4 பேர் படங்களை தவிர வேறு யார் படமும் திமுக சுவரொட்டிகளில் இடம் பெறக் கூடாது -ஸ்டாலின் கடிதம்
சென்னை: பெரியார், அண்ணா, கலைஞர், திமுக தலைவரான தனது புகைப்படங்களை தவிர வேறு யார் புகைப்படங்களும் திமுக சுவரொட்டிகளில், பதாகைகளில் இடம்பெறக் கூடாது என கட்சி தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் ஸ்டாலின்.
மேலும், நம் கவனத்தைச் சிதைக்க - சிதறடிக்க, களத்தில் புதிது புதிதாகப் பலரும் வருவார்கள் என ரஜினி மற்றும் கமலை சூசகமாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக இலக்கும்-நோக்கும் 200 என்ற தலைப்பில் தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;

ஸ்டாலின் விளக்கம்
இந்தத் தேர்தல் தி.மு.க.வுக்கு வாழ்வா - சாவா என்று சிலர் விவாதிக்கிறார்கள். எனக்கு அதில் எள்ளளவும் உடன்பாடு இல்லை என்பதை அன்றைய ஆலோசனைக் கூட்டத்திலும் தெரிவித்தேன். இந்தத் தேர்தல் களம் என்பது, கழகம் வாழுமா - வீழுமா என மனப்பால் குடித்தபடி, மார்தட்டிக் காத்திருப்போருக்கான களம் அல்ல. தமிழ்நாடு மீள வேண்டுமா - வாழ வேண்டுமா என்பதற்கான தேர்தல் களம் என்பதைக் கழகத்தினரும், பொதுமக்களும், தமிழக முன்னேற்றத்தில் அக்கறை கொண்டோரும் உணர்ந்திருக்கிறார்கள்.

கிராமசபை
"அ.தி.மு.க.வை நிராகரிப்போம்" என ஒவ்வொருவர் மனதிலும் அடிக்கோடிட்டு எழுதி பசுமையாக வைத்துக்கொண்டால், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கழகம் தன் இலக்கை எளிதாகவே எட்டிவிடும்; தமிழகம் வாழும். இது ஒன்றுதான் நமது குறிக்கோள். அதற்கான முதல்கட்ட செயல்திட்டம்தான், 16 ஆயிரத்து 500 ஊராட்சி மற்றும் வார்டுகளில் கழகம் நடத்தவிருக்கும் ‘கிராமசபை மற்றும் வார்டு'க் கூட்டங்கள்.

அதிகார பலம்
நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல, 2021 சட்டமன்றத் தேர்தலில் நாம்தான் வெற்றி பெறப்போகிறோம். ஆனால், அந்த வெற்றியை எளிதாகப் பெறுவதற்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். எல்லா வகையிலும் தடுப்புகளையும் தடைகளையும் ஏற்படுத்துவார்கள்.
வாக்குகளைச் சிதைப்பதற்குப் பணபலம்-அதிகாரபலம் என அனைத்தையும் பயன்படுத்துவார்கள். அதனை நேரடியாக எதிர்கொள்வதற்கு நம்மிடம் இதயம் நிறைந்த வலிமை இருக்கிறது.

கவனத்தை சிதைக்க
தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வாரே, மகாபாரதத் கதையில் அர்ஜுனன் கண்ணுக்கு அம்பின் நுனியும் பறவையின் கழுத்தும்தான் தெரிந்தது என்று! அதுபோல, நமக்கு தி.மு.க.வின் வெற்றியும், தமிழகத்தின் மீட்சியும்தான் தெரிந்திட வேண்டும். நம் கவனத்தைச் சிதைக்க - சிதறடிக்க, களத்தில் புதிது புதிதாகப் பலரும் வருவார்கள்.

ஜனநாயக உரிமை
எத்தனை கட்சிகள் களம் கண்டாலும், அது அவர்களின் ஜனநாயக உரிமை என மதிப்பளித்து, நம் கவனம் முழுவதையும் வெற்றியை நோக்கியே குவித்திட வேண்டும். நேரடியாகவும் - மறைந்திருந்தும் தி.மு.கழகத்தின் மீது மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழினத்தின் மீதும், தாக்குதல் நடத்தும் எதிரிகளை வீழ்த்திட உறுதி பூண்டிட வேண்டும். அதற்கேற்ப, மக்களின் உறுதியான நம்பிக்கையை உளப் பூர்வமாகப் பெற்றிட ஓயாது உழைத்திட வேண்டும்.

உயிர்நாடி
இந்தியாவின் உயிர்நாடியாக விளங்குபவை கிராமங்கள். அதில், தமிழகத்தின் கிராமங்கள் சிறப்பு வாய்ந்தவை. அவை பாரம்பரிய இயற்கைத் தன்மை மாறாமல், அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் பெற்றிருப்பவை. தலைமையிலிருந்து மாவட்டக் கழகத்திற்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அவை ஒன்றியம், பேரூர், நகர, வார்டு, கிளைக் கழகங்கள் வழியே செயல்படுத்திட வேண்டும். விரிவான செயல்பாடுகளுக்காகவும், பணிச் சுமைகளைப் பகிர்ந்து கொள்வதற்காகவும், அண்மையில் சில மாவட்டக் கழக நிர்வாகங்கள் பிரிக்கப்பட்டன.

வெற்றிக்கரமாக
தற்போது தமிழகத்தில் 77 கழக மாவட்டங்கள் உள்ளன. இவையே தேர்தல் களத்தை எதிர்கொள்வதற்கான மாவட்டங்களாகும். நிர்வாக வசதிக்காக மேலும் மாவட்டங்களைப் பிரிப்பது என்பது, தேர்தல் களத்தில் கழகம் மகத்தான வெற்றி பெற்ற பிறகு நடைபெறும். எனவே, அவரவர் மாவட்டக் கழகத்தின் கீழ் நிர்வாக அமைப்புகளில் ஒருங்கிணைந்தும் கிராம சபை / வார்டு கூட்டங்களை வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

நாளொன்றுக்கு
கூட்டங்களை நடத்துவதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது வகுக்கப்பட்டிருக்கிறது. அதனைச் சரியாகவும் முறையாகவும் பின்பற்றிட வேண்டும் என உங்களில் ஒருவனான நான் விரும்புகிறேன். காலையிலேயே கிராமம் / வார்டுகள் வாரியாக வீடு வீடாகச் செல்லுதல்; குறைந்தபட்சம் தினமும் ஐந்நூறு வீடுகளுக்குச் செல்ல வேண்டும்.

ஸ்டாலின் அறிவுறுத்தல்
பதாகைகள், சுவரொட்டிகள் என எதிலும் பெரியார், அண்ணா, கலைஞர், கழகத் தலைவர் தவிர வேறு யாருடைய படங்களும் இடம்பெறக் கூடாது.
பகுதி, ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து இடங்களுக்கும் முழுமையாகச் சென்று சந்திப்பு நடத்திட வேண்டும். (பத்து நாட்களில் அனைத்து வார்டு, ஊராட்சிகளை முழுமையாக சந்தித்து இருக்க வேண்டும்). குரல் வாக்கெடுப்பு மூலம், ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற தீர்மானத்தைப் பலத்த ஒலியுடன் நிறைவேற்ற வேண்டும்.

குற்றப்பத்திரிகை
கழகத்தின் சார்பில் வழங்கப்படும் தொப்பிகள், ஆட்சி மீதான குற்றப்பத்திரிகைகள் ஆகியவற்றை விநியோகம் செய்ய வேண்டும்.தி.மு.க.வுடன் இணையவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, விருப்பமுள்ளோர் 9171091710 என்ற எண்ணை அழைக்க வேண்டும் என்பதையும் அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.

வேண்டுகோள்
வீட்டுக்கு ஒரு கையடக்க நாட்காட்டி மற்றும் மொபைல் ஸ்டிக்கர் வழங்க வேண்டும். கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறுவதை பொதுமக்கள் அறியும் வகையில் முக்கிய இடங்களில் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டும். அனைத்து நிகழ்வுகளையும் சமூக ஊடகத் தொடர்பாளர் மூலமாக மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, வெற்றிப் பாதைக்கான முதற்கட்டப் பயணத்தைக் கழகத்தினர் அனைவரும் தொடர்ந்திட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
-
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர்











Click it and Unblock the Notifications