Vaikasi Visagam: வைகாசி விசாகம் 2026! திருவண்ணாமலையில் இன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது?
திருவண்ணாமலை: வைகாசி மாதம் முருக பெருமான் அவதரித்த இந்த மாதத்தில் வரும் பவுர்ணமியும் விசாக நட்சத்திரமும் வரும் நாளில் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வதுண்டு. அந்த வகையில் இன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது என்பதை பார்க்கலாம்.
நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி கிரிவலம் வருவதற்கான தேதி மற்றும் உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், நடப்பு ஆண்டின் வைகாசி விசாக பௌர்ணமி கிரிவலத்திற்கான சிறப்பு விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
வைகாசி விசாக பௌர்ணமி கிரிவலம்
மே மாத பௌர்ணமி திருநாளானது, முருகப்பெருமான் அவதரித்த 'வைகாசி விசாக' நாளாக இணைந்து வருகிறது. முருகப்பெருமான் தனது அருளால் அருணகிரிநாதரின் வாழ்க்கையை மாற்றி, திருப்புகழ் பாட அருளிய திருத்தலமான திருவண்ணாமலையில், இந்த நாளில் கிரிவலம் வருவது அளவற்ற புண்ணிய பலன்களை தரும் என ஆன்மீகப் பெரியோர்கள் தெரிவிக்கின்றனர்.
வைகாசி பௌர்ணமி கிரிவல நேரம்:
பௌர்ணமி நாள்: 2026 மே 31, ஞாயிற்றுக்கிழமை
பௌர்ணமி திதி துவக்கம்: மே 30, பகல் 12.55 மணி
பௌர்ணமி திதி நிறைவு: மே 31, பகல் 02.45 மணி
கிரிவலம் செல்ல உகந்த நேரம்: மே 30 (சனிக்கிழமை) பகல் 12.58 மணி முதல் மே 31 (ஞாயிற்றுக்கிழமை) பகல் 02.50 மணி வரை.
வழிபாட்டுப் பலன்கள்
இந்த வைகாசி விசாக நாளில் அண்ணாமலையாரை வலம் வந்தால் சிவபெருமானின் அருளோடு முருகப்பெருமானின் ஆசியும் கிட்டும். ஞானம், மன அமைதி, தொழில் விருத்தி, நீண்ட ஆயுள் ஆகியவை கிடைப்பதோடு, முன்ஜென்மப் பாவங்கள் மற்றும் கடுமையான தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

சனிக்கிழமை கிரிவலத்தின் தனிச்சிறப்பு
இந்த மாத பௌர்ணமி கிரிவல நேரம் சனிக்கிழமையன்று (மே 30) தொடங்குவதால், சனிக்கிழமை கிரிவல பலன்களும் பக்தர்களுக்குக் கூடுதலாகக் கிடைக்கும்.
சனி தோஷ நிவர்த்தி: ஜாதகத்தில் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டகச் சனி போன்ற தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமை கிரிவலம் வந்தால் தோஷத்தின் தாக்கம் குறைந்து மனதில் அமைதி ஏற்படும்.
ஆரோக்கிய மேம்பாடு: நீண்டகால உடல்நலக் கோளாறுகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். நவகிரக தோஷங்கள் நிவர்த்தியாவதுடன், வியாபாரத்தில் உச்ச நிலையை அடையவும் இது வழிவகுக்கும். கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களை தரிசிப்பதன் மூலம் உடலும் மனமும் தூய்மை பெறும்.
திருவண்ணாமலையில் ஆண்டு முழுவதும் எந்நேரமும் கிரிவலம் வரலாம் என்றாலும், லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் இத்தகைய விசேஷ நாட்களில், பக்தர்களின் வசதிக்காகவே இந்த உகந்த நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் இந்த நேரங்களை அறிந்து தங்களின் ஆன்மீகப் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications