For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீங்கள் எந்தப் பக்கம்? -பகுதி 2: "எரியும் விளைநிலங்கள்" - பேராசிரியர் சுப. வீரபாண்டியன்

Google Oneindia Tamil News

மக்களின் வெவ்வேறு பிரிவினர் நடத்தும் போராட்டங்களை, அரசுகளும் வெவ்வேறு விதமாகக் கையாள்வதை நாம் நடைமுறையில் பார்க்கிறோம்.

ஓர் அரசு நல்ல அரசாக இருக்குமெனில், போராட்டம் தொடங்கும் முன்பே அவர்களை அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கைகளில் நியாயம் இருக்குமானால் அதனை ஏற்று நடவடிக்கை எடுக்கும். இல்லையெனில் தன் இயலாமையை எடுத்துச் சொல்லும். அது பயனற்றுப் போய்ப் போராட்டம் தொடங்கிவிட்டால், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நிலைமை கட்டுக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும்.

சில அரசுகள், போராட்டத்தை நிறுத்திவிட்டு வந்தால்தான் பேச்சுவார்த்தைக்கே வர முடியும் என்று சொல்லிவிடும். போராட்டத்தை அடக்குமுறை கொண்டு ஒடுக்க நினைக்கும் அரசுகளும் உலகில் உண்டு.

Prof. Subavee Article on Delhi Farmers Protest

இவை எல்லாவற்றையும் விட ஒரு மோசமான அரசு இருக்குமானால், அது, போராட்டக்காரர்கள் இடையில், வன்முறையாளர்களை ஊடுருவ வைத்து, சில கலவரங்களை ஏற்படுத்தி, போராளிகளின் உயிர்களைப் பறிக்கும்வரையில் செல்லும்.

தில்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்தை மத்திய அரசு கையாளும் வழிமுறைகளைப் பார்த்தால், கடைசி வழியைத்தான் அது பின்பற்றுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது! நம் ஐயத்தை, ஜனவரி 26 அன்று, தில்லி, செங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வு மேலும் வலுப்பெறச் செய்கிறது.

தில்லி மாநகரின் எல்லை பகுதிகளில்தான் விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி நடைபெற்றது. மாநகருக்குள் வருவதற்கு எந்த விவசாயியும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் 200 பேர் மட்டும், எந்தத் தடையும் இல்லாமல் செங்கோட்டைக்கு வந்துவிடுகின்றனர். அங்கு நின்ற காவல்துறையினர் ஏன் அவர்களைத் தடுக்கவில்லை?

வந்தவர்கள் நேரடியாக அந்தக் கட்டிடத்தின் மேலேறி, சீக்கியர்களின் 'கால்சா ' கொடியை ஏற்றுகின்றனர். விவசாயிகளின் பேரணி நடக்கும் இடத்த்தில் தடியடி நடத்திக் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசிய காவல்துறையினர், இவர்கள் மேலே ஏறிக் கொடியைக் கட்டும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர், எப்படி?

அதுவும் அவர்கள் கட்டிடத்தின் மேல் ஏறும் காட்சியை உற்றுப் பார்த்தால், ஒரு பழைய காட்சி நம் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். ஆம், 1992 டிசம்பர் 6 ஆம் தேதி, பாபர் மசூதிக் கட்டிடத்த்தில் சிலர் ஏறிய காட்சிதான்!

இப்போது விவசாயிகள் அங்கு கால்ஸா கொடியை ஏற்றியவர்கள் யாராக இருக்கக்கூடும் என்பதைத் தெளிவாகத் தெரிவித்துள்ளனர். நடிகராகவும், வன்முறைக் கூட்டம் ஒன்றின் தலைவனாகவும் உள்ள தீப் சித்துவின் ஆள்கள்தான் அக்கொடியை ஏற்றியுள்ளனர் என்கின்றனர் விவிசாயிகள். அந்த தீப் சித்துவும், பிரதமர் மோடியும் அருகருகே நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வெளியிட்டுள்ளார். ஜனவரி 26 அன்று பின்புலத்தில் என்ன நடந்திருக்கும் என்பது இன்று எல்லோருக்கும் புரிந்துவிட்டது.

தொடக்கம் முதலே, விவசாயிகள் போராட்டத்தை அரசு எப்படிக் கையாண்டது என்று பார்க்க வேண்டும். அதற்கும் முன்பாக, 1947இல் விடுதலை அடைந்த நாள் தொடங்கி, விவசாயம் எப்படி நம் நாட்டில் படிப்படியாக நலிந்து வருகிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

"பாஜகவுக்கு மாற்று".. புதிய கட்சி தொடங்குகிறார் அர்ஜுன மூர்த்தி.. ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு!

விடுதலை பெற்ற நேரத்தில், இந்தியா தொழில்துறையில் முன்னேறிய நாடு அன்று. முழுக்க முழுக்க ஒரு விவசாய நாடு. எனவே முதல் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களும், விவசாயத் துறையில் தன்னிறைவு பெறுவதையே இலக்காகக் கொண்டிருந்தன. ஆனால் 1980களிலேயே நிலை சற்று மாறுபட்டது. 1990 உலக வர்த்தகக் கழக ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பம் இட்டபிறகு, விவசாயத்தை மெல்லக் கைவிடத் தொடங்கியது. எனவே விவசாயத்தின் வீழ்ச்சி தொடங்கி நாளாயிற்று. ஆனால் அது ஒட்டுமொத்தமாக, கார்ப்பரேட் என்னும் பெரு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் கொடுமை இப்போது தொடங்கியுள்ளது.

21ஆம் நூற்றாண்டு தொடங்கிய பிறகு, விவசாயத்தின் வீழ்ச்சி எவ்வளவு விரைவாக இருந்தது என்பதையும், பாஜக ஆட்சி வந்தபிறகு, நாடே ஒட்டுமொத்தமாகப் பெருநிறுவனகளிடம் விற்கப்படுகிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, நாட்டின் விவசாயக் குடும்பங்களின் ஆண்டு வருவாயைக் கணக்கிடும் , தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, சில செய்திகளைப் பார்க்கலாம். 2014 ஆம் ஆண்டும் விவசாயிகள் கடனில்தான் இருந்தனர். ஆனால் அது இப்போது இரண்டு மடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளது என்கிறது அந்த அறிக்கை. இந்தியாவில் உள்ள ஒரு விவசாயக் குடும்பத்தின் சராசரிக் கடன் அளவு, 2014 இல் 47000 ரூபாயாக இருந்துள்ளது. ஐந்தாண்டு காலத்தில் அது, 1,20,000 ரூபாயாகக் கூடியுள்ளது. இப்போது இன்னும் மிகுதியாகியிருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

2013 வரையில், சமையல் எண்ணெய் உற்பத்த்யில் நம் நாடு தன்னிறைவு பெற்ற நாடாகத்தான் இருந்தது. இப்போது, பாஜக அரசின் வர்த்தகக் கொள்கையால், சமையல் எண்ணையில் கூட 63% இறக்குமதியை நம்பியுள்ளோம் என்பது கசப்பான உண்மை.

ஐந்து வருடங்களில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த மோடி, விவசாயத் துறைக்கு 35,984 கோடியும், தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு 38,500 கோடியும் மட்டுமே ஒதுக்கீடு செய்தார். ஆனால், தனது முதல் வருடத்த்திலேயே, கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு 5,00,823 கோடி வரித் தள்ளுபடி செய்ததுடன், அடுத்த நிதிநிலை அறிக்கையிலும் 5, \51,000 கோடி வரியைத் தள்ளுபடி செய்தார். இந்த அரசு பெருநிறுவனங்களுக்கான அரசு என்பதை இவ்வாறு ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு துறையிலும் இன்றைய அரசு மெய்ப்பித்து வருகின்றது.

இப்போக்கின் தொடர்ச்சியாகத்தான், கடந்த அக்டோபர் மாதம் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. ஒன்று, விவசாய உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டம். இரண்டாவது, விவசாயச் சந்தைத் திருத்தச் சட்டம். மூன்றாவது, அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம்.

இங்கே எவையெல்லாம் அத்தியாவசிய விளைபொருள்கள் என்பதை நாம் நன்கு அறிவோம். ஆனால் அவற்றில் அரசு என்ன மாற்றம் செய்திருக்கிறது தெரியுமா? அரிசி, பருப்பு, தானியங்கள் மற்றும் உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி இவற்றையெல்லாம் அத்தியாவசியப் பொருள்கள் இல்லை என்று சொல்லி, அந்தப் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டது. அப்படி அவற்றைப் பட்டியலிலிருந்து நீக்குவதால் என்ன நடக்கும்? அந்தப் பட்டியலில் உள்ளவரை, உருளையை, வெங்காயத்தை யாரும் தேக்கி வைக்க முடியாது, பதுக்க முடியாது. உடனுக்குடன் விற்பனை செய்தாக வேண்டும். ஆனால் இன்று அவற்றை அந்தப் பட்டியலிலிருந்து நீக்கி விட்டதால், யார் வேண்டுமானாலும் பதுக்கி வைத்துக் கொண்டு, விலை உயர்ந்த பிறகு விற்பனை செய்ய முடியும். அதாவது, பதுக்கலுக்கு அரசாங்கமே சட்டப்பூர்வமான அனுமதி வழங்குகிறது.

ஆனால் மத்திய அரசு என்ன சொல்கிறது? நாங்கள் விவசாயிகளுக்கு நன்மை செய்திருக்கிறோம். அவர்கள் இனி எந்தப் பொருளையும், குளிர் அறைகளில் (cold storage ) தேக்கி வைத்துக்கொண்டு, விலை கூடுதலாக இருக்கும் நேரத்தில் கூடுதல் விலைக்கு விற்று நல்ல லாபம் பார்க்கலாமே என்கிறது. விவசாயிகள் பலருக்கு வீடே இல்லையே! வீடே இல்லாத விவசாயி, டன் கணக்கில், காய்கறிகளை, தானியங்களைத் குளிர்பதன அறையில் தேக்கி வைத்துப் பிறகு விற்பனை செய்ய முடியுமா?

இன்னொன்று, இப்போதுள்ள நடைமுறைப்படி, குறைந்தபட்ச ஆதரவு விலை (minimum supporting price) என ஒன்றை அரசு அறிவிக்கும். எங்கிருந்து? வேளாண் விளைபொருள் ஒழுங்குமுறைக் கூடம் என ஒன்று உள்ளது. இப்போதும் அது இருக்கிறது. புதிய சட்டம் வந்தபிறகும் அது இருக்கும். ஆனால் இனிமேல் அந்த ஒழுங்குமுறைக் கூடம் மட்டும்தான் விலையை நிர்ணயிக்கும் என்பதில்லை, தனியாரும் விலையை நிர்ணயிக்கலாம். அதுதான் இதில் உள்ள செய்தி.

எடுத்துக்காட்டிற்கு ஒன்று... ஒரு மூட்டைக்கு 500 ரூபாய் என்று அக்கூடம் விலை நிர்ணயம் செய்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த விலையும் போகிற போக்கிலே நிர்ணயிக்கப்படுவதில்லை. அப்பொருளை உற்பத்தி செய்யச் செலவு என்ன ஆகும், குறைந்த லாபம் எவ்வளவு வைக்கலாம் என்றெல்லாம் பொருளாதார வல்லுநர்களைக் கொண்டு அந்த விலை முடிவு செய்யயப்படும். அப்படி விலையை அவர்கள் முடிவு செய்துவிட்டால், விவசாயிகளுக்குப் பெரிய லாபம் இல்லையென்றாலும், நட்டம் இல்லாமல் அது விற்பனையாகி விடும். அதற்குப் பிறகு யாராவது 600 ரூபாய்க்கோ, அதற்கும் கூடுதலாகவோ கேட்டால் தனியாருக்கும் கொடுக்கலாம். கொடுக்கவே கூடாது, அரசிடம்தான் விற்க வேண்டும் என்பதில்லை. அப்படியில்லாமல், எல்லோரும் 400 ரூபாய்க்கு மட்டுமே கேட்டால், அவர்களுக்குக் கொடுக்காமல்,அரசிடம் 500 ரூபாய்க்கு கொடுத்துவிடலாம். விவசாயிக்கு குறைந்த லாபமாவது கிடைத்துவிடும்.

இப்போது புதிய சட்டம் வந்தபின் இந்த நிலை மாறப்போகிறது. குறைந்த ஆதரவு விலை என்பதைக் காலப்போக்கில் கைவிட்டு, எல்லாவற்றையும் தனியார் நிறுவனங்கள் பார்த்துக் கொள்ளும் என்று சொல்லப்போகின்றனர். அவர்கள் என்ன செய்வார்கள்? என்ன விலைக்குக் கேட்பார்கள்?

இதற்கு மாற்றாக என்ன சொல்லப்படுகிறது தெரியுமா? அப்படிக் குறைந்த விலைக்குக் கேட்பவர்களிடம் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. விவசாயிகளே, தங்கள் உற்பத்திப் பொருள்களை இந்தியாவில் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று விற்றுக் கொள்ளலாம் என்கின்றனர்.

எந்த விவசாயியால் மாநிலம் விட்டு மாநிலம் சென்று பொருள்களை விற்பனை செய்ய முடியும்? பரமக்குடியில் உற்பத்தியாகும் ஒரு விளைபொருளை எந்த விவசாயியால் பஞ்சாபிற்குக் கொண்டு போய் விற்பனை செய்ய முடியும்? எரியோட்டில் உற்பத்தியாகும் பொருளை, ஓர் ஏழை விவசாயியால் ஹரியானாவில் கொண்டுபோய் விற்பனை செய்ய முடியுமா? அவையெல்லாம் பெரிய நிறுவனங்களுக்குத்தான் இயலும்.

அந்தப் பெரிய நிறுவனங்கள் என்ன செய்வார்கள்? விவசாயிகளிடம் மொத்தமாகப் பொருள்களை வாங்கி, அவற்றைப் பதுக்கி வைத்து, எப்போது அவற்றின் விலை கூடுகிறதோ அப்போது அவற்றைப் பெரிய விலைக்கு விற்று விடுவார்கள். இதனால் இரண்டு பேருக்கு நட்டம். விவசாயிகளுக்கும் நட்டம், நுகர்வோர், அதாவது அதனை வாங்கும் மக்களுக்கும் நட்டம். கார்பொரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே பெரிய லாபம்! எனவே பெரிய நிறுவனங்கள்தான் வாழும். சிறிய நிறுவனங்கள், விவசாயிகள் எல்லோரும் காணாமல் போய்விடுவார்கள். இப்போதே ஊரெல்லாம் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களைத்தான் பார்க்க முடிகிறதே அல்லாமல், பழைய அண்ணாச்சி கடைகளைக் காண முடியவில்லையே! இனி இந்த நாட்டில் அம்பானிகளும், அதானிகளும்தானே கொடிகட்டிப் பறப்பார்கள் ? சுருக்கமாகச் சொல்வதென்றால், விவசாயிகளுக்கு ஆதரவு என்னும் நிலையிலிருந்து அராசாங்கம் விலகிக் கொண்டு, விவசாயிகளே, முடிந்தால் நீங்கள் தனியாரோடு போட்டி போட்டு வெற்றியடையப் பாருங்கள் என்கிறது!

இவற்றையெல்லாம் எதிர்த்துத்தான் இன்று விவசாயிகள் தில்லியில், குளிரிலும், மழையிலும் கடந்த இரண்டு மாதங்களாகப் போராடுகின்றனர். ஏற்கனவே 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்து விட்டனர்.

இறுதியாக இங்கே நாம் இன்னொரு செய்தியையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இது வெறும் விவசாயிகளின் சிக்கல் மட்டுமில்லை. கொள்முதல், விநியோகம் என்று இரண்டிலும் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் மாற்றங்கள், இந்திய ஏழை மக்களின் வாழ்க்கையை மொத்தமாக நாசமாக்கப் போகிறது.

ஆம், இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India ) என்பதே எதிர்காலத்தில் இருக்குமா என்ற நிலை இந்தச் சட்டங்களால் ஏற்பட்டுள்ளது. அதானி போன்ற கோடீசுவரர்களின் பெருநிறுவனக் கிடங்குகளை நோக்கி விளைபொருள்கள் எல்லாம் போகப்போகின்றன. பிறகு இந்திய உணவுக் கழகத்திற்கு என்ன வேலை? அந்தக் கழகமே இல்லையென்றால், அதன் பிறகு, அதனிடமிருந்து பொருள்களை வாங்கி அரசுகள் மக்களுக்கு அளிக்கும் நியாயவிலைக் கடைகள் (ரேஷன் கடைகள்) என்ன ஆகும்? இந்த நிலையை நோக்கித்தான் நம் நாட்டை மத்திய அரசு கொண்டு செலுத்திக் கொண்டுள்ளது.

இது வெறும் கற்பனைக் குற்றச்சாற்று இல்லை. ஒரே ஒரு செய்தியைச் சான்றாக நாம் பார்க்கலாம்.

மத்திய அரசின் இந்த மூன்று வேளாண் சட்டங்களும், கடந்த செப்டம்பரில் மாநில, மக்களவைகளில் அறிமுகம், செய்யப்பட்டு, அக்டோபரில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கையொப்பத்தைப் பெற்றன. ஆனால், கடந்த ஆகஸ்ட் 13 அன்றே, குஜராத்தில் உள்ள "நகர்ப்புற நிர்வாக நிறுவன மையம்" (Centre for urban institute for management ) என்னும் இடத்தில் பேசும்போது, அதானி இச்சட்டங்கள் வரப்போவது பற்றிப் பேசுகின்றார். அவருக்கு எப்படி அவ்வளவு முன்கூட்டியே தெரியும்?

இந்தியாவில் உள்ள 718 மாவட்டங்களின் விவசாயிகளையும் பெரு நிறுவனங்களின் அங்கங்களாக இணைத்து விட்டால், நாடும், விவசாயமும் முன்னேறி விடும் என்றும், அதனை இன்றைய மத்திய அரசு சட்டமாகக் கொண்டுவந்து செயல்படுத்தப் போகிறது என்றும் பேசியுள்ளார்.

அது மட்டுமின்றி, அதானி நிறுவனத்தின் ஆகப் பெரிய கிடங்குகளும் தயாராகி விட்டன. அதுகுறித்த செய்திகளை விரிவாக அறிந்துகொள்ள விரும்புகின்றவர்கள் அவர்களின் இணையத் தளத்தில் (Adanai Agri Logistics ) உள்ள பகுதியைப் பார்த்துத் தெளிவு பெறலாம்.

விவசாயிகளின் போராட்டம் ஓயவில்லை.

ஒடுக்கும் மத்திய அரசா, போராடும் விவசாயிகளா - யார் வெல்ல வேண்டும் என்பதையும், நாம் யார் பக்கம் என்பதையும் ஒளிவு மறைவின்றி ஒவ்வொருவரும் வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது!

நான் விவசாயிகளின் பக்கம்! நீங்கள் எந்தப் பக்கம்?

(கேள்வி தொடரும்)

பகுதி [1, 2]

English summary
Prof. Subavee Article on Delhi Farmers Protest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X