Thadayam: சமுத்திரகனியின் தடயம் வெப் சீரிஸ் கதை இதுதான்! தாலியை அறுக்கும் கொலைகாரன் யார் ரிவ்யூ
சென்னை: நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில், அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் உருவாகியுள்ள தடயம் Thadayam வெப் சீரிஸ் பிப்ரவரி 27ஆம் தேதி ZEE5 ஓடிடி தளத்தில் வெளியானது. மொத்தம் 6 எபிசோடுகளை கொண்ட இந்த த்ரில்லர் சீரிஸ், வெளியான சில நாட்களிலேயே பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த சீரிஸில் சமுத்திரகனி Samuthirakani மற்றும் ஷிவதா Shivada முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதை 1999ஆம் ஆண்டு தமிழ்நாடு - ஆந்திரா எல்லைப் பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நகர்கிறது. அந்த காலகட்டத்தின் கிராமப்புற சூழலை மிகவும் நெருக்கமாக காட்சிப்படுத்தியிருப்பது இந்த சீரிஸின் பலமாக இருக்கிறது.

தடயம் வெப் சீரிஸ் கதை
(Thadayam Web Series Review) கதை பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தை மையமாகக் கொண்டு நகர்கிறது. அங்கே சப் இன்ஸ்பெக்டராக அதியமான் என்ற கேரக்டரில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். திறமையான அதிகாரி என்றாலும், டிஎஸ்பியுடன் பழைய விரோதம் இருப்பதால் அவர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார். அதே நேரத்தில், அந்த எல்லைப் பகுதியில் கணவன்-மனைவிகள் மர்மமான முறையில் கொல்லப்பட தொடங்குகின்றனர்.
சமுத்திரகனியின் நடிப்பு
வீட்டில் நகை, பணம் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை. ஆனால் ஒவ்வொரு சம்பவத்திலும் மனைவியின் தாலியும், கணவரின் அரைஞாண் கயிறும் மட்டும் அறுக்கப்பட்டு எடுத்து செல்லப்படுகிறது. இதனால் இது சாதாரண கொள்ளை அல்ல என்பது புரிகிறது. இந்த வழக்கை விசாரிக்க இன்ஸ்பெக்டர் லட்சுமி கேரக்டரில் ஷிவதா இணைகிறார். இருவரும் சேர்ந்து விசாரணையை தீவிரப்படுத்துகிறார்கள்.
முதல் சில கொலைகள் நடந்தபோது இது ஒரே ஒருவரின் செயல் என்று நினைக்கப்படுகின்றது. ஆனால் விசாரணை முன்னேறும்போது, இது ஒரே நபரின் வேலை அல்ல, குறைந்தது இருவர் இணைந்து செய்கிறார்கள் என்று அதியமான் கண்டுபிடிக்கிறார். அதற்குள் அதே மாதிரி இன்னும் கொலைகள் நடக்கின்றன.

விசாரணை ஆந்திரா எல்லை வரை செல்கிறது. அங்கேயும் இதே பாணியில் கணவன்-மனைவிகள் கொல்லப்பட்ட சம்பவங்கள் இருப்பது தெரிய வருகிறது. அதுவும் ஒன்று இரண்டல்ல, கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்ட சம்பவங்கள். இத்தனை கொலைகள் நடந்தும் எந்த உறுதியான தடயமும் இல்லாமல் போலீசார் திணறியிருப்பது கதைக்கு இன்னும் பதட்டத்தை கூட்டுகிறது.
கணவன்-மனைவிகளை மட்டுமே குறிவைப்பது ஏன்? தாலி மற்றும் அரைஞாண் கயிறு எதற்காக? இது சைக்கோ கொலையாளியின் மனநிலையா? அல்லது வேறு ஏதாவது மறைமுக காரணமா? என்ற கேள்விகளோடு கதை நகர்கிறது. ஒவ்வொரு எபிசோடும் ஒரு புதிய திருப்பத்தை கொண்டு வருகிறது.
வெப் சீரிஸின் பிளஸ்
சமுத்திரக்கனி வழக்கம் போல மிகவும் இயல்பான நடிப்பை கொடுத்துள்ளார். போலீஸ் அதிகாரியாக அவரின் உடல் மொழி, பேசும் விதம் எல்லாமே கதைக்கு நம்பகத்தன்மையை தருகிறது. ஷிவதாவும் வலுவான கதாபாத்திரமாக திகழ்கிறார். ஒரு பெண் போலீஸ் அதிகாரி எவ்வாறு உறுதியுடன் செயல்படுகிறார் என்பதை அவர் நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.
1999 காலக்கட்டத்தை நினைவூட்டும் காட்சிகள், கிராமப்புற வீடுகள், காவல் நிலைய சூழல், எல்லைப் பகுதிகளில் இருக்கும் பதற்றம் ஆகியவை அனைத்தும் இயல்பாக அமைந்துள்ளன. பின்னணி இசையும் கதையின் திகிலை அதிகரிக்க உதவுகிறது.
மொத்தத்தில், குறைந்த எபிசோடுகளில் ஒரு சீரான த்ரில்லர் அனுபவத்தை தரும் சீரிஸாக 'தடயம்' அமைந்துள்ளது. குற்றவியல் விசாரணை கதைகள் பிடிக்கும் பார்வையாளர்களுக்கு இது நிச்சயம் பார்க்கத்தக்க தொடர். தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது.












Click it and Unblock the Notifications