ஆடி மாதம் அம்மன் கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா.. இந்து சமய அறநிலையத்துறை அசத்தல் அறிவிப்பு
சென்னை: ஆடி மாதம் பிறக்கப்போகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து ஆன்மீக சுற்றுலா பயணிகளுக்காக ஒரு நாள் ஆடி, அம்மன் கோயில் சுற்றுலா திட்டத்தை வரும் 17ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
இந்த திட்டத்தில் நடப்பாண்டு சென்னை, மதுரை, திருச்சி தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்து பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஆன்மீக பயணிகள் தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆடி தெய்வங்களுக்கான மாதமாகக் கருதப்படுகிறது. ஆடிப் பிறப்பிலிருந்து ஆடி இறுதி வரை ஆடியின் ஒவ்வொரு நாளும் தெய்வீகச் சடங்குகள் அனுசரிக்கப்படுகின்றன. சாஸ்திரங்கள் இதை சக்தி வழிபாட்டுக்கான மாதம் என்கின்றன. ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கான கொடைத் திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் தொடங்குகின்றன.
ஆடி மாதம் கிராம தேவதைகளுக்கான மாதம். ஆடி மாதம் கொடைத் திருவிழாவில் அம்மனைக் குளிர்வித்தால்தான் கிராமம் செழிக்கும் என்னும் நம்பிக்கையால் கிராமத் திருவிழாக்கள் பாட்டும் கச்சேரியுமாக வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. இத்திருவிழாவை ஒட்டிக் கூழ் ஊற்றும் சடங்கும் நடைபெறுகிறது. சென்னையில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்கள் மட்டுமல்லாது தெருவெங்கும் உள்ள அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றி வழிபடுவார்கள்.
தமிழ்நாட்டில் உள்ல சுற்றுலா தலங்களுக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை வரவழைத்து சுற்றுலா தொழில்களை மேம்படுத்த சுற்றுலாத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து ஆன்மீக சுற்றுலா பயணிகளுக்காக ஒரு நாள் ஆடி, அம்மன் கோயில் சுற்றுலா திட்டம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த திட்டத்தில் நடப்பாண்டு சென்னை, மதுரை, திருச்சி தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்து பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஆன்மீக பயணிகள் தரிசனம் செய்யும் வகையில் ஒரு நாள் ஆடி அம்மன் கோயில்கள் சுற்றுலா திட்டம் வரும் 17-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
இந்த ஒரு நாள் அம்மன் சுற்றுலா திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள கோயில்களிலும் இந்து சமய அறநிலையத்துறை, கோயில் நிர்வாக அதிகாரிகள் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணைந்து பயணிகளை வரவேற்று, கோயில்களுக்கு அழைத்து செல்வார்கள். அவர்களுக்கு சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டு ஆடி மாதம் அம்மன் கோவில் சுற்றுலா, புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோவில் சுற்றுலா, நவராத்திரி சமயத்தில் அம்மன் கோவில்களுக்கு சுற்றுலாவிற்கு இந்து சமய அறநிலையத்துறையும் தமிழ்நாடு சுற்றுலா துறையும் ஏற்பாடு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல இந்த ஆண்டும் ஆன்மீக சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆன்மீக சுற்றுலா செல்ல விரும்பும் பக்தர்கள் www.ttdconline.com என்ற இணையதளம் மூலமாகவும், மதுரை அழகர் கோயில் ரோட்டில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 63806 99288, 91769 95841 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications