விஜயதசமி..மதுரை மீனாட்சி அம்மனின் மனதை குளிர்வித்த 108 வீணை இசை கலைஞர்கள்
விஜயதசமியை முன்னிட்டு வீணை வழிபாட்டு மன்றத்தின் சார்பில் 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது
மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டுக்காக நடத்தப்பட்ட இந்த வீணை இசை வழிபாட்டில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர்.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரையின் நடுவிலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. ஆன்மீகம், வரலாறு, கலை, பண்பாட்டு அடையாளங்களுடன் மீனாட்சி கோயில் இன்றளவும் திகழ்கிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா
மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரை திருவிழா தொடங்கி, வைகாசி வசந்த உற்சவம், ஆடி முளைக்கொட்டு, ஆவணி மூலத்திருவிழா, புரட்டாசி நவராத்திரி, மாசி திருவிழா, பங்குனி உத்திரம் என 12 மாதங்களும் திருவிழா கோலம்தான். தினசரியும் பக்தர்கள் வந்து மீனாட்சி அம்மனை வழிபட்டு வருவது வழக்கம்.

நவராத்திரி உற்சவம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் நவராத்திரி உற்சவ விழா கடந்த 26ம் தேதி தொடங்கியது. நவராத்திரியையொட்டி சுவாமி சன்னதி 2ம் பிரகாரத்தில் கொலு அரங்குகள் அமைக்கப்பட்டு அங்கு மீனாட்சி அம்மன் தினசரி பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார். கோவிலில் பல்வேறு கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வந்தனர்.

108 வீணை இசை கச்சேரி
தினசரியும் மாலையில் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளினார். கடைசி நாளில் மகிஷாசூரமர்த்தினி கோலத்தில் அருள்பாலித்தார். இந்நிலையில் நவராத்திரி உற்சவத்தின் நிறைவு விழாவான விஜயதசமியை முன்னிட்டு கோவில் வளாகத்தில் வீணை வழிபாட்டு மன்றத்தின் சார்பில் 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வந்திருந்த இசைகலைஞர்கள் பங்கேற்று பல்வேறு பக்தி பாடல்களை இசைத்து சரஸ்வதிக்கு வழிபாடு நடத்தினர்.

மீனாட்சி அம்மனுக்கு இசை வழிபாடு
வீணை வழிபாட்டின் போது மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் பாடல்கள் பாடப்பட்டன, விநாயகர் பாடல் உட்பட 22 பாடல்கள் வீணை இசை வழியே இசைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மதுரை, சென்னை, நாமக்கல், திண்டுக்கல், ஆகிய பகுதிகளில் இருந்து மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மன மகிழ்ச்சி
இந்த வீணை இசைக்கச்சேரியில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சி என்று இந்த கச்சேரியில் பங்கேற்றவர்கள் கூறினர். இதுபோல வருடம் தோறும் நடைபெற வேண்டும் நாங்கள் பங்கேற்று மீனாட்சி அம்மனை இசையால் வழிபட வேண்டும் என்றும் கூறினர். விஜயதசமி நாளில் இசைக்கப்பட்ட வீணை இசையால் மீனாட்சி அம்மனை வழிபட்டது மதுரை மக்களை மட்டுமல்லாது வெளிநாட்டினரையும் கவர்ந்தது.












Click it and Unblock the Notifications