சட்னி, சாம்பார் தேவையே இல்லை! ஒரு மாதம் கெடாத ரகசிய 'கருப்பு உளுந்து' இட்லி பொடி செய்முறை!
பொதுவாகவே நம் ஊர் வீடுகளில் அவசர காலங்களில் கைகொடுப்பது இட்லி பொடிதான். ஆனால், "சட்னி இல்லையா?", "சாம்பார் இல்லையா?" என அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு மத்தியில், இந்தப் பொடியை மட்டும் ஒருமுறை வைத்துப் பாருங்கள். சாதாரண வெள்ளை உளுந்துக்கு பதிலாக ஆரோக்கியம் நிறைந்த கருப்பு உளுந்தை வைத்து நாம் செய்யப்போகும் இந்த இட்லி பொடி, சுவையில் சட்னியை விட ஒருபடி மேலேயே இருக்கும்.
இந்த ஸ்பெஷல் பொடியை எப்படிச் செய்வது? அதன் நுணுக்கங்கள் என்ன? என்பதை விரிவாகப் பார்ப்போம்.

ஏன் கருப்பு உளுந்து இட்லி பொடி?
வெள்ளை உளுந்தை விட கருப்பு உளுந்தில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து மிக அதிகம். குறிப்பாகப் பெண்களுக்கு இடுப்பு எலும்பு வலுப்பெற இது பெரிதும் உதவும். அத்துடன் இதில் சேர்க்கப்படும் காஷ்மீரி மிளகாய் பொடிக்கு நல்ல நிறத்தையும், பூண்டு அபாரமான மணத்தையும் தருகிறது. முக்கியமாக பூப்பெய்த கூடிய வயதில் இருக்கும் சிறுமிகளுக்கு இந்த கருப்பு உளுந்தை எந்த வகையிலாவது கொடுக்க வேண்டும் என நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கருப்பு உளுந்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு இடுப்பு எலும்பு வலுவடைந்து பிரசவ காலத்தில் எளிதில், விரைந்து சுகபிரசவம் நடக்க உதவும்.
தேவையான பொருட்கள் (Ingredients List):
கருப்பு உளுத்தம் பருப்பு - 1 கப்
கடலைப் பருப்பு - 1 கப்
வெள்ளை எள் - 1/2 கப்
வரமிளகாய் - 25 (காரத்திற்கு ஏற்ப)
காஷ்மீரி வரமிளகாய் - 7 (நல்ல நிறத்திற்கு)
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
பூண்டு - 8 பல்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை விளக்கம்:
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, கருப்பு உளுந்தைச் சேர்த்து மிதமான தீயில் மணம் வரும் வரை வறுக்கவும். பொன்னிறமானதும் அதை ஒரு தட்டில் மாற்றவும். அடுத்து, கடலைப் பருப்பையும் அதேபோல் நிறம் மாற வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் வெள்ளை எள்ளை சேர்த்து படபடவென பொரியும் வரை வறுக்கவும். பின்னர் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலையைச் மொறு மொறுப்பாகும் வரை வறுத்துத் தனியாக வைக்கவும்.
மீதமுள்ள ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வரமிளகாய், காஷ்மீரி மிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வறுக்கவும். மிளகாய் கருகிவிடாமல் பார்த்துக் கொள்வது பொடியின் சுவைக்கு மிக முக்கியம். அதற்காகத்தான் எண்ணெய் சேர்த்து மிளகாயை வறுக்க வேண்டும். மேலும் எண்ணெய் சேர்த்து வறுக்கும் போது நெடியையும் தராது.
வறுத்த அனைத்துப் பொருட்களும் நன்கு குளிர்ந்த பிறகு, அவற்றை மிக்சர் ஜாரில் சேர்க்கவும். இதனுடன் தோலுடன் இருக்கும் 8 பூண்டு பற்களைச் சேர்த்து நன்கு மென்மையாகவோ அல்லது உங்கள் விருப்பப்படி சற்று கொரகொரப்பாகவோ அரைக்கவும்.
டிப்ஸ் & சேமிப்பு முறைகள்:
அரைத்த பொடியை உடனடியாக டப்பாவில் அடைக்கக் கூடாது. ஒரு அகலமான தட்டில் பரப்பி, சூடு ஆறிய பிறகு காற்றுப் புகாத டப்பாவில் அல்லது கண்ணாடி பாட்டிலிலோ சேமிக்கவும். இந்த முறையில் செய்தால் ஒரு மாதம் வரை பொடி அதன் மணம் மாறாமல் அப்படியே இருக்கும். சூடான இட்லி அல்லது மொறுமொறு தோசையுடன் நல்லெண்ணெய் கலந்து பரிமாறினால், தட்டில் எத்தனை இட்லி காலியாகிறது என்றே தெரியாது. சாதத்திற்கும் தேவைப்பட்டால் பிசைந்து நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு சாப்பிடலாம்.












Click it and Unblock the Notifications