நோய் பயம் நீக்கும் ஆடிக்கிருத்திகை.. திருத்தணியில் தெப்பத்திருவிழா.. ஆக.9ல் திருவள்ளூரில் விடுமுறை
சென்னை: முருகனுக்கு உகந்த ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு அறுபடை வீடுகளில் 5ஆம் படை வீடான திருத்தணி சுப்ரமணியர் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகள் சுமந்து வந்து வள்ளி, தெய்வானை சமேத முருகனை தரிசனம் செய்வார்கள். ஆகஸ்ட் 9ஆம் தேதி ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் சிறப்பானது. தட்சிணாயண புண்ணிய காலத்தில் வரும் கார்த்திகையும், உத்தராயண புண்ணிய காலத்தில் வரும் தை கிருத்திகையும் முருகன் ஆலயங்களில் சிறப்பாக கொண்டாப்படுகிறது.

ஆடி கிருத்திகை தினமானது சூரியன் தென் திசை நோக்கி பயணிக்கும் தட்சிணாயண காலத்தின் தொடக்கத்தில் வருகிறது. இக்காலம் பகல் வெளிச்சம் குறைந்து இரவின் இருள் நீடித்திருக்கும் பருவத்தின் தொடக்க காலமாகும். எனவே மக்கள் தங்களின் வாழ்வில் துன்பம் எனும் இருள் அதிக காலம் நீடிக்காமல் இருக்க முருக பெருமானை வேண்டுவதால் அவர்கள் வாழ்வு ஒளிமயமாக இருக்க அருள் புரிவார் முருகன்.
ஆடிக்கிருத்திகை நாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். முருகப்பெருமானில் அறுபடை வீடுகளிலும் தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் ஆலயங்களிலும் ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மழைக்காலத் தொடக்கமான தட்சணாயணம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாக உள்ளது எனவேதான் ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்து கடவுளரையும் வேண்டி செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப்படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.
ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் திருத்தணி முருகன் கோயிலில், ஆடிக்கிருத்திகைத் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடிக் கிருத்திகை திருவிழா வரும் திங்கட்கிழமை ஆடி அஸ்வினி நட்சத்திரத்துடன் தொடங்குகிறது.
ஏராளமான முருக பக்தர்கள், பால் காவடி, மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி எடுத்து வந்து முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்.
செவ்வாய்கிழமையன்று ஆடி பரணி விழாவை முன்னிட்டு முருகன், சிறப்பு அலங்காரத்தில் காட்சிக் அளிப்பார். மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி தங்க கவசம், வைர கீரிடம் பச்சைகல் மரகத மாலை, அணிவிக்கப்படுவது சிறப்பு அம்சம்.

ஆடிக்கிருத்திகை நாளான புதன்கிழமை தொடங்கி 3 நாட்கள் தெப்பத்திருவிழா நடைபெறும். மாலை 7 மணி அளவில் காவடி மண்டபத்தில் இருந்து வள்ளி தெய்வானை முருகப்பெருமான் உற்சவர் தேர் வீதி வலம் வந்து படிக்கட்டுகள் வழியாக மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை குளத்திற்கு ஊர்வலமாக சுவாமி எடுத்து சென்று சரவணப்பொய்கையில் உள்ள அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளுவார்கள்.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் 9ம் தேதி புதன்கிழமை நடைபெறவிருக்கும் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு 9ம் தேதி செயல்படவேணடும். இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் பொருட்டு 26ம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications