திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட்டை இனி வாட்ஸ்ஆப் மூலம் ஈஸியாக பெறலாமே! விண்ணப்பிப்பது எப்படி?
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இனி வாட்ஸ் ஆப் மூலம் தரிசன டிக்கெட் பெறும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் ரூ 300 தரிசன டிக்கெட்டுகளை பெற்று வந்த நிலையில் வாட்ஸ் ஆப் மூலம் எப்படி பெறுவது என்பதை பார்க்கலாம்.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். மேலும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள்.

இங்கு இலவச தரிசன முறை, ரூ 300 தரிசன முறை, ஆர்ஜித சேவைகள், திவ்ய தரிசனம் எனப்படும் நடைபயணம், விஐபி பிரேக் தரிசனம் மூலம் தரிசிக்கும் முறை என உள்ளது. இந்த முறைகளில் சீசனுக்கேற்ப சுவாமி தரிசனம் செய்யும் கால அவகாசம் மாறுபடும்.
ரூ 300 தரிசனத்தில் ஒரு மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை தரிசனம் செய்யலாம். அது போல் இலவச தரிசனம் மூலம் 20 மணி நேரம் கூட ஆகலாம். நடைப்பயண தரிசனமும் 5 முதல் 6 மணி நேரம் வரை எடுக்கும்.
இந்த டிக்கெட்டுகள் மாதந்தோறும் 21 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை வெளியிடப்படும். அதாவது கல்யாணோத்சவம் உள்ளிட்ட சேவைகள் ஒரு நாள், ஆர்ஜித சேவைகள் ஒரு நாள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு நாள், ரூ 300 தரிசன டிக்கெட் ஒரு நாள் என ஒவ்வொரு நாள் ஒவ்வொன்றுக்கு டிக்கெட் ரிலீஸாகும்.
அதாவது 3 மாதங்களுக்கு முன்பே ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் புக்கிங் தொடங்குகின்றன. அதில் ஒரு அக்கவுன்ட்டில் 6 டிக்கெட்டுகள் வரை புக்கிங் செய்யலாம். அது போல் எக்ஸ்ட்ரா லட்டு வேண்டுமானாலும் தனியே பணம் செலுத்திக் கொள்ளலாம்.
குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றை ஆவணமாக கொண்டு டிக்கெட் புக் செய்ய வேண்டும். அறைகளை புக் செய்ய அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு புக்கிங் ஸ்லாட் திறக்கப்படும்.
இது இன்டர்நெட் ஸ்பீடு இருந்தால் மட்டுமே சீக்கிரம் புக்காகும். இதனால் பலரால் சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை. எனவே அனைவரும் எளிதாக பயன்படுத்தக் கூடிய வாட்ஸ் ஆப் மூலம் திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கான டிக்கெட் எடுத்து கொள்ளலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
9552300009 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலம் ஹாய் என அனுப்ப வேண்டும். பிறகு EN என டைப் செய்து அனுப்பினால், ஆங்கில மொழி தேர்வு செய்யப்படும். தெலுங்கு தெரிந்தவர்கள் அப்படியே தொடரலாம். பிறகு உங்களுக்கான தரிசன சேவையை தேர்வு செய்து டிக்கெட் புக் செய்து ஆன்லைனில் பணம் செலுத்தி டிக்கெட்டை பெறலாம். இதற்கு 5 நிமிடம் கூட ஆகாது. இந்த எளிய முறை திருப்பதி பக்தர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications