திருப்பதி அலிபிரி நடைபாதையில் மீண்டும் உலா வரும் சிறுத்தைகள், கரடிகள் .. தேவஸ்தானம் அறிவுறுத்தல்
திருப்பதி: திருமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தைகள், கரடிகள் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். மலைக்கு நடந்து செல்லும் பக்தர்கள் கூட்டமாக செல்லுமாறு தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. இதற்குமுன் மலைப்பகுதியில் சுற்றித் திரிந்த 6 சிறுத்தைகள் பிடிக்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய பேருந்து, கார், பைக்குகள் மூலம் திருப்பதியில் இருந்து பக்தர்கள் செல்லும் நிலையில் ஸ்ரீவாரி மெட்டு, அலிபிரி மலைப்பாதை வழியாகவும் பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதி மலைப்பாதையில் கடந்த சில மாதங்களாவே பக்தர்கள் மீது சிறுத்தைகள் தாக்குதல் அதிகரித்து வருகிறது. சிறுத்தை தாக்கியதில் 4 வயது சிறுவன் சவுசிக் காயங்களுடன் மீட்கப்பட்டார். நெல்லுரை சேர்ந்த 6 வயது சிறுமி லட்ஷிதா சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து கடந்த 6 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த ஜூன் 24ம்தேதி முதலில் பிடிபட்ட சிறுத்தை மட்டும் பாக்ராப்பேட்டை வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.
இதில், லட்ஷிதாவின் மனித மாமிசம் சாப்பிட்டதற்கான மரபணு உள்ளதா? என்றும், லட்ஷிதாவின் மரபணுவுடன் ஒத்துபோகிறதா? என்பதையும் அறிந்து அதனை தனிமைப்படுத்த 2 சிறுத்தைகளுக்கும் ரத்தம், நகம், முடி சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், கரடியும் அவ்வப்போது நடைபாதையில் வருகிறது.
இதனைத் தொடர்ந்து திருப்பதியில் பாதயாத்திரை செய்யும் பக்தர்களுக்கு பாதுகாப்பிற்காக கைத்தடி வழங்கப்பட்டது. திருப்பதி மலைப் பாதையில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பாத யாத்திரை செல்ல அனுமதி அளித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது.
இதனிடையே அலிபிரி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பது கேமராவில் பதிவாகி உள்ளது. இதனையடுத்து நடைபாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருப்பதி அலிபிரி நடைபாதையில் உள்ள நரசிம்மர் கோவில் பகுதியில் கரடி ஒன்று சுற்றிக்கொண்டிருந்துள்ளது. இதனை அவ்வழியாக சென்ற பக்தர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். அதே சமயம் அலிபிரி மலைப்பகுதியில் பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் பாதைகளில் சிறுத்தை, கரடி, முள்ளம் பன்றி போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருப்பது வனத்துறையினர் பொருத்தி இருக்கும் கேமராக்களில் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
வன விலங்குகளின் நடமாட்டத்தை அடுத்து ஏழுமலையானை பாதயாத்திரையாக தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பதி அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தைகள், கரடிகள் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.
மலைக்கு நடந்து செல்லும் பக்தர்கள் கூட்டமாக செல்லுமாறு தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. இதற்குமுன் மலைப்பகுதியில் சுற்றித் திரிந்த 6 சிறுத்தைகள் பிடிக்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications