Parasakthi OTT: ஓடிடிக்கு வரும் பராசக்தி.. எதில், எப்போது பார்க்கலாம்? அதுவும் வியாபாரம் இவ்வளவா?
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'பராசக்தி' திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" காலத்திலிருந்த சிவகார்த்திகேயனை நினைவில் வைத்திருந்த ரசிகர்களுக்கு, இந்தப் படத்தில் அவர் முழுக்க முழுக்க ஒரு சீரியஸ் புரட்சி முகத்துடன் வருவது தான் முதல் சர்ப்ரைஸ்.
இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை மையமாக கொண்டு உருவான இந்த படம், அரசியல், உணர்ச்சி மற்றும் கமர்ஷியல் எல்லாத்தையும் ஒரே பாத்திரத்தில் போட்டு கிளறியிருக்கிறது.

படத்தின் கதை 1930கள் முதல் 1960கள் வரையிலான மொழிப் போராட்ட பின்னணியை தழுவி செல்கிறது. செழியன் என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் களமிறங்க, அவருக்கு எதிராக அமைப்பு, அரசியல், அதிகாரம் என எல்லாமே வில்லன்களாக நிற்கின்றன. இந்தப் போராட்டத்துக்குள் காதல், தியாகம், அரசியல் சூழ்ச்சி என எல்லாமே கலக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் "இது புரட்சி படமா, மசாலா படமா?" என்ற சந்தேகம் எழுந்தாலும், இயக்குநர் சுதா கொங்கரா அதை தன் ஸ்டைலில் சமாளிக்க முயன்றிருக்கிறார்.
ரவி மோகன் மற்றும் அதர்வா இருவரும் தங்கள் கதாபாத்திரங்களில் முக்கிய திருப்பங்களை உருவாக்குகிறார்கள். குறிப்பாக சில காட்சிகளில் அவர்கள் வரும்போது படம் சற்று வேகம் எடுக்கிறது. ஸ்ரீலீலாவின் கதாபாத்திரம் கதைக்கு தேவையான உணர்ச்சியை தருகிறதா அல்லது கமர்ஷியலுக்கான சேர்க்கையா என்ற விவாதம் ரசிகர்களிடையே நடந்தாலும், ரசிகர்கள் கூட்டம் தியேட்டரில் இருந்தவரை அந்த காட்சிகள் ஓடியது தான் உண்மை.
ஜி.வி. பிரகாஷின் இசை வழக்கம்போல் பின்னணியில் படம் தூக்கிக்கொண்டு ஓடும் இடங்களில் கை கொடுத்திருக்கிறது. வசூல் விஷயத்தில் 'பராசக்தி' ஆரம்பத்தில் நல்ல வேகத்தில் ஓடியது. தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் அறிவிப்பின்படி, முதல் நாளில் உலகளவில் சுமார் 27 கோடி ரூபாய் வசூல் செய்து சிவகார்த்திகேயனின் கேரியரில் புதிய சாதனை படைத்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் 12 முதல் 13 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை முடிந்து திங்கட்கிழமை வந்ததும், பல திரையரங்குகளில் "பசுமை புரட்சி" மாதிரி காலி சீட்கள் தெரிந்தது தான் சினிமா வட்டாரத்தில் சற்று கலாய்ப்புக்கு உள்ளான விஷயம்.
படத்திற்கு வரும் விமர்சனங்களும் அதே போல கலவையானவை. ஒரு பக்கம் "தமிழ் மொழி அடையாளத்தை திரையில் அழுத்தமாக பேசுகிறது" என்று பாராட்டும் ரசிகர்கள் இருக்க, இன்னொரு பக்கம் "அரசியல் பிரசார வாசனை அதிகம்" என்று முகம் சுளிக்கும் கூட்டமும் இருக்கிறது.
Parasakthi: பராசக்தி சிவகார்த்திகேயனுக்கு ஒரு வைரக்கல், இந்த படம் பிரளயத்தை ஏற்படுத்தும்! பயில்வான் விமர்சனம்
அதே நேரத்தில், சிவகார்த்திகேயன் இந்த படத்தில் எடுத்த ரிஸ்க் தான் அவருக்கு பெரிய பிளஸ் என்றும், இது அவரின் கேரியரில் ஒரு டர்னிங் பாயிண்ட் என்றும் பேசப்படுகிறது. திரையரங்குகளில் வசூல் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும், ஓடிடி வியாபாரத்தில் 'பராசக்தி' நல்ல குஷியை கொடுத்திருக்கிறது.
சினிமா வட்டார தகவல்களின் படி, படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 தமிழ் தளம் கைப்பற்றியுள்ளது. இதற்காக சுமார் 50 கோடி ரூபாய்க்கு மேல் தொகை பேசப்பட்டதாகவும், தியேட்டர் வசூல் எப்படி இருந்தாலும் தயாரிப்பாளருக்கு ஓடிடி மூலமாக பெரிய நிம்மதி கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிலும் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி அல்லது 13-ஆம் தேதிகளில் எந்த படம் ஓடிட்டியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விரைவில் ஜி5 அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் 'பராசக்தி' என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி பிடிக்கும் படம் இல்லை. ஆனால் பேச வைக்கும் படம். கலாய்க்க வைக்கும் இடங்களும் உண்டு, கை தட்ட வைக்கும் காட்சிகளும் உண்டு. தியேட்டரில் தீப்பிடிக்காத இடங்களை ஓடிடி ஸ்கிரீனில் ரசிகர்கள் எப்படி ரசிக்கப் போகிறார்கள் என்பதே அடுத்த கட்ட பரீட்சை. அந்த பரீட்சையில் 'பராசக்தி' எத்தனை மார்க் வாங்கும் என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications