சிறை படத்தில் எல்லோரையும் கண்கலங்க வைத்த நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் யார் தெரியுமா? நெல்லை மைந்தன் தான்
சென்னை: சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு படம், இப்போது ஓடிடியில் வெளியாகியதும் மீண்டும் ரசிகர்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த படம் தான் 'சிறை'. இந்த படத்தை பார்த்த பலருக்கும் ஒரே ஒரு காட்சி மனதில் ஆழமாக பதிந்திருக்கும்.
கொலை குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் ஹீரோ அப்துலின் கதையை கேட்ட நீதிபதி, "உன்னுடைய வழக்கை ஐந்து வருடங்களாக எடுத்து விசாரிக்காததற்கு நீதித்துறையின் சார்பில் நான் மன்னிப்பு கேட்கிறேன்" என்று சொல்லும் அந்த தருணம்.
அந்த ஒரு வசனம் தான்... பலரை கண் கலங்க வைத்தது. "இப்படியும் நீதிபதிகள் இருக்கிறார்களா?" என்று பெருமை கொள்ள வைத்தது. ஆனால் அந்த காட்சி வெறும் கற்பனையா? என்றால் இல்லை. அதற்குப் பின்னால் உண்மையான ஒரு மனிதர் இருக்கிறார் என்பது தான் இப்போது பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

நெல்லை சீமையில் பிறந்த ரத்தினவேல் பாண்டியன்
'சிறை' படத்தில் வரும் அந்த மனிதநேய நீதிபதி கதாபாத்திரம், இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான ரத்தினவேல் பாண்டியனை அடிப்படையாகக் கொண்டது என்பதுதான் தற்போது வெளிவந்த தகவல்.
நெல்லை மாவட்டம், திருப்புடை மருதூர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன். எளிய குடும்பத்தில் பிறந்து, சட்டப் படிப்பில் சிறந்து விளங்கி, நீதித்துறையின் உயரிய பதவியான உச்ச நீதிமன்ற நீதிபதி வரை உயர்ந்தவர்.
நீதிபதி என்றால் கடுமை, தண்டனை, சட்டத்தின் வாக்கியங்கள் என்று மட்டும் இல்லாமல், மனிதநேயம், நியாய உணர்வு, சமூக அக்கறை ஆகியவற்றையும் நீதித்துறையில் கொண்டு வந்தவர் என்று அவரை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

தென் தமிழக வளர்ச்சிக்கு துணை இருந்த நீதியரசர்
பலருக்குத் தெரியாத இன்னொரு விஷயம் - இன்று தென் தமிழகத்தில் பெரிய தொழில் வளர்ச்சிக்கு காரணமாக பேசப்படும் கங்கைகொண்டான் சிப்காட், நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா போன்ற திட்டங்கள், அரசு கொண்டு வந்தாலும், அதற்கு அடித்தளம் அமைத்து, தொடர்ந்து வலியுறுத்தியவர் ரத்தினவேல் பாண்டியன் தான் என்று சொல்லப்படுகிறது.
தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படக் கூடாது, இங்கும் வேலைவாய்ப்புகள் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில், அரசு, நிர்வாகம், நீதித்துறை - எல்லா தரப்பிலும் அவர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

சிறை ஒரு படம் அல்ல, ஒரு உணர்வு
'சிறை' படத்தின் வெற்றி, ஆக்ஷன் அல்லது மாஸ் தருணங்களால் மட்டும் கிடைத்தது இல்லை. மனித உணர்வுகளை நெஞ்சில் அடிக்கும் வகையில் சொன்ன விதத்தால்தான். இந்த படத்தை இயக்கிய இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி, சிறை வாழ்க்கை, தாமதமான நீதி, மனித உரிமைகள் ஆகியவற்றை கத்திக் காட்டாமல், அமைதியாக பேசும் மொழியில் சொல்லியிருக்கிறார்.
அதுபோல அப்துல் கதாபாத்திரம் அந்த மனிதனின் வலி, விரக்தி, நம்பிக்கை அனைத்தையும் கண்களாலேயே சொல்லி இருக்கிறார். நீதிபதியாக வரும் நடிகரும், ஒரு வசனம் கூட அதிகப்படுத்தாமல், அந்த ஒரு "மன்னிப்பு" வார்த்தையிலேயே அரங்கையே அமைதியாக்கி விடுகிறார்.

'சிறை' படம் ஓடிடியில் வெளியான பிறகு, இந்த காட்சி யாரை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது? என்று பலர் தேட ஆரம்பித்தபோது தான், ரத்தினவேல் பாண்டியன் என்ற பெயர் மீண்டும் பேசப்பட தொடங்கியுள்ளது.
ஒரு நீதியரசரை சிறை கதையின் வழியாக அடையாளப்படுத்தி, அவருடைய மனிதநேயத்தை பொதுமக்கள் அறியும் வகையில் கொண்டு வந்தது தான் இந்த படத்தின் மிகப் பெரிய வெற்றி என்று சொல்லலாம்.
நீதிமன்றம், சட்டம், தீர்ப்பு - இவை எல்லாம் கடினமான வார்த்தைகள் போல தோன்றினாலும், அவற்றுக்குள் இருக்கும் மனிதத்தை நினைவூட்டியது 'சிறை'. அதனால்தான் இந்த படம், திரையரங்கில் மட்டுமல்ல... ஓடிடியிலும் மனங்களில் இடம் பிடித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications