Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடி அமாவாசை.. சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள்.. அன்னதானம் தர ஹைகோர்ட் கிளை அனுமதி

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: ஆடி அமாவாசை தினத்தையொட்டி சதுரகிரி மலையில் ஆகஸ்ட் 16ஆம் தேதி அன்னதானம் வழங்க சென்னை ஹைகோர்ட் மதுரை கிளை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. பிளாஸ்டிக் பேப்பர் பயன்படுத்த கூடாது என்ற நிபந்தனையுடன் அன்னதானம் வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய நாட்களில், நாம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்து ஆத்மார்த்தமாகப் பிரார்த்தனை செய்து வழிபட்டால், 12 வருடங்கள் தர்ப்பணம் செய்யாமல் இருந்த பாவங்கள் நீங்கும் என அறிவுறுத்துகிறது தர்ம சாஸ்திரம்.

Aadi Amavasai 2023: Madurai branch of Madras High Court allowed to give Annadhanam in Sathuragiri

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ளது சதுரகிரி மலை. இந்த மலையில் சுந்தர மகாலிங்கம் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். அதேசமயம் மழை நாட்களில் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

இந்த நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல 6 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பக்தர்கள் செல்லலாம் என மாவட்டம் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கோவிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. மலைப்பகுதிக்கு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் மலையேறி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சதுரகிரிக்கு வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

இதனிடையே விருதுநகர் பெரியசாமி தெருவைச் சேர்ந்த ஜனார்த்தனன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இங்கு அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் அதிகளவில் வருவது வழக்கம். ஆடி அமாவாசையின் போது லட்சணக்கான மக்கள் வருகை தருவர். மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து மலை மேல் அமைந்திருக்கும் கோயிலுக்கு சென்றடைய வேண்டும்.

வனப்பகுதிக்குள் கோயில் அமைந்திருப்பதால் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ல் மலைப் பகுதியில் அமைந்திருக்கும் தனியார் மடங்களில் அன்னதானம் வழங்க தடை விதித்து, கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தாண்டு ஆடி அமாவாசையை ஒட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில்ஆகஸ்ட் 14 முதல் 16ஆம் தேதி வரை 3 நாட்கள் பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மலைப் பகுதியில் தனியார் மடங்களில் அன்னதானம் வழங்க தடை விதிக்கப்பட்டு கோயில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மடங்களில் அசைவ உணவு சமைக்கின்றனர். நன்கொடை வசூலிக்கின்றனர். விளம்பரம் செய்கின்றனர். வனப்பகுதியை மாசுபடுத்துகின்றனர். இதனால் அன்னதானத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து 7 கி.மீட்டர் தூரம் நடக்க வேண்டும். பக்தர்கள் ஒவ்வொருவரும் குடிநீர், உணவு கொண்டுச் செல்ல முடியாது. எனவே பக்தர்களின் நலன் கருதி ஆடி அமாவாசை நாட்களில் அன்னதானம் வழங்க அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தனது உத்தரவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது இந்து மதத்தின் ஒரு அங்கம். புனிதமான காரியமும் கூட. அப்படியிருக்கும் போது அன்னதான மடங்கள் செயல்பட அனுமதி மறுப்பது ஏன்? அன்னதானம் வழங்குவதை ஏன் முறைப்படுத்தக்கூடாது? கோயில் விழாக்கள் பக்தர்களின் பங்களிப்புடன் நடைபெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆடி அமாவாசையை ஒட்டி மலையிலுள்ள சதுரகிரி அருள்மிகு சுந்தர மகாலிங்க சுவாமி திருக்கோயிலுக்கு செல்லும் வழியில் ஆகஸ்ட் 16ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை பக்தர்களுக்கு நிபந்தனையடன் அன்னதானம் வழங்கலாம் என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+