எஸ்.சி மாணவர்களுக்கு 5 ஆண்டுகளில் ரூ.59,000 கோடி கல்வி உதவித் தொகை- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: எஸ்.சி. மாணவர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ59,000 கோடி கல்வி உதவித் தொகை (Post matric scholarship scheme) வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகள் தொடர்பாக பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

4 கோடி பட்டியலின மாணவர்கள் 10-ஆம் வகுப்பிற்குப் பிறகு கல்வியைத் தொடரும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.59,000 கோடியை கல்வி உதவித் தொகையாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ரூ.35,534 கோடி (60%) மத்திய அரசு நிதியில் இருந்தும் மீதமுள்ள தொகை மாநில அரசு நிதியிலிருந்தும் வழங்கப்படும். பத்தாம் வகுப்புக்குப் பிறகு கல்வியைத் தொடர முடியாமல் இருக்கும் 1.36 கோடி ஏழை மாணவர்கள், அடுத்த ஐந்து வருடங்களில் உயர் கல்வி அமைப்புக்குள் கொண்டு வரப்படுவார்கள் என மதிப்பிடப்படுகிறது.பட்டியல் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் பத்தாம் வகுப்புக்கு பிறகு கல்வியைத் தொடர்வதை ஊக்கப்படுத்துவதற்காக PMS-SC என்னும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
திரைப்படப் பிரிவு, திரைப்படத் திருவிழா இயக்குநரகம், இந்தியாவின் தேசிய திரைப்படக் காப்பகம், இந்தியக் குழந்தைகள் திரைப்படச் சங்கம் ஆகியவற்றை தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்துடன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாட்டில் ஆண்டுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதால், உலகளவில் மிகப் பெரிய சினிமா தயாரிப்பு நாடாக இந்தியா உள்ளது. இந்த சினிமாத்துறை தனியார் துறையால் வழிநடத்தப்படுகிறது. சினிமாத்துறைக்கு உதவும் உறுதியை நிறைவேற்றுவதற்காக திரைப்படப்பிரிவு, திரைப்படத்திருவிழா இயக்குநரகம், இந்தியாவின் தேசியத் திரைப்படக் காப்பகம், இந்தியக் குழந்தைகள் திரைப்படச் சங்கம் ஆகியவற்றை தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்துடன் இணைக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இந்த இணைப்பின் மூலம் திரைப்பட ஊடகப் பிரிவுகள் அனைத்தும் ஒரு நிறுவனத்தின் தலைமையில் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்து திறம்பட மேற்கொள்ளும். மேலும் இந்த இணைப்புக்கு உதவ பரிவர்த்தனை ஆலோசகர் மற்றும் சட்ட ஆலோசகர் நியமனத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சினிமா ஊடக நிறுவனங்களின் சொத்துக்கள் மற்றும் ஊழியர்களை மாற்றுவது, இணைப்பின் அனைத்து செயல்பாட்டு அம்சங்களையும் மேற்பார்வையிடுவது போன்றவற்றை பரிவர்த்தனை ஆலோசகரும், சட்ட ஆலோசகரும் வழங்குவர். இந்த இணைப்பின் போது, சம்பந்தப்பட்ட ஊடக நிறுவன ஊழியர்கள் நலன்கள் முழுவதும் பாதுகாக்கப்படும். எந்த ஊழியரும் பணிநீக்கம் செய்யப்பட மாட்டார். திரைப்பட ஊடகப் பிரிவுகள் அனைத்தும் இணைக்கப்பட்ட தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தொலைநோக்கு, இந்திய சினிமாவின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாக இருக்கும்.
டிடிஎச் சேவை வழிமுறைகள் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, டிடிஎச் லைசென்ஸ் 20 வருட காலத்துக்கு வழங்கப்படும். அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டித்துக் கொள்ளலாம். காலாண்டுக்கு ஒருமுறை லைசன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும் .டிடிஎச் உள்கட்டமைப்பு வசதிகள் டிடிஎச் நிறுவனங்களிடையே பகிர்ந்து கொள்ளப்படவும் டிடிஎச் சேவை வழிமுறைகள் திருத்தம் வழிவகை செய்கிறது. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட டிடிஎச் சேவை வழிமுறைகளின் படி இந்த முடிவு அமலுக்கு வரும்.
இந்தியா - பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையே திருத்தியமைக்கப்பட்ட விமானச் சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட அனுமதி வழங்கப்பட்டது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கிடையே திருத்தியமைக்கப்பட்ட விமானச் சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட அனுமதி வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications