகும். அதனால், இந்த சீரிஸை யாரும் எதிர்பார்ப்புடன் பார்க்க வேண்டாம் என்ற அளவுக்கு அவர் தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.
அதே நேரத்தில், சில ரசிகர்கள் இந்த சீரிஸில் இயல்பான நடிப்பு, குறிப்பாக விஜய் சேதுபதியின் வேறுபட்ட கதாபாத்திரம், ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை போன்ற அம்சங்களை பாராட்டி வருகின்றனர். கிராமப்புற பின்னணி மற்றும் ரியலிஸ்டிக் அணுகுமுறையும் சிலருக்கு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
மொத்தத்தில், "முத்து என்கிற காட்டான்" ஒரு வித்தியாசமான கதையுடன் ஆரம்பித்து, முழுமையான திரில்லர் அனுபவமாக மாற முடியாமல் போன சீரிஸ் என்றே கூறப்படுகிறது. குறிப்பாக ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் இந்த சீரிஸிர் குறைகளை வெளிப்படையாக எடுத்துக்காட்டியதால், தற்போது இந்த சீரிஸ் குறித்து ரசிகர்களிடையே கலவையான கருத்துக்கள் உருவாகியுள்ளன.












Click it and Unblock the Notifications