திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 2: தலையில் பூ வைக்காதீர், பால் அருந்தாதீர்! ஆண்டாள் வகுத்த விதிகள்!
சென்னை: மார்கழி இரண்டாவது நாள் இன்று! பாவை நோன்பு இருப்போருக்கு சில கோட்பாடுகளை விதித்துள்ளார். அதில் செய்ய வேண்டிய 4 விஷயங்கள் குறித்தும் செய்யக் கூடாத 6 விஷயங்கள் குறித்தும் ஆண்டாள் கூறியுள்ளாள்.
மார்கழி மாதத்தில் தலையில் பூக்களை சூடக் கூடாதாம். மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாதவனுக்கே சொந்தம் என்கிறாள். இன்று படிக்க வேண்டிய பாசுரம் எது, அதன் பொருள் என்ன என்பதை பார்க்கலாம்.

திருப்பாவை பாடல் -2
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: பாவை நோன்பிருக்கும் பெண்களுக்காக ஆண்டாள் சில விரத முறைகளை வகுத்துள்ளாள். பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன, செய்யக் கூடாதது என்ன என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.
நாராயணனே கண்ணனாக பிறந்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! பரந்தாமனின் பாதங்களை அடைய வேண்டும் என்றால் நீங்கள் சில விரதங்களை கடைப்பிடிக்க வேண்டும். அதாவது நெய் உண்ணவே கூடாது, பால் குடிக்கக் கூடாது, அதிகாலையிலேயே குளித்துவிட்டு சுத்தமாக இருத்தல் வேண்டும். கண்களில் மை வைக்கக் கூடாது.
தலையில் பூக்களை வைக்கவே கூடாது. மார்கழியில் பூக்கும் பூக்கள் எல்லாம் அந்த மாதவனுக்கே சொந்தம். தீய செயல்களை நினைக்கக் கூடாது. சுடுச் சொற்களை பேசவே கூடாது. அது போல் புரணி பேசுதல் கூடாது. இயலாதவர்களுக்கு தங்களால் இயன்றவற்றை கொடுக்க வேண்டும். எந்த ஒரு செயலை செய்தாலும் அதற்கு கட்டுப்பாடும் ஒழுக்கமும் அவசியம் என்பதை இந்த பாடல் உணர்த்துகிறது.
திருவெம்பாவை பாடல்- 2
பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: அழகிய அணிகலன்களை அணிந்த தோழியே! இரவு பகல் பாராமல் எங்களுடன் உட்கார்ந்து பேசும் போது அண்ணாமலையார் மீது நான் கொண்ட அன்பு அளவிட முடியாதது என்றெல்லாம் பேசினாயே! ஆனால் இப்போது குளிக்க அழைத்தால் வர மறுத்துவிட்டு தூங்குகிறாய் என தோழிகள் கிண்டல் செய்கிறார்கள். அதற்கு தூங்கி கொண்டிருந்த அந்த தோழி, "இதென்ன பேச்சு! ஏதோ அயர்ந்துவிட்டேன். அதற்காக இப்படிய என்னை கிண்டல் செய்வீர்கள்?" என கேட்டாள். அதற்கு அந்த தோழிகள், அண்ணாமலையாரின் திருவடிகளை காண தேவர்கள் முயற்சித்து அவர்களால் முடியவில்லை. ஆனால் நம் வீட்டு முன்பே சிவபெருமான் காட்சி தருகிறார். அவரை காண வராமல் நீங்கள் தூங்குகிறாயே என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications