மிஸ்டர் சீமான்! சைவம், வைணம்தான் தமிழர் மதமா? சங்ககால சமணம், புத்தம், ஆசீவகம் எல்லாம்?-பேரா.அருணன்
சீமான் புண்ணியத்தில் தமிழரின் மதம் பற்றிய விவாதம் கிளம்பியிருக்கிறது."சைவமும் வைணவமுமே தமிழரின் மதங்கள்" என்று அவர் தீர்ப்புச் சொல்லியிருக்கிறார். அது மட்டுமா, "கிறிஸ்தவமும் இஸ்லாமும் தமிழரின் மதங்கள்அல்ல. கிறிஸ்தவம் ஐரோப்பிய மதம், இஸ்லாம் அரேபிய மதம்" என்றும் கூறியிருக்கிறார். சரித்திர ஞானத்திற்கும் சீமானின் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
தமிழரின் வரலாறை சங்க காலம், களப்பிரர் காலம், சாம்ராஜிய காலம், நாயக்கர் காலம், ஆங்கிலேயர் காலம், நவீன காலம் எனப் பிரிக்கலாம். சங்க இலக்கியமாகிய எட்டுத்தொகையும் பத்துப் பாட்டும் சங்க கால வாழ்வை எடுத்துரைக்கின்றன. அதில் தமிழரின் மத வாழ்வும் வருகிறது. அதில் நடுகல் வழிபாடு, கொற்றவை வழிபாடு, முருக வழிபாடு போன்றவை உள்ளன. அதாவது அப்போதே தமிழரின் மத வாழ்வு பன்மைத் தன்மையோடுதான் இருந்திருக்கிறது.
போதாக்குறைக்கு வேத மதத்தின் அடிப்படைக் கூறாகிய வேள்வி வழிபாடு பற்றியும் வருகிறது. சங்க காலத்தின் பிற்பகுதியில் தோன்றியதாகக் கருதப்படும் திருமுருகாற்றுப்படை முருகனை சுப்பிரமணியனாக, (சுப் பிராமணியனாக) வேத மதக் கடவுளாக உருமாற்றம் செய்த வேலையைக் குறிக்கிறது. தமிழனுக்கு சமணம், புத்தம், ஆசீவகம் போன்ற மதங்களும் தெரியும் என்பதற்கும் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன. ஆக இத்தனை மதங்களும் சங்க காலத்திலேயே வந்து விட்டன.
தமிழரின் தாய் மதத்திற்கு திரும்புவது என்றால் இவை அனைத்திற்கும் திரும்ப வேண்டும். திரும்புவோமா? சீமான் குறிப்பிடுகிற சைவம், வைணவம் பற்றி களப்பிரர் காலத்து இலக்கியமாகிய மணிமேகலையில்தான் வருகிறது. அங்குள்ள சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதையில் "சைவவாதி" வருகிறார். அவருக்கான இலக்கணமாக "இறைவன் ஈசன் என நின்றவர்" என்கிறது. அதுபோல "வைணவவாதி" வருகிறார். அவரை "நாரணன் காப்பு" என்றவர் என்கிறது. பல சமயத்தவரோடும் விரிவாக வாது செய்த மணிமேகலை இந்த இருவரோடும்பெரிதாக வாது செய்யவில்லை. புத்தவாதியாகிய மணிமேகலை சமணவாதி, வேதவாதி, பூதவாதி போன்றவரோடுதான் தீவிரமாக வாது செய்கிறாள். அதிலிருந்தே உணரலாம் களப்பிரர் காலத்தில் சைவம், வைணவம் அல்ல, சமணம், புத்தமே தமிழகத்தின் பெரு மதங்கள் என்பதை.

அதனால்தான் புத்த இலக்கியமாகிய மணிமேகலையும், சமண இலக்கியமாகிய சிலப்பதிகாரமும் இந்தக் காலத்தில் தோன்றின. களப்பிரர் காலந்தொட்டு சாம்ராஜிய காலம் வரை இங்கே பெரு மதங்களாக இருந்தவை சமணமும் புத்தமுமே என்பதற்கு இந்த இலக்கிய ஆதாரங்களோடு தமிழகம் முழுக்க கிடைக்கிற சமணப் படுகைகளும், தீர்த்தங்கரர்கள் புடைப்புச் சிற்பங்களும், புத்தர் உருவங்களும் கூடுதல் சாட்சியங்கள். தமிழரின் சொந்த மதங்களுக்குத் திரும்புவது என்றால் சமணம், புத்தத்திற்கு திரும்ப வேண்டும். தயாரா சீமான்?
சாம்ராஜிய காலத்தில்தான் சைவமும் வைணவமும் இங்கே தழைத்தோங்கின. அவற்றுக்கு ஆதாரமாக அக் காலத்தில் எழுந்த மூவர் தேவாரமும், நாலாயிர திவ்ய பிரபந்தமும் சாட்சிகளாக இருக்கின்றன. கூடவே மாமன்னர்கள் எழுப்பிய பிரமாண்ட சிவன், விஷ்ணு கோயில்கள் நிற்கின்றன. ஆனால் இந்த மதங்களுக்குள் வேத மதம் எனப்பட்ட பிராமணிய மதம் புகுந்திருந்தது. களப்பிரர் காலத்தில் தனித்திருந்த அந்த மதம் இப்போது சைவம், வைணவத்தில் கலந்திருந்தது. தேவாரம், திவ்ய பிரபந்தமானது சமண, புத்த எதிர்ப்பு பேசுவது மட்டுமல்லாது வேள்வி எனும் யாக வழிபாட்டை போற்றுகின்றன, வருணாசிரமத்தை நிலைநிறுத்துகின்றன. அதன் நடைமுறை வெளிப்பாடே பிராமணர்களே அந்தக் கோயில்களின் அர்ச்சகர்களாக, சமஸ்கிருதமே அர்ச்சனை மொழியாக ஆகியிருப்பது.
இந்து மதத்திலிருந்து சைவம், வைணவத்திற்கு திரும்பலாம் என்கிறாரே சீமான் அப்படித் திரும்பினால் அந்த மதங்களில் உள்ள சாதியம் ஒழிந்திடுமா? சமஸ்கிருத ஆதிக்கம் தொலைந்திடுமா? என்ன உத்திரவாதம் இருக்கிறது? ஏற்கெனவே இந்து மதத்தில் அந்த லட்சணங்களோடுதானே அவை இருக்கின்றன! அதே லட்சணங்களோடுதானே அவை வெளியேறி வரும்! சாம்ராஜிய காலத்தின் இறுதிக்கட்டத்திலேயே இங்கே இஸ்லாம் வந்துவிட்டது. அது வணிகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது, பாண்டியனின் படையிலே முஸ்லிம்கள் இருந்தார்கள். அவர்கள் படையெடுத்துவந்த மாலிக்காபூருக்கு உதவவில்லை. மாறாக சொந்த மண்ணுக்கும் மன்னனுக்கும் விசுவாசமாக இருந்தார்கள். இஸ்லாம் அரேபியாவில் உதித்த மதம்தான். ஆனால் அதுவும் தமிழரின் மதமே. தமிழர்கள் ஏற்றுக்கொண்டு அதற்கு மாறியதால் அதுவும் தமிழரின் மதமே..
நாயக்கர் காலத்தில் கிறிஸ்தவம் வந்தது. அது ஐரோப்பாவில் உதித்த மதம் அல்ல. அரேபியாவுக்கு அருகில் உள்ள பெத்லகேமில் பிறந்தவர்தான் இயேசு கிறிஸ்து. அவரை ஒரு நபியாக, இறைத்தூதராக இஸ்லாமும் கூறுகிறது. அத்தகைய கிறிஸ்தவத்தைதான் ஐரோப்பியர்கள் ஏற்றுக்கொண்டார்கள். தங்களது வாழ்வியல் முன்னேற்றத்திற்கு அந்த நாளில் அந்த மதமே ஏற்றது என நினைத்தார்களே தவிர பழைய கிரேக்க, ரோமானிய கடவுள்களையே வணங்கிக் கொண்டிருக்கவில்லை. உலகம் முழுக்க மனிதர்களின் மத வாழ்வானது பல மாற்றங்களைக் கண்டிருக்கிறதே தவிர யாரும் தாய் மதம் அல்லது மதங்கள் என்று கண்டுபிடித்து அவற்றுக்குத் திரும்பிப் போகவில்லை. இந்து மதம் எனப் பெயரிடப்பட்டது பின்னாளில் வந்ததுதான், அது ஆங்கிலேயரால் சட்டபூர்வமாக்கப்பட்டதுதான். ஆனால் அதுவே பன்மைத்தன்மை உடையது. அதற்குள் வேத மதம் கலந்த சைவமும் வைணவமும் மட்டுமல்ல நாட்டார் தெய்வ வழிபாடும் உள்ளது.சைவம், வைணவத்திற்கு திரும்புவது என்றால் அந்த வழிபாடு என்னாகும்? அதைக் கைவிடச் சொல்கிறாரா சீமான்?
குல தெய்வக் கோயில்களில் ஆடு, கோழி பலியிட்டு உண்ண ஜெயலலிதா தடை போட்டதுதான் நினைவுக்கு வருகிறது. சீமான் சைவம், வைணவத்திற்குத் திரும்பச் சொல்வது அவர் போற்றிய அந்த "ஈழத்தாயின்" வழியில்தான் போலும்! "கிறிஸ்தவமும் இஸ்லாமும் தமிழர் மதங்கள் அல்ல" என்பது அவற்றை பின்பற்றுகிறவர்கள் தமிழர்கள் அல்ல எனச் சொல்வதில்தான் முடியும். ஒரு தேசியஇனமானது பிரதானமாக மொழி அடிப்படையில் அடையாளப்படுத்தப்படுவதே தவிர மதஅடிப்படையில் அல்ல. அப்படிச் செய்வது ஆர்எஸ்எஸ் மதவாதத்தின் மறுபதிப்பாகவே இருக்கும். இன்றைய தேவை இந்து மதத்திலிருந்து வெளியேறுவது அல்ல. மாறாக இந்து மதத்தில் உள்ள வேத மதத்தின் பிராமணியக் கூறுகளைக் களைந்தெறிவதே. அந்த வகையில்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள், அன்னைத் தமிழில் அர்ச்சனை எனும் திமுக அரசின் முன்னெடுப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இதன் அடுத்த கட்டமாகப் பெண்களும் அர்ச்சகர்களாக, புரோகிதர்களாக வேண்டும் எனும் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அதுபோலவே இந்து மதத்தில் உள்ள ஜோதிடம், ராசிபலன், நல்லநாள் கெட்டநாள், பேய் பிசாசு, பில்லிசூனியம் போன்ற மூடநம்பிக்கைகளை ஒழிக்கவும் போராட வேண்டும். சீமானின் தாய் மதங்கள் கண்டுபிடிப்பும், அவற்றுக்குத் திரும்பச் சொல்வதும் இந்தப் போராட்டத்திலிருந்து மக்களை திசைதிருப்பும் தந்திரமாக இருக்கிறது. அதிலும் ஓர் அரசியல்கட்சித் தலைவர் இதைச் செய்வது நமது அரசியல் சாசனம் வகுத்துள்ள மதச்சார்பற்ற அரசியல் மற்றும் அரசுக்கு பெரும் கேடு விளைவிப்பதாகும். எந்தவொரு மதத்தையும் பின்பற்றுகிறஅல்லது பின்பற்றாதிருக்கிற உரிமையை அது வழங்கியுள்ளது. அதாவது மக்களுக்கு மத உரிமை மற்றும் மனசாட்சி உரிமை உண்டு. ஆனால் அரசானது அனைத்து மதங்களிலிருந்து விலகியிருக்க வேண்டும். இதுவே மதச்சார்பற்ற அரசு என்பதன் இலக்கணம்.
அதற்கான மதச்சார்பற்ற அரசியலைக் கடைப்பிடிக்க வேண்டிய ஓர் அரசியல் கட்சியே, அதன் தலைவரே தமிழரின் மதங்கள் என்று இரண்டை மட்டும் பரிந்துரைப்பது பக்கா மதச்சார்பு அரசியலாகும். அது சங் பரிவார பஜனையில் தெரிந்தோ தெரியாமலோ சேருவதாகும்.
நன்றி: செம்மலர், நவம்பர் 2021
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications