நம்பிக்கை, மூடநம்பிக்கை வித்தியாசம்... தமிழரின் மருத்துவ அறிவு... தொ. பரமசிவன் நமக்கு நடத்திய பாடம்!
சென்னை: நம்பிக்கை என்பது என்ன? மூடநம்பிக்கை என்பது என்ன? இரண்டுக்குமான வித்தியாசம் எது? என மறைந்த பேராசிரியர் தொ. பரமசிவன் விரிவான பாடமே நடத்திவிட்டுப் போயிருக்கிறார்.
2012-ம் ஆண்டு கீற்று இணையதளத்துக்கு பேராசிரியர் தொ.பரமசிவன் அளித்த விரிவான பேட்டியில் இடம்பெற்றுள்ள கருத்துகள்:
நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம்? இதுதான் என் தெய்வம், வழிகாட்டுகிறது என்று நம்புவது நம்பிக்கை.

அந்த நம்பிக்கைக்கு எங்கே அதிகாரம் குறுக்கே வருகிறதோ அங்கே மூடநம்பிக்கை பிறக்கிறது.
'உனக்காக நான் யாகம் பண்றேன், ஹோமம் பண்றேன்' என்று சொல்வது மூடநம்பிக்கை. அதாவது அர்ச்சகர் என்ற ஒரு அதிகாரம் இங்கே குறுக்கே வருகிறது.
நம்பிக்கை இயல்பானது. அதிகாலையில் வயல்வெளிக்குப் போகிற வழியில் சூரிய உதயத்தைப் பார்த்துவிட்டால், செருப்பைக் கழற்றி விட்டு கும்பிடு போடுகிறோம். அதை மூடநம்பிக்கை என்று சொல்ல முடியாது.
ஏனென்றால், அந்த சூரியன் இல்லையென்றால் பயிர் விளையாது. அது ஒரு நம்பிக்கை.
அதுவே பெரிய கோவிலாக உருவெடுத்து, அங்கே அர்ச்சகர் வரும்போது, மூடநம்பிக்கை பிறந்து விடுகிறது.
நம்பிக்கையில் அரசு அதிகாரம் மட்டுமல்ல, ஏதோ ஒரு ஆன்மீக அதிகாரம் குறுக்கே வந்து விட்டால் கூட, அது மூட நம்பிக்கையாகிவிடும்.
இன்றைக்கு இருக்கிற அறிவியல் என்பது Europian Science தான். அதை Pure Science என்று எங்களைப் போன்றவர்களால் ஒத்துக் கொள்ள முடியாது.
ஒரு வகையான சுரண்டல் நோக்கத்தை உள்ளடக்கியதாகவே அவர்களது அறிவியல் உள்ளது. எனவே இது மூடநம்பிக்கைக்கு எதிரான அறிவியல் அன்று. இன்றும் 13 என்ற எண்ணைப் பார்த்து அவர்கள் பயப்படுகிறார்களே!
இயற்கைக்கும் நமக்கும் உள்ள தொடர்பு அறுந்து கொண்டே போகிறது. குறிப்பாக ஆங்கில மருத்துவம் வந்ததினால் நிறைய தாவரங்களுக்கும் தமிழர்களுக்குமான தொடர்பு காணாமல் போய்விட்டது.
சித்த மருந்துக் கடையிலே இருக்கும் வேர்களை எத்தனை பெண்கள் இப்போது அடையாளம் காட்டுவார்கள்?
நான் அடையாளம் காட்டும் தாவரத்தை என் மகளோ, மருமகளோ காட்ட முடியாது. இயற்கைக்கும் நமக்கும் தொடர்பு அறுந்து கொண்டே வந்தது தான் ஆங்கில மருத்துவம் வளரக் காரணம்.
நம்முடைய குழந்தை மருத்துவ முறையிலே ரோசனை, கஸ்தூரி இவை முக்கியமானவை.
ரோசனை என்பது பசுவினுடைய அன்ட்ரினல் கிளாண்ட்.
கஸ்தூரி என்பது கஸ்தூரி மானுடைய அன்ட்ரினல் கிளாண்ட்.
இந்த கிளாண்ட்களை மருந்துகளோடு சேர்த்துக் கொடுத்தால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.
இந்த மருந்துகளை இன்று நாம் இழந்து போனோம். இப்படி உயிர் உலகத்தோடும் பயிர் உலகத்தோடும் நம் தொடர்பு அறுந்து கொண்டே வந்தது தான் காலனி ஆட்சி நமக்குச் செய்த மிகப் பெரிய கொடுமை; துரோகம். இப்போதுதான் நாம் யோசிக்கிறோம். ஆனாலும் இன்னுமும் நம்மிடையே பச்சை மரத்தை வெட்டும்போது யாராவது இரண்டு கிழவன் அல்லது கிழவி, 'ஏன் பச்சை மரத்தை வெட்டுறே' என்று கேட்கத்தான் செய்கிறார்கள்.
ஒரு திடப் பொருளாகத் தாவரங்களைப் பார்க்கிற வழக்கம் நம்மிடம் எப்பொழுதும் இருந்தது இல்லை.
நம்முடைய தாவரங்களில் இருந்து மருத்துவப் பயனை மீட்டெடுப்பதற்குரிய வழி நம்மிடையே இருக்கிறது.
ஐரோப்பியர்களிடையே அது இல்லை; குரோட்டன் தாவரத்தின் மருத்துவப் பயனை அவர்கள் இன்னமும் மீட்டெடுக்கவில்லை. நிச்சயமாக குரோட்டன் என்ற தாவரத்திற்கு, அது பிறந்த மண்ணிலே ஒரு மருத்துவப் பயன் இருந்திருக்க வேண்டும். ஐரோப்பியர்கள் நிறைய விஷயங்களைப் புதைத்துவிட்டுப் போய்விட்டார்கள். இன்றைக்கு இதை எங்கிருந்து மீட்டெடுக்க முடியுமென்றால் இலக்கியத்திலிருந்து மட்டும்தான் மீட்டெடுக்க முடியும்.
இன்னும் அமெரிக்கப் பல்கலைக் கழகத்திலே வரலாற்றுப் பாடம் மரியாதை இல்லாத பாடமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் அவர்களுக்கு வரலாறு கிடையாது.
அவர்களுடைய பார்வையெல்லாம் எதிர்காலத்திலேதான் அதிகமாக இருக்கிறது. பிற நாடுகளை அடிமை செய்வதற்கு ஏதுவாக, படையெடுக்கப் போகிற நாட்டைப் பற்றி அறிந்து கொள்வதற்காக மொழியியல் கொண்டு வந்தார்கள். இப்படிதான் குறுகிய காலத்தில் மொழியைக் கற்றுக் கொண்டு, தேசத்தின் கலாச்சாரத்தை அடிமைப்படுத்துவதற்கு உபயோகித்தார்கள். இவ்வாறு தொ. பரமசிவன் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications